வெள்ளி, 6 செப்டம்பர், 2024

                                          சீருடை அணிந்த  சூராவளி -1

                          Hallo, Colonel Tornado,Please come in.......

         எனது தென் துருவ பணி  முடிந்தது ம் எம்,இ .ஜி ( Madras Engineer Group ) யில் பயிற்சி படைப்பிரிவு தலைவராக பொறுப்பேற்று சிலநாட்கள் ஆகியிருந்தன.துரதிர்ஷ்ட வசமாக ஒரு ஜூனியர் அதிகாரியின் கோர்ட் மார்ஷல் முடியும் நிலையில் நான் பொறுப்பேற்றிருந்தேன்.அந்த அதிகாரிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.அந்த நிகழ்வில் எனது பங்கு ஏதுமில்லை என்றாலும் படைப்பிரிவு தலைவர் என்ற முறையில் எனது பெயர் பரவலாகப் பேசப்பட்டு  கணேசன் ஒரு கடுமையான அதிகாரி என்று எல்லோரும் நினைக்கும்படி ஆகிவிட்டது.




                        பொதுவாக உண்மையும்  நேர்மையுமான வழி முறைகளை பின் பற்றும் எனக்கு ஒருவிதத்தில்  அந்த கோர்ட் மார்ஷல் ஒரு நல்ல அறிமுகம் என்று நான் ஏற்றுக்கொண்டேன்.தவறுகள் திருத்தப்படவேண்டும்; குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கொள்கையைக் கடைபிடிப்பவன் நான்.

                       சிலநாட்கள் சென்று எம்.இ .ஜி  வளாகத்தில் உள்ள அக்கவுண்ட்ஸ்  பிரிவுக்கு சென்றேன். I A S  தேர்வில் மெரிட்டில் சற்று குறைந்ததினால் I D AS கிடைக்கப்பெற்று லக்ஷ்மி  என்ற பெண் அதிகாரி பொறுப்பாளராக இருந்தார்.என்னைப்பற்றி அவரது உதவியாளர் அறிமுகம் செய்த பிறகு ,ஒ ! welcome ! Colonel Tonnado என்று வரவேற்று எனக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.

                 வித்தியாசமாக அவர் என்னைப்பற்றிக் குறிப்பிட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.அன்றைக்கிருந்த சூழ்நிலையில் எனது செயல் பாடுகள் அதிரடியாக இருந்தன என்பது உண்மைதான்.போர்க்குணம் நிறைந்த கஷத்ரிய வம்சத்தவர்கள் நிறைந்திருக்க வேண்டிய இராணுவத்தில் அதுவும் அதிகார வம்சத்தில் வியாபாரிகளும் புரோகிதர்களும் தரகர்களும் நுழைந்து விட்டார்கள் .உயர் அதிகாரிகளை அனுசரித்து உண்மைக்குப் புறம்பாகச் செயல்படும் இவர்களுக்கிடையில்  அதிரடியாக,நிகழ்வுகளைத் துகிலுரித்து ஒளிவு மறைவின்றி செயல் படுத்தும் என்னை colonel Tornado என்று அவர் குறிப்பிட்டது பொருத்தமானதுதான்.




                  1990 ல்  குடியரசு தலைவருக்கான அணிவகுப்பின் போது நடந்த ஒரு நிகழ்வு.இராணுவத்தின் மத குருமார்களான ஹிந்து,முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ குருமார்கள் "கலர்ஸ் " எனப்படும் கொடி  யை பூஜை செய்து பரிசுத்தப் படுத்தும் நிகழ்வு.இதில் கிறிஸ்தவ பாதிரியார் ஆசீர்வாத ஒத்திகை நடத்த மறுத்துவிட்டார்.அது அவர்கள் மத கோட்பாடு இல்லை என்று வாதமிட்டார்.அசம்பாவிதம் ஏதும் நிகழ் வதைத் தவிர்க்க நிகழ்ச்சி சுமுகமாக முடிக்கப் பட்டது.அதன் பிறகு கர்னல் பாதிரியாரை அலுவலகம் அழைத்தார். பாதிரியார் தனது வழக்கமான நீண்ட அங்கியில் வந்தார்.அவர்  ஒரு இளநிலை  இராணுவ அதிகாரி என்றும் வழிபாட்டுத்தலங்களைத்தவிர மற்ற இடங்களில் அவர் இராணுவ சீருடையில்தான் வரவேண்டும் என்றும்  கர்னல் உத்தரவிட்டு மறுநாள் வரும்படி உத்தரவிட்டார்.ஆனால் மறுநாளும் அவர் அதே நீண்ட வெள்ளையாடையில்தான் வந்தார்.

                     தனது கட்டளைக்கு கீழ்ப்படியாமல்  மீண்டும் அதே பாதிரியாரின் வெள்ளை ஆடையில் வந்தது கண்டு  கர்னலுக்கு  சற்று ஆச்சர்யமாகவும் கோபமாகவும் இருந்தது.ஏன் இராணுவ சீருடையில் வரவில்லை  என்று கர்னல் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இராணுவ வாழ்க்கையில் கர்னல் கேட்டறியாதது.தான் ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக நியமிக்கப் பட்டுள்ளதால்  தனக்கு அது தேவையில்லை என்று விற்றுவிட்டதாகவும்  ஒவ்வொரு முறையும் தனக்கு கிடைக்கும் இராணுவ தளவாடங்களை விற்று விடுவதாகவும் பதிலளித்தார்.

                    இராணுவதைப்  பற்றி கனவு கூட கண்டறியாத கர்னல் கணேசன் 1962 ல் நாட்டில் அவசரகால நிலை பிரகடனப் படுத்தியபொழுது  வீட்டுக்கொரு ஆள் நாட்டுக்காகப்  போகவேண்டும் என்ற பண்டைய தமிழர்களின் கோட்பாடு மாதிரி தான் பணிபுரிந்துகொண்டிருந்த பொதுப்பணித்துறை பொறியாளர் வேலையை துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு இராணுவ அதிகாரியானவர்.தீவிர மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்டவர்.1965,மற்றும் 1971 போர்க்களங்களில் தீவிர பங்குகொண்டு விழுப்புண் விருது பெற்றவர். உடலளவிலும் மனதளவிலும் தன்னிகரற்றது தலைவனாகப் பவனி வருபவர்.ஒன்றரை ஆண்டுகள் அண்டார்க்டிக்கா  உறைபனி உலகில் இந்தியாவின் ஆய்வுக்குழு தலைவராகப் பணியாற்றிவிட்டு அப்பொழுதுதான் திரும்பியிருந்தார்.

          இராணுவப் பணியே குறிக்கோளாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாகப்  பணியாற்றிவரும் எத்தனையோ இராணுவ அதிகாரிகளைப்  பின்னுக்குத் தள்ளி  முன்னால்  நிற்பவர்.

          வரும் பகைவர் படை கண்டு  மார்தட்டிக்  களம்  புகுந்த மக்களைப்   பெற்றோர் வாழ்க !.

          மணம்கொண்ட  துணைவருக்கு விடை தந்து வேல் தந்த மறக்குலப் பெண்கள் வாழ்க !.

          உரம் கொண்டு போராடி உதிரத்தில் நீராடி  அறம் காத்த உள்ளம் வாழ்க !.

            திறமானப் புகழ்கொண்ட திடமானத் தோள்களும் செயல் வீரர் மரபும் வாழ்க !


                        என்ற புறநானூற்றுப் பாடலை உயிராய் நேசிப்பவர். அப்படிப்பட்ட கர்னலின் முன் நிற்பவர் பிழைப்புக்காக இராணுவ அதிகாரியாகி, அந்த சீருடைக்கு கொஞ்சமும் மரியாதை இன்றி மற்ற பொருள்கள் போல் விற்றிருப்பவர்.கர்னலுக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.ஆனால் அதே சமயம் பாதிரியாரின் அறியாமையை நினைத்து வருத்தப்பட்டார்.

                    பாதிரியார் மீது தப்பில்லை.காலம் காலமாக அதிகார நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு,உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப்பெற அவர்களுக்கு அடிமை போல் வேலைசெய்துகொண்டு தனது கடமையின் கண்ணியத்தை மறந்து உண்மைக்குப் புறம்பான கூட்டி எழுதப்பட்ட "செயலாக்க அறிக்கையின்" காரணமாகப் பதவி உயர்வு பெரும்  கயவர்களுக்காக கர்னல் வருத்தப்பட்டார்.

                  இராணுவ இளநிலை அதிகாரி என்ற கௌரவத்துடன்,அரசாங்க வீட்டில் இருந்துகொண்டு,பிள்ளைகளை இராணுவப் பள்ளிகளில் படிக்கவும் இலவசமாக உணவு,உடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த பாதிரியார் எவ்வளவு பெரிய துரோகத்தை இந்த நாட்டுக்குச் செய்துகொண்டிருக்கிறார்.? இத்தனை ஆண்டுகளாக அதிகார வர்க்கம் எப்படி தன்  கடமையை ஆற்றிக்கொண்டிருந்தது. ஏன் இது மற்ற அதிகாரிகளின் கண்களில் படவில்லை.?

                                          இராணுவ சம்பிரதாயப்படி பாதிரியார் குற்றவாளி .அவர் தண்டிக்கப் படவேண்டும்.தவறுகள் திருத்தப்படவேண்டும்;குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு உடையவர் கர்னல் .ஆனால் பாதிரியார் அறியாமையினால் செய்துகொண்டிருக்கும் தவறு திருத்தப்படவேண்டும்.அதே சமயம் மத கோட்பாடுகளைத் தீவிரமாகப் பின் பற்றும் அவர் இராணுவ வழிமுறைகளுக்கு ஏற்புடையவர் இல்லை.

                                     அடுத்த இரண்டு நாட்களில் இராணுவ மத போதகர் என்ற பணியில் இளநிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த  அவர் தன்  விருப்ப விடுப்பில் தென் மண்டல  இராணுவத்தளபதியின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டார்.





                               1964 முதல் 1994 வரை முப்பதாண்டுகால இராணுவப் பணியில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள்  நடந்துள்ளன. எத்தனையோ அதிகாரிகள் பயணித்திருக்கும் அதிகார வர்க்கப் பாதையில் கர்னல் கணேசனின் பயணம் வித்தியாசமானதாகத்  தெரிகிறது.அவர் பணித்த பாதை ஒளி வீசுகிறது.ஆங்காங்கே திருப்புமுனைத் தடயங்கள் இருக்கின்றன.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக