செவ்வாய், 16 ஏப்ரல், 2019

                                                                       கடை திறப்பு.

                        1972 ம் ஆண்டு,ஜனவரி 25 ம் நாள்.
             திரிபுரா மாநிலத்தின் கடைக்கோடி ரயில்  நிலையமான "தர்மாநகர். "இராணுவ வண்டிகளும் போர் வீரர்களுமாக கூட்டம் அலை மோதுகிறது.இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து ஒரு மிலிட்டரி ஸ்பெஷல் வண்டி புறப்படப் போகிறது
.



                      அதோ ! போர்க்கள இராணுவச்  சீருடையில் கையில் "ஸ்டென் கன்" என்று சொல்லப்படும் அதிகாரிகளுக்கான ஆயுதத்துடன் விறைப்பாக டக்..... ....டக்  என்று வீறுகொண்ட சிங்கம்போல் நடந்து வருகிறாரே  அவர்தான் இந்த மிலிட்டரி ஸ்பெஷல் வண்டியின் கமாண்டர்.

                            காப்டன் கணேசன் ! ! !



           என்ன ! நண்பர்களே ! ஆச்சர்யமாகஇருக்கிறதா? ?
இராணுவப் பொறியியல் கல்லூரியில் மூன்றாண்டுகாலப் பட்டப் படிப்பாக
B.Tech படித்துக் கொண்டிருந்த இவர் இங்கே எப்படி.........என்று வியப்பாக இருக்கிறதல்லவா ?



                   வாழ்க்கையென்னும் காணொளியை  சற்றே பின்னோக்கிப் பாருங்கள்.
             1971 ம்  ஆண்டு மார்ச் மாதம் இந்தியதுணைக்கண்டத்தைப் புரட்டிப்போட்ட சில சம்பவங்கள்.அண்டை நாடானாப் பாகிஸ்தானில் நடந்த
நாடாளுமன்றத் தேர்தலும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும்  கிழக்குப் பாகிஸ்தானின் ஷேக் முஜிபூர் ரஹ்மானை தன்னிகரற்ற தலைவனாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது.இதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆளும் பாகிஸ்தானிய இராணுவம் நாடு முழுவதும் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது.முடிவாகப் போர் இந்தியாவிற்குள் திணிக்கப்பட்டது.




             ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே உலகை ஆண்ட இந்தியத்திருநாடு இதை மிக சாதுர்யமாக எதிர்கொண்டது.

                             ஏராளமான இராணுவத்தினர் பலவிதமானப் பயிற்சி களுக்காக
பல பயிற்சி தளங்களில் இருந்தனர்.முதல் கட்டமாக பயிற்சிகள் தற்காலிக மாக நிறுத்தப்பட்டு எல்லோரும் எல்லைப்புறப் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

                             காப்டன் கணேசன் திரிபுரா மாநிலத்தில் அகர்த்தலாவுக்கு அருகில் முகாமிட்டிருந்த 4 Engineer Regiment என்ற படைப்பிரிவிற் க்கு 01 November 1971 வந்து சேர்ந்தார்.

                    இந்தியத் திருநாட்டின் இராணுவம் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நாட்டின் மேற்கு,மற்றும் கிழக்கு எல்லைப்புறங்கள் முழுவதும் பரவி எந்தநிமிடத்திலும் போரை எதிநோக்கிக் காத்திருந்தது.

                           பாகிஸ்தானின் Military Administrator General Yahya Khan 01 December 1971 போரை ஆரம்பித்தார்.கிழக்குப் பாகிஸ்தானின் முப்புறமும் (ஒரு புறம் கடல் )பரவிப் பாய்வதற்கு தயாராயிருந்த இந்திய இராணுவம் மின்னல்  வேகத்தில்செயல்பட்டது.அகர்தலா எல்லையில் போரை ஆரம்பித்த கணேசனின் படைப்பிரிவின ர் கொமில்லா -டாக்கா சாலையை chandpur என்ற இடத்தில் துண்டித்து Mynamatti என்றகண்டோன்மென்டை தனிப்படுத்தினர்.அந்நிலையில் அவர்கள் உடனடியாக Brahmanbaria என்ற நகருக்குள் அதிரடியாக நுழைய உத்திர விடப்பட்டது.

                அங்கிருந்து மற்றொரு படைப்பிரிவினர் ஹெலிகாப்டரில் தூக்கப்பட்டு டாக்காவுக்கு அருகில் போரிட ஆயத்தமானார்கள்.அவர்களுக்கு உதவ கணேசன் படைப்பிரிவினர் 130 mm Artillery gun ஐ பொறியாளர்களின் மிதவையில் ஏற்றி Megana என்ற மாநதியின் வழியாக Narasingdi என்ற கிராமத்திலிறக்கி அங்கிருந்து குண்டு வீசினார்கள்.குண்டு டாக்கா விமானதளத்தில் விழுந்தது.






                        இந்திய இராணுவம் டாக்காவை நெருங்கிவிட்டார்கள் என்றறிந்த
பாகிஸ்தானிய படைத்தளபதி Lt Gen A A K Niyazi சரணடைய ஒப்புக்கொண்டார்.




                     16 December1971 மாலை 4.00 மணியளவில் 93,000 பாக் வீரர்கள் இந்திய இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

                      அடுத்த சில தினங்களுக்குள் பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடு செயல்பட ஆரம்பித்துவிட்டது.

                       இந்தியாவின் மேற்கு எல்லைப்புறத்தில் போர் கடுமையாக நடந்திருந்தது.கிழக்கிலிருந்து சில படைப்பிரிவுகள் உடனடியாக இந்திய எல்லைக்குள் வர உத்திர விடப்பட்டது.

                   இதோ !  முதல் இராணுவ அணியாக கணேசனின் பபிடைப்பிரிவினர் இந்திய எல்லைக்குள் வரவும் பிறகு அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் போகவும் உத்திர விடப்பட்டது.

               25 January 1972 கணேசனின் முதல் மிலிட்டரி ஸ்பெஷல் புறப்பட்டது.மிலிட்டரி வண்டிகள் ஏற்றப்பட்ட ரயில் வேகன்களின்மேல் உட்கார்ந்து கொண்டு உலகை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு கணேசன் பயணித்தார்.



                       போர்!  போர்!!போர்!!! பண்டைய மாமன்னர்களின்  போர்ப்பறை காதில் ஒலிக்க  செயங்கொண்டரின்  " கலிங்கத்துப் பரணி"கணேசனின் கற்பனையிலோடுகிறது.

                    கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டரின் கற்பனைவளம் இனிக்க இனிக்க ஊரிச் சுரந்து களிப்பூட்டுகின்ற பகுதி " கடை திறப்பு ".படையெடுத்துச் சென்றவர்கள் நாடு திரும்புகிறார்கள்.அவர்கள் வெற்றி மிடுக்கோடும் புகழோடும் வருகின்றார்கள்.அவர்களுடைய செயலாண்மையை நாடு முழுவதுமே வியந்து போற்றுகிறது.வழிநெடுக மக்கள் வீரர்களுக்கு வரவேற்பளித்து வாழ்த்துகின்றனர்.புலவர்கள் போற்றி பாடுகின்றனர்.

                   இந்த ஆரவாரமான உற்சாகத்தில் கலந்துகொள்ளாமல் அவ் வீரர்களின் காதலியர் மட்டும் ஊடிச்சினந்து ஒதுங்கி நிற்கின்றனர்.பிரிவென்னும் கொடிய வேதனைத்தீயிலே வெதும்பி வாடிய அவர்களின் உள்ளத்திலே வரும் வீர மறவரை வரவேற்கும் தன்  முனைப்பு  ஏற்படவில்லை.

                  மறுநாள் 26 January 1972 மிலிட்டரி ஸ்பெஷல் வண்டி ஓடிக்கொண்டிருக்க குடியரசு தின நிகழ்வுகளை மேடை போன்ற மிலிட்டரி வண்டிமேல் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த கணேசன் மனதில் கலிங்கத்துப் பரணி நிகழ்வுகளும் கலக்கிறது.

                 பெற்ற தாயை இழந்துவிட்டார்.குடும்ப சூழ்நிலை காரணமாக தம்பிக்குத் திருமணம் செய்வித்து ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.மகிழ்வற்ற சூழ்நிலையில் அண்ணன்கள் திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.சென்ற இரண்டு மூன்று மாதமாக கணேசனின் நலன் நாடி யாரிடமிருந்தும் ஒரு கடிதம் கூட கிடையாது.

                     இந்நிலையில் கணேசன் போருக்குச் சென்றதும் யாருக்கும் தெரியாது.பாவம் ! !அவருக்கு யார் கடைதிறப்பார்கள் ?திருமணம் ஆகாதவர்
வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க யாருமில்லை.

                            கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டபொழுது அவரது உடைமைகளை பெட்டியில் பூட்டி ஒரு கடிதத்துடன் அந்த சாவியை ஒரு நண்பரிடம் கொடுத்து ஒருசமயம் நான் போர்க்களத்திலிருந்து திரும் பாவிட்டால் கடிதத்தைப் பிரித்துப் படியுங்கள்.அதில் எழுதியுள்ளபடி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

                     இதோ !! போர்க்களம் கண்டு திரும்பிக்கொண்டிருக்கிறார்.தன்னிரக்கம் கொண்டு தாறு மாறாக அவர் வாழ விரும்பவில்லை.இழப்பதற்கு ஏதுமில்லை என்று வாழ முற்பட்டால் தான் ஏதும் பெறுவதற்கும் தகுதியற்றவனாக ஆகிவிடக்கூடும் என்பதை அவர் அறிவார்.

                  காலம் அவரை தாலாட்டியது.யாருமே எதிர் பாராத திசையில் யாராலும் சாதிக்கமுடியாத  அளவு அவரது வாழ்க்கை திசைமாறியது.பல நண்பர்கள் எப்படி சாதித்தீர்கள் ?  யார் முன்னுதாரணம் ? என்று கேட்கிறார்கள்.

                               நான் மனமே கோவில்; மன சாட்சியே தெய்வம் என்ற கோட்பாடுட ன் முன்னோக்கி நடக்கிறேன்.முன்னுதாரணம் தேடுவதில்லை.

              I don't seek presidence;But I set presidence.

                          கணேசனின் சாதனைகளில் ஒன்றாக சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்கா ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
                 பார்த்தோர் புகழும் கல் தூணை நீங்களும் பார்க்கலாம்.










          

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

                                                யாருக்காக அழுதேன்    ?
                     
                 மனித மனத்தின் வெளிப்பாடுகளில் கண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.சொல்லால்  விளக்கமுடியாத உணர்வுகளை கண்ணீர் வெளிப்படுத்திவிடும்.

           நான் கண்ணீர் விட்ட நாட்களைப்பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.......கிராமத்தில் விவசாய குடும்பத்தில் அண்ணன் ,தம்பி ,அக்காள் ,தங்கை என ஏழு பேர்களுக்கிடையில் பிறந்து வளர்ந்ததால் சண்டை சச்சரவுகளுக்கு குறை வில்லை.



                 
                         நாலைந்து வயது சிறுவனாக இருக்கையில் பாட்டி கூப்பிட்டு ஓடிப்போய் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் அப்பா,அம்மாவிடம் தாத்தா இறந்து போய்விட்டார் என்று  சொல்லி அழைத்து வா என்கிறார்.ஒரே ஓட்டமாக வாய்க்கால்,வரப்புகள் வயல்கள் என்று ஓடி அவர்களை அழைத்துக்  கொண்டு வழியில் கொஞ்சம் தர்ப்பையையும் ( நாணல் )பறித்துக் கொண்டு வந்தேன்.தாத்தாவின் காரியம் முடிந்தது.யாரும் பெரிதாக அழுது புரளவில்லை.

                சில நாட்கள் சென்று உடல் நலமில்லாமல் இருந்த பாட்டியிடம் அம்மா அழைத்துச்சென்று,அத்தை,உன்  பேரனை மிகவும் வாலுத்தனமான இவனை ஆசிர்வதியுங்கள்  என்கிறார்.வீட்டில் எப்பொழும் ஆடம் பிடிப்பதால் ,பாட்டியிடம்,அப்பாவிடம் நிறைய அடிவாங்கியிருக்கிறேன்.

                 பாட்டி,"புத்தியாய் இருந்து பிழைத்துக்கொள் " என்கிறார்.சில வினாடிகளில் இறந்துபோய்விட்டார்.அப்பொழுதும் வேடிக்கை பார்த்தேனே யொழிய பெரிதாக அழவில்லை.

                     1958 March S S L C  தேர்வு சமயத்தில் அம்மா தீராத காச நோய் காரணமாக தஞ்சாவூரில் மருத்துவ மனையிலிருந்தார்.வீட்டில் நானும் இரண்டு தம்பிகள் ஒரு தங்கை மற்றும் அப்பா.

                    காலை 4.00 மணிக்கு எழுந்து சாதமும் ரசமும் செய்துவிட்டு காலைத்தேர்வுக்குப் படித்துவிட்டு  3.கி.மீ.தூரத்திலிருக்கும் நன்னிலம் உயர்நிலைப் பள்ளிக்கு ஓடுவேன்.வழியில் அப்பா ஹோட்டலில்  இட்லி பொட்டலம் வாங்கிக் கொடுப்பார்.

                     காலைத்தேர்வு எழுதிவிட்டு பள்ளிக்குப் பின்னாலிருக்கும் மதுவனேஸ்வரர் கோவிலுக்குப்போய் தனிமையி லமர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு மதிய  தேர்வுக்குப் படிப்பேன்.அப்பொழும் கூட தன்னிறக்கம் கொண்டு அழவில்லை.

          S S L C தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் அது பெரிதாக என்னைப் பாதிக்கவில்லை.மற்ற மாணவர்கள் மேற்படிப்புக்கு ஓடிக்கொண்டிருக்கையில் நான் அமைதியாக வீடு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்,சில நாட்களில் அண்ணன் வந்து T C ,S S L C Book வாங்கி வந்தாயா என்று கேட்டபிறகே அவற்றை வாங்கி வந்தேன்.

                               அண்ணனின் வழிகாட்டலில் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னீகில் சேர்ந்து மூன்றாண்டுகால ஹாஸ்டல் வாழ்வு  முடிந்து பட்டுக்கோட்டையில் P W D Superviser  வேலையில் சேர்ந்தேன் .

                          இரண்டாண்டுகளில் மெலட்டூர் வெட்டாற்றின் குறுக்கே Regulator கட்டும் வேலைக்கு வந்தேன் .பணம் சம்பாதிக்கவேண்டும் பெரிய வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசை சிறிதும் இல்லாததாலும் லஞ்சம்,பொய்,திருட்டு போன்றவற்றை வெறுத்ததாலும் வாங்கிய சம்பளத்தை வெட்டாற்றில் வீசியெறிந்துவிட்டு P W D வேலையை யாரையும் கேட்காமலேயே ராஜினாமா செய்தேன்.

                            ராஜினாமாவை ஏற்காத உயரதிகாரி நாட்டின் அவசரகால நிலையை நினைவுபடுத்தி  " நீ ஏன் ஒரு இராணுவ அதிகாரியாகக்கூடாது"
என்ற  கேள்வியை முன் வைத்தார்.

                    இராணுவத்தேர்வுகள்,பின்னர் பயிற்சிகள் முடிந்து இந்திய -திபெத் -நேபாள எல்லையில் படைப்பிரிவில் சேரும் உத்திரவுடன் சன்னாநல்லூர் வந்தேன்.பதினைந்து நாட்கள் விடுமுறை முடிந்து 26 August 1964  இரவு பத்து மணிக்கு சன்னாநல்லூரில் ரயிலேறவேண்டும்.

                    தாங்கமுடியாத சோகம் மனதைக் கவ்வ ஆரம்பித்தது.வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றினேன்.அம்மா அப்பாவை நிற்கவைத்து காலில் வீழ்ந்து வணங்கினேன்.எழுந்து நிற்கையில் கேவிக் கேவி கதற ஆரம்பித்தேன்.



                                 ஏன் அழுதேன் ? யாருக்காக அழுதேன் ? என்ன நினைத்து அழுதேன் ? என்று இன்று சுமார் 55 வருடங்களான பின்னும்  எனக்குப் புரியவில்லை.

                       இராணுவ வாழ்வின் பல மனதைக் கசக்கிப் பிழியும் நினைவுகளில்
1970 ல்  அம்மா இறந்ததையும்  நான் காணவில்லை;1979 ல் அப்பா இறந்ததையும்  நான் காணவில்லை.

                  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
                  அவ்வையின் பொன்மொழி  வீணா
                  ஆண்டவன்போலே நீதியைப் புகன்றாள்
                   அனுபவமே இதுதானா  ?
       
              வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.அனந்தலக்ஷிமி என்ற பெண் கடவுளின் பரிசாக என் வாழ்க்கைத் துணைவியானார்.

             காலப்போக்கில் அரவிந்தன்,கார்த்திக் என்ற இரு அற்புதமான ஆண்குழந்தைகள் பிறந்தனர்.

                     பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் நான் சன்னாநல்லூரில் "அகத்தூண்டுதல் பூங்கா "  அமைத்து ஒரு மனிதனின் செயலாக்கத்தை எந்த புற காரணங்களும் தடுக்க முடியாது என்று உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறேன்.
 

                  சன்னாநல்லூரும் அகத்தூண்டுதல் பூங்காவின் செயல்பாடுகளும் வருங்காலத்தில் சரித்திரம் படைக்கும் என்று எதிர் பார்ப்போம்.