எதிரி என்று வெறுக்காமல் ஒருவர் வீரத்தைப்
பலகோணங்களில் பரிசீலிப்பதே வீரம்
இராணுவ வாழ்வின் ஒரு செயலின் முடிவைவிட செயலாக்கிய திறன் மிகவும் பாராட்டப்படுகிறது. வெற்றிதோல்விகளை நிர்ணயிக்கும் போர்முனைப் பகுதிகளில் கூட வெட்கப்படத்தக்க வெற்றிகளும், பெருமைப்படத்தக்க தோல்விகளும் ஏற்படுவதுண்டு. 1971-ஆம் வருடப் போர்க்களத்தில் நமது இலக்கை நோக்கி வந்த பாகிஸ்தானியப் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்ட பொழுது மறுநாள் காலையில் பாகிஸ்தானியப் படைத் தளபதி தானே முன்னின்று அப்படையை நடத்தியதையும் , அதில் படைத் தளபதி நமது பாதுகாப்பு நிலைக்கு மிக மிக அருகில் கொல்லப்பட்டதையும் அறிய நேரிடுகிறது.
அந்த வீரத்தைப் பாராட்டிய இந்தியத் தளபதி , பாகிஸ்தானியத் தளபதியின் செயலை வானாளவப் புகழ்ந்ததுடன், அவருக்குப் பாகிஸ்தானிய அரசாங்கம் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என்று ஒரு கடிதத்துடன் அந்தப் பாகிஸ்தானியத் தளபதியின் உடலை அவர்களுக்கு அனுப்புவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தானிய அரசாங்கம் அந்தத் தளபதிக்கு பாகிஸ்தானிய மிகப்பெரும் விருதான நிஷானே பாகிஸ்தான் ( நமது பரம் வீர் சக்ராவுக்கு நிகர் ) வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட போரில் இருதரப்புமே வேற்றி பெற்றதாகத்தான் கருதப்படுகின்றது, எதிரி என்று வெறுக்காமல் ஒருவர் வீரத்தைப் பல கோணங்களில் பரிசீலப்பதே உண்மை வீரம்.
கர்னல்.பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )