புதன், 11 டிசம்பர், 2019

                               உத் திரவிடுவதா ! 
                                    வேண்டுகோள் விடுப்பதா ?

                 1989 March 26  கர்னல் கணேசன் ஒன்றரை ஆண்டுகால உறைபனி வாழ்க்கைக்கு பிறகு தாயகம் திரும்பினார்.உடனடியாக அவருக்கு பணியிடமாற்றம் தராமல் பதினைந்து நாட்கள் விடுமுறையும் பின்னர் இராணுவத் தலைமையகம் வரவும் உத்திர விடப்பட்டிருந்தது.
               
                 சிறிதுகால இழுபறி நிலைக்குப்பின் அவர் பெங்களூரு பயிற்சி மையத்தில் பயிற்சி  படைப்பிரிவு தலைவராக இட மாற்றம் பெற்றார்.01 Sep 1989 கணேசன் மெட்றாஸ் என்ஜினீயர் குரூப் என்ற பயிற்சி தளத்தில் படைப்பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



                     அதிகாரிகளுக்கான வண்டிகள் தனியாக பராமரிக்கப்பட்டு தேவைக்கேற்ப அனுப்பப்பட்டன.வண்டிகள் மாறினாலும் டிரைவர்கள் மாறுவதில்லை.ஆனால் கணேசனுக்கு மட்டும் தினம் ஒரு வண்டியாகவும் வேறு வேறு டிரைவர்களாகவும் வந்துகொண்டிருந்தார்கள்.இது சில நிர்வாகப் பிரச்சினையை ஏற்படுத்தியது.நாளைக்கு இத்தனை மணிக்கு வரவேண்டும் என்று சொல்லியனுப்பினால் மறுநாள் வேறு டிரைவர் தாமதமாக வந்து தனக்குத் தெரியாது என்பார்.




             கணேசன் வண்டிகளை நிர்வகிக்கும் அதிகாரியை சந்தித்து ஏன் நிரந்தரமான டிரைவரை அனுப்பவில்லை என்று காரணம் கேட்டார். அதற்கு அவர் கர்னல் கணேசனிடம் பணியாற்ற டிரைவர்கள் பயப்படுவதாகவும் இன்னும் சில நாட்களுக்குள் ஒரு டிரைவரை ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.
            இராணுவ தளத்தில்  கட்டளை இடப்படுகின்றனவா அல்லது வேண்டுகோள் விடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் கணேசனுக்கு ஏற்பட்டது.
                சுயநலமற்ற தனது எண்ணத்தின் நேர்மையிலும் தனிமனிதனாகத் தனது செயாக்கத் திறமையிலும் சிறப்பான ஒரு அதிகாரி தனது சொல்லிலும் செயலிலும் ஒரு கண்டிப்பு தன்மையைக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பவர் கணேசன்.தனது தலைமையின் கீழ் பணியாற்றுபவர்களை அப்படித்தான் அவர் உருவாக்குவார்.


               இராணுவப் பணிகளில் வேண்டுகோள் விடுப்பதற்கு எப்பொழுது அவசியமாகிறது.சட்டத்திற்குப் புறம்பாக ,நேர்மையற்ற வழிகளில் செல்லும்போது,தன்னால் முடியாது என்ற நிலை வரும்போது  தனது பணியாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன.கடமையை செய்ய வேண்டுகோள் விடுப்பதில்லை;கட்டளை இடப்படுகின்றன.
                 அந்த அதிகாரி இந்த டிரைவர் இந்த இடத்தில் வேலை என்று கட்டளை இட ஏன்  தயங்குகிறார் என்று புரியாமலேயே கணேசன் திரும்பிவிட்டார்.சில நாட்களில் ஒரு டிரைவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இனிமேல் தினமும் அவர்தான் வருவார் என்கிறார்.
               என்னப்பா ? என்னிடம் பணியாற்ற டிரைவர் எல்லாம் பயப்படுவதாக சொன்னார்களே ! நீ எப்படி சம்மதித்தாய் ? என்கிறார்.தவறு செய்யாமல் பணியாற்றும் பொது ஏன்  சார் பயப்படவேண்டும் ?எனக்கு 14 வருட சர்விஸ் ஆகிறது.இதுவரை ஒரு தண்டனையும் வாங்கியதில்லை என்று பெருமையோடு பதிலளித்தார்.



               கர்னல் கணேசன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.சில நாட்களில் கர்னல் அதிகாலை புறப்பட வேண்டியிருந்தது.டிரைவர் எந்த தயக்கமும் இல்லாமல் வந்துவிட்டார்.போகும் வழியில் டிரைவரின்  குடும்பம்,தங்குமிடம் பற்றி விசாரித்தார்.சுமார் ஒரு வருடம்  அரசாங்க வீட்டில் இருந்துவிட்டு இப்பொழுது வாடகை  வீட்டில் சுமார்  10 Km தூரத்திலிருப்பதாகவும் வேலைக்கு வர மோட்டார் சைக்கிள் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
                   பயிற்சிப் படைப்பிரிவு தலைவர்கள் கால நேரம் கடந்து பணியாற்றவேண்டும்.அவர்களது டிரைவர் அரசாங்க குடியிருப்பில் அருகிலிருப்பது அவர்களது பாதுகாப்பிற்கு நல்லது.பணிமுடிந்து வந்த கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஒரு அரசாங்க வீடு கொடுக்க உத்தரவிட்டார்.டிரைவர் சந்தோஷமாக தனது குடியிருப்பை மாற்றிக்கொண்டார்.
          ஒருநாள் டிரைவரின்  சீருடைகளைப்பார்த்த கர்னல் அது மிகவும் வெளுத்து இருப்பதைக்கண்டார். ஜவான்களுக்கு சீருடை காலத்தின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இரண்டு சீருடை என்று வழங்கப்படுகிறது.உபயோகத்தைப்பொறுத்து அவை கலர் வெளுத்துப் போகலாம்.
                 கர்னலின் டிரைவர் சீருடை நன்றாக இருப்பது அவசியம்.கர்னல் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு டிரைவருக்கு ஆறு மாதத்திற்க்கு இரண்டு செட் சீருடை வழங்க உத்தரவிட்டார்.
                       ஒருநாள் அதிகாரிகளுக்கான விருந்து நடக்கவிருந்தது.டிரைவர் வந்து,ஐயா,மாலை எத்தனை மணிக்கு வண்டி வேண்டும் என்று கேட்டார். அதிகாரிகள் விருந்துக்கு தான் தனது காரில் போய்விடுவதாகவும் டிரைவர் தனது சொந்த வேலையைப்பர்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.மலையில் எல்லா அதிகாரிகளும் அரசாங்க வண்டியில் டிரைவர்களுடன் வந்திருந்தார்கள்.விருந்து நடந்து கொண்டிருந்த போது கர்னல் கணேசனின் டிரைவரைத்தவிர மற்ற எல்லோரும் அங்கிருந்தார்கள்.அப்பொழுது ஆரம்பத்தில் கர்னல் கணேசனிடம் பணியாற்ற பயப்பட்டவர்களும் அங்கிருந்தார்கள்.அவர்களிடையே கர் னலின் டிரைவரின்
சுகமான,பாதுகாப்பான ,கடமையுணர்வோடு கூடிய வேலை பற்றி வானலாவப்   புகழ்ந்து கர்னல் கணேசனிடம் பணியாற்றக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்களாம்.


                 இராணுவப்பணியிலும் தனது தனி வாழ்விலும் கர்னல் நல்ல ஒழுங்குமுறைகளைக் கடைபிடிப்பவர்.தவறுகள் திறுத்தப்படவேண்டும்;குற்றங்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோட்பாடு உடையவர்.அவர் பணியாற்றிய இடங்களிலும்.அவரிடம் பணியாற்றியவர்களிடமும் இந்த தாக்கத்தைக் காணலாம்.


























புதன், 4 டிசம்பர், 2019

                                       ஊரும் உறவும்.

   ஒரு மனித  உயிர் இந்த மண்ணில் பிரவேசிப்பது என்பது பொது விதி என்றாலும் எல்லா உயிர்களும் ஒரே மாதிரி மண்ணைத் தொடுவதில்லை.ஆகையினால் "'மண்ணின் மைந்தர்கள் "என்றால் தீப்பந்த வெளிச்சத்தில் கோரைப்பாய் மீது படுத்துக்கொண்டு "தக்க தசமதில் தாயோடுதான்படும் துக்க சாகர துயரிலிருந்து வெளிவந்து இந்த மண்ணைத்தோடும்   மகத்தானப் பேறு பெற்றவர்கள் மட்டுமே மண்ணின்
மைந்தர்கள்  என்ற அடைமொழிக்கு உரியவர்களாவார்கள்.


அப்படிப்பட்ட மண்ணின் மைந்தரான கர்னல் கணேசன் தனது பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக சன்னாநல்லூரில் 30-11-2019 அன்று ஒரு நூல் வெளியிட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து ஒரு மாதத்திற்கு முன்பே எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 



           கர்னல் கணேசனுக்கு மிகவும் நெருக்கமான நண்பரான Brigadier M.Sudanthiram,V S M.அவர்கள் கட்டாயம் வருவதாகவும் பெங்களூரிலிருந்து வானூர்த்தியில் திருச்சி வந்து இரவு அங்கேயே தங்கிவிட்டு 30 ந்தேதி காலையில் வாடகைக்காரில் சன்னாநல்லூர் வந்து விழாவை நடத்த்திவிட்டு மாலைக்குள் திருச்சி சென்று வானூர்தியில் பெங்களூர் போய்விடுவதாகத் திட்டமிட்டார்.
                எனது எழுத்துக்களை வெளியுலகத்திற்கு அறிமுகப் படுத்திய நண்பர் ,எழுத்தாளர்,பதிப்பாளர் திரு வையவன் அவர்களும் கட்டாயம் வருவதாக வாக்களித்திருந்தார்.அவர் சென்னையிலிருந்து காரில் வரவேண்டும்.
         வானிலை பயமுறித்துக் கொண்டிருந்தாலும் நவம்பர் 27 நானும் துணைவியும் சன்னாநல்லூர் சென்றடைந்தோம்.வானிலை நவம்பர் 30 திருவாரூர் மாவட்டத்தில் மழை கடுமையாக இருக்கும் என்கிறார்கள். 


                    இவைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கணேசன் விழா ஏற்பாட்டில் தீவிரமானார்.நன்னிலம் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து வாகன கட்டுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தார். சுமார் 50 பேர் வரலாம் என்று எதிர்பார்த்து பகலுணவுக்கு ஏற்பாடு செய்தார்.
           29 நவம்பர் அன்று மாலையே பங்களூரிருந்தும் கிருஷ்ணகிரியிலிருந்தும் நண்பர்கள் வந்து விட்டார்கள்.இரவு தங்க விடுதியில் ஏற்பாடு செய்தார்.


               எப்பொழுதும் கணேசனுக்கு உதவியாக இருக்கும் அவரது மைத்துனர் உடல்நலக் குறைவால் வரவில்லை.
            நவம்பர் 30 பொழுதுபுலர்ந்தது.இரவு முழுவதும் பெய்த கடும் மழையால் விழாவுக்கு ஏற்பாடு செய்த இடத்தில் ஒரு அடி மழை நீர் நின்றது.உணவுக்கு ஏற்பாடு செய்த இடம் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருந்தது.உடனடியாக விழா ஏற்பாட்டை அந்த இடத்திற்கு மாற்றவும் விழா முடிவில்  அங்கேயே உணவுக்கும் மாற்றினார்.


            30 ந்தேதி காலையில் பெங்களூரிலிருந்தும்  தஞ்சாவூரிலிருந்தும் பாண்டிச்சேரியிலிருந்தும்,காரைக்காலிலிருந்தும் நண்பர்கள் வருவதாக ஏற்பாடு.
            அண்டார்க்டிக்காவில்  கணேசனுடன் பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரியும் ஒரு கடற்படை அதிகாரியும் வருவதாக ஏற்பாடு.
               சென்னையிலிருந்து தனி காரில் முதல்நாள் இரவே வந்துவிட்ட திரு வையவன் விடுதியில் இருந்தார்.
              விடாது மழை பெய்தாலும் இயற்கைக்காட்டிய இரக்கத்தால் அவ்வப்பொழுது சற்று இடைவெளியிருந்தது.கூட்டம் கூட ஆரம்பித்தது.
               கணேசனே விழா நடத்துபவர்,ஒருங்கிணைப்பாளர்,வரவேற்புரை செய்பவர்,விருந்தினர்களை அறிமுகப்படுத்துபவர்.
                   விழா இனிதே ஆரம்பமானது.





















              விழாவின் நிறைவாக திருமதி அனந்தலக்ஷிமி நன்றி கூற விருந்தினர்கள் பகல் விருந்துக்கு கலைந்தனர்.





           சில முக்கிய விருந்தினர்கள் ;
         
                         Brig. M.Sudanthiram,VSM.
                        Commodore.B.Ravinder
                          Mr.Vaiyavan.
                       Dr.Sambandamoorthy.
                       Dr.S.Amutha.
                          Mr.Vedachalam &15 from Karaikkaal.
                        Maj vijayakumar.
                       H/Capt Rajan,Santharaj & 20 Ex servicemen.
                       Chief Petty offr K.Rajkumar
                          B.Ramanathan
                         Maj.Ganesan.
                      20 From Sembiyanalloor.
                         15 From Sannanallur.
            
மொத்தத்தில் சுமார் 120  பேர்கள் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.
                     காவல் துறைக்கு நன்றி.
 மழையையும் பொருட்படுத்தாமல் கர்னல்  கணேசனுக்கு மரியாதை கொடுத்து  சிரமங்களை ஏற்று விழாவை சிறப்பித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
                விழாவுக்கு உறுதுணையாய் இருந்த நன்னிலம் ரோட்டரி நண்பர்களுக்கு நன்றி.
                               



                      வணக்கம். 
























சனி, 16 நவம்பர், 2019


                    வீழ்வேனென்று  நினைத்தாயோ.

                 எழுபத்தியெட்டாவது  அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும் எனது அனுபவத்  தொகுப்பு ஒரு சாதாரண மனிதனுக்குக்  கிடைக்கமுடியாத ஒன்று.இதைப்  பதிவு செய்வதும் இதை பெரும்பாலான மனிதர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எனது தலையாயக் கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.
            இந்த ஞான வேள்வியில்  என்னை அறிந்தவர்கள் வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்காமல் சற்றே வடம் பிடிக்க வேண்டுகிறேன்."ஊர்கூடித் தேரிழுப்போம்" என்பார்கள்.தனி மனிதனாக நான் களைப்படைகிறேன்.ஆனால் வீழ்ந்துவிட மாட்டேன். பாரதியின் பாடல்இதைத்தான் திரும்பத்திரும்ப எனக்கு நினைவூட்டுகிறது. எனது எழுத்தும் செயல்பாடும் தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கிறது.
                  உற்றமும்சுற்றமும்தாங்கள்,தங்கள்சந்ததியினர்க்கென்று  பொன்னும் பொருளும் தேவைக்கு மீறி குவிக்கும் முயற்சியிலிருக்கையில்  நான் ஞானத்தீயில் வெந்து கொண்டிருக்கிறேன்.வெந்து முடிகையில் நான்
 வைரமா  ? அல்லது கரிக்கட்டையா ?  என்பது தெரியவரும்.
                      இந்தியா என்ற மாபெரும் தேசத்தில் தமிழ்நாடு தனித்துவம் பெற்றது என்பது எல்லோரும் அறிந்ததே.தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தல் அதுவும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறப்பது பேரதிர்ஷ்ட்டம்.


         அப்படிப்பட்ட சூழ்நிலையில் உடல் ,மன  குறைகளின்றி பிறந்து கிராமத்திற்கே உரிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கியதோடு தமிழ்மொழியின் அருமை பெருமைகளையும் சுவைக்கத்தொடங்கியபோது  நான் வித்தியாசமானவன்  என்று உணர்ந்தேன்.

                              தேடிச்சோறு நிதம் தின்று பல 
                                           சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் 
                               வாடித் துன்பம் மிகஉழன்று 
                                           பிறர்வாடப் பல செயல்கள் செய்து-நரை 
                                கூடிக் கிழப் பருவம் எய்திக் கொடுங்  
                                           கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் -பல 
                                வேடிக்கை மனிதர்களைப்போல் 
                                          நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ ?.


         பாரதியின் பாடல் மனதில் ஒலித்துக்கொண்டேயிருக்கயில் நான் பள்ளிப்பருவம் கடக்கிறேன்.
       1962ல் சீனாவின் கொடியதாக்குதலுக்கு உள்ளான இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி இந்திய இராணுவம் பெருமளவு விரிவுபடுத்தப்பட்டது. பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருந்த என் மனதில் பாரதிதாசனின் இந்த பாடல் சற்றே சலனப்படுத்த ஆரம்பித்தது.


                   எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் 
                   இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் 
                    தினையளவு நலமெனும் கிடைக்குமென்றால் 
                   செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்..   

         தஞ்சாவூருக்கருகில் பணியாற்றிக்கொண்டிருந்த போது ஊரின் மூலைக்கு மூலை நாட்டின் அவசரகால நிலை பற்றிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.




              ஐந்து அண்ணன்  தம்பிகளுடன் பிறந்திருந்த நான் எங்களில் ஒருவராவது இராணுவத்தில் சேருவது இந்த நாட்டிற்கு செய்யும் நன்றிக்கடன் என்று முடிவு செய்து நானே முன்வந்தேன்.

            பயிற்சி காலத்திலேயே  Atheletic Blue  என்ற சிறப்புத் தகுதியுடன் இந்திய இராணுவத்தில் அதிகாரியானேன்.


                   குடும்பத்தில் ஒருவனாக எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருந்த நான்  இராணுவப் பணி காரணமாக சுக துக்க நிகழ்ச்சிகளில் பெருமளவு பங்குகொள்ள முடியவில்லை.பல குடும்ப நிகழ்வுகள் நான் அறியாமலேயே நடந்தேறின.ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும்போதும் அம்மா ஊரின் ஜனன மரண கணக்குகளையும்  அண்ணன்  தம்பிகள் ஊரின்,உறவின் நடப்புகளையும் சொல்லுவார்கள்.
                       சுமார் ஐம்பது வயதில் தீவிர காச நோய்க்கு அம்மா ஆளானார்.மூத்தவர்கள் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் ஒன்றிவிட தாயன்பின்றி வளரும் தம்பி தங்கையின் நிலை எனது விடுமுறை நாட்களை சோகமயமாக்கின.இராணுவப் பணியை உயிரினும் மேலாக நேசித்த என் மனதில் அண்ணன் தம்பிகள் அக்காள், தங்கை என்று நான் பின்னியிருந்த பாசவலை சற்றே சிதைவுற ஆரம்பித்தது.
                 சிறப்பான இராணுவ அதிகாரியாக உருவெடுக்க பாடுபடும் எண்ணில் விடுமுறை நாட்கள் தங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தின.அம்மாவின் கடைசி நாட்களில் எனக்கு விடுமுறை மறுக்கப்பட்டு நான் அவர் பூத உடலைப் பார்க்காமலேயே அவர் மறைந்தார்.
                    இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக நான் நிலை தடுமாறிப் போனாலும்  பாரதியின் "நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ " என்ற வரிகள் என்னை நிமிர்ந்து நிற்க வைக்கும்.இராணுவக் கல்லூரியில் Civil Engineering  பிரிவில் முதல் மாணவராக B.Tech பட்டம் பெற்றேன்.


                    விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது 
                          விம்முகின்ற குழந்தையினும் மிகப் பெரிதும் சிறியேன் 
                    அளக்கறியாத் துயர் கடலில் விழுந்து நெடுங்காலம் 
                       அலைந்து அலைந்து மெலிந்த துரும்பதனின்   மிகத்துரும்பேன் 
என்ற ராமலிங்க  அடிகளின் பாடல் வரிகள் விண்ணிலிருந்து எனக்கு புதிய சக்தியைக்கொடுக்கும். Thought Replacement Technique  போன்ற மனப் பயிற்சிகள் என்னை மாற்றிக்கொள்ள உதவின.  



               மனதின் ஏற்ற இறக்கங்களை எழுத்தில்  கொண்டுவர ஆரம்பித்தேன்.ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் ஓய்வுக்குப்பிறகே நூல் வடிவம் பெற்றாலும்  அவ்வப்பொழுது ஏற்பட்ட மனநிலைக்கு ஒரு வடிகாலாக அமைந்தது எனது தமிழ்.

             தனி வாழ்வின் இழப்புகளும் சோகங்களும் இராணுவ வாழ்வின் உயர்வைப் பாதிக்காத முறையில் நான் சீரோடும் சிறப்போடும் பணியாற்றி பெயரோடும் புகழோடும் ஒய்வு பெற்றேன்.


  
                      இன்று எனது நூல்கள் ,மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே மனதளவிலே மாற்றத்தைக் கொடுத்து பின்னர் அது செயல் வடிவம் பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.
                      எனது எழுத்துக்களை பெரிதும் நேசிக்கும் திரு வையவன் அவர்கள் தனது எண்பது வயது முதுமையிலும் எனது இரண்டு நூல்களை மறு  பதிப்பு செய்யும் மகத்தானப் பணியிலிருக்கிறார்.
                  இந்த நூல்கள் வரும் நவம்பர் 30 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சன்னாநல்லூர் "அகத்தூண்டுதல் பூங்கா "வளாகத்தில் இந்திய இராணுவத்தில் தன்னிகரற்ற தலைவனாகப் பணியாற்றிய உயர் திரு Brigadier  M.Sudanthiram,V S Mஅவர்களால் வெளியிடப்படவுள்ளது.
             



                  அனைவரும் வருக ! அவசியம் வருக.


                                          கர்னல் பாவாடை கணேசன்.வீ.எஸ்.எம்.













ஞாயிறு, 10 நவம்பர், 2019

                          இடைக்காலப் பிரிவேயன்றி 
                                       இறுதி வணக்கமல்ல. !

          தென்துருவப் பணிமுடிந்து இந்தியா திரும்பிய கர்னல் கணேசன் பெங்களூரிலுள்ள Madras Engineer Group & Centre என்ற இராணுவ தளத்தில் பயிற்சிப் படைப்பிரிவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
                    அங்கு மூன்று பயிற்சிப் படைப்பிரிவுகள் இருந்தன.அதில் Training Battalion -1 என்ற முதல் பயிற்சிப் பிரிவு தலைமையகத்திற்கு எதிரே  தலைமையகத்தின் எல்லா செயல்பாடுகளுக்கும் உதவுவது கூடுதல் பொறுப்பாகும்.கணேசன் அந்த No.1 படைப்பிரிவிற்கே தலைவராக நியமிக்கப் பட்டார்.
       
 ஒவ்வொரு பயிற்சி படைப் பிரிவில் சுமார் 2500.இளம் இராணுவப் பயிற்சியாளர்கள் பலநிலைகளில் பயிற்சியிலிருந்தார்கள் .ஒவ்வொரு தொழில் முறைக்கும் வித்தியாசமான கால அளவுகளில் பயிற்சி இருக்கும்.உதாரணமாக Carpenter என்ற trade க்கு பதினைந்து மாதப் பயிற்சி என்றால் டிரைவர் என்பவர்களுக்கு சுமார் இரண்டு வருடப் பயிற்சி இருக்கும்.ஒவ்வொருவரும் பயிற்சி முடிந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு
Combined Refreshar Training  என்ற ஒருங்கிணைந்த பயிர்ச்சி யளிக்கப்பட்டு எல்லைப்புறப் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
               கணேசன் தலைமைப்பொறுப்பு ஏற்றுக்கொண்டவுடன் பயிற்சி யாளர்கள் மனநிலையிலும் பயிற்சிகளிலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
                நாட்டின் பலஇடங்களில் நடைபெறும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு முற்றும் புதியவர்களாக இராணுவப் பயிசிப் படைப்பிரிவுக்கு வரும் இவர்கள்  அன்பாக வரவேற்கப்படுகிறார்கள்.
இது கர்னல் கணேசன் தயாரித்த வரவேற்பு கடிதம்.

                அதே சமயம் தங்கள் பிள்ளை எங்கு சென்றானோ எப்படியிருக்கானோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இது கணேசன் அனுப்பிய பாராட்டுக் கடிதம்.

             முன்பு சொல்லிய விதம் பயிற்சி நிறைவு பெற்று படைப்பிரிவு செல்ல இருக்கும் இராணுவத்தினருக்கு கர்னல் ஒரு பிரிவு உபசார விருந்து நடத்தி அவர்களை தங்களுக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதம் வாழ வாழ்த்தி வழங்கும் "இடைக்காலப்  பிரிவேயன்றி இறுதி வணக்கமல்ல " என்ற வாழ்த்து மடல் இது.

       
              இந்த மூன்று விதமானகடிதங்களும்தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மற்றும் ஹிந்தி  ஆகிய மொழிகளிலிருக்கும். தங்களது தாய்மொழியில் படிக்கும்போது அவர்களது மனதில் ஒரு புத்துணர்ச்சி பொங்கும் என்பதில் ஐயமில்லை.

இப்படிபைப்பட்ட அணுகுமுறை இணுவப் பயிற்சி யாளர்களிடையே  ஒரு மகத்தான மனநிலை மாற்றமும் அதன் காரணமாக தாங்கள் சாதிக்கவேண்டும் என்ற உந்துசக்தியையும் கொடுத்து உண்மையிலேயே அவர்கள் சரித்திரம் படைத்தார்கள் என்பதற்கு இன்று எழுபத்தியெட்டாவது அகவையில் பயணித்துக்கொண்டிருக்கும் கர்னல் கணேசன் தினமும் பெறும் கடிதங்கள் தொலைபேசி வாழ்த்துகளே உதாரணம்.
                  சிப்பாயாக சேர்ந்து கர்னல் கணேசனிடம் பயிற்சி பெற்று  Subedaar &Hony Lt  ஆகப் பணிநிறைவுபெற்ற திரு மகாராஜன் அவர்களிடம் முகநூல் பார்வையாளர்கள் நேரிடையாகப் பேசலாம்.
                அவரது அலைபேசி எண் 7382985929
   இதன் தொடர்ச்சியாகவே பணி  நிறைவுபெற்ற கர்னல் கணேசன் இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே இது போன்ற மாற்றங்கள் ஏற்பட தனது சொந்த நிலத்தில் "அகத்தூண்டுதல் பூங்கா "அமைத்து பல நிகழ்சிகளை நடத்துகிறார்.
               எதிர் வரும் நவம்பர் 30 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமத்தில் அகத்தூண்டுதல் பூங்கா வளாகத்தில் கர்னல் கணேசன் அவர்களது இரண்டு நூல்கள் 
             "எல்லை புறத்தில் ஒரு இதயத்தின் குரல்"'
                         " சிவந்த மண் கைப்பிடி நூறு "

            புகழ்பெற்ற "தாரணி " பதிப்பகத்தார் அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

                       அனைவரும் வருக  !           அமுதம் பருகுக. !.

              தொடர்புக்கு 9444063794,9884060671.



                                                              வணக்கம்.









வெள்ளி, 20 செப்டம்பர், 2019

                                                       திருமணத் தாம்பூலம் 
           சமீப காலங்களில் காதல் திருமணங்களும்  திருமணத் தரகர்கள் மூலம் நிச்சயிக்கப்படும் திருமணங்களும் நிறைய நடைபெறுகின்றன.திருமண வயதிலிருக்கும் ஆண்களும் பெண்களும் அவர்களது பெற்றோர்களும் திருமணம் ஏன்  என்று ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதாகத் தெரியவில்லை.
                       தம்பிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் சென்ற பிறகும்  எடுத்துதவ அன்பான உறவுகளின்றி கடமைக்காக சில இடங்களை பார்த்து ஒரு பெண்ணை முடிவு செய்யும் வேளையிலும் இது ஏற்புடையது தானா ? என்ற சிந்தனையுடன் நல்ல நண்பர் ஒருவரின் அறிவுரைப்படி அதை ஒதுக்கித்தள்ளி வேறு இடத்தில் அதுவும் அந்த நண்பரின் அறிவுரையை ஏற்று  திருமண வாழ்க்கை ஏற்றவன் நான்.
                ஆகையினால் திருமண த்தைப்பற்றி  ஆழ்ந்து சிந்தித்து நான் எழுதியதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன் .
                          திருமணம் என்பது இரு நல்ல குடும்பங்கள் ஒன்று சேரும் ஒரு புனித சடங்கு.இந்த சுப நிகழ்வு பெண்ணை அடிப்படையாகக் கொண்டதாகும்.பெண் சக்தியின் வடிவம் என்பதும் உலக நிகழ்வுகள் சிவ  சக்தியின் விளையாட்டு என்பதும் நாம் அறிந்ததே.ஜோதிடக் கலையின் எல்லா பொருத்தங்களும் பெண்ணின் பிறந்தநாள் குறிப்பின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றன.
                இல்வாழ்வில் கருவை சுமப்பதும் அதன் மூலமாக சத்திய புருஷர்களை உலகுக்கு வழங்குவதும் பெண்ணின் கடமையாகிறது."பெண் ஒரு தாயாகி கணவனைப் பெற்றெடுக்கிறாள் " என்பார்கள்.
                  திருமணத்தின் போது ஒவ்வொரு பெண்ணிற்கும் "ஜாதகரணம்,""நாமகரணம் "என்னும் இரு மந்திர பூர்வமான சடங்குகள் செய்யப்படுகின்றன.இதன் பொருள் விவாகம் ஆகும் வரை பெற்று வளர்த்தவர்கள் அன்னை தந்தை என்றும் ,விவாகத்தின்போது பெண் புதுப்பிறவி எடுக்கிறாள் என்றும் அங்கு அக்கினி சாட்சியாக ,தேவர்கள் சாட்சியாக,இரு வீட்டாரின் பித்த்ருக்கள் சாட்சியாகக் கணவனாக வரப்போகிறவனிடமும் அவனது பெற்றோர்களிடமும் பெண் ஒப்படைக்கப் படுகிறாள் என்றும் திருமணம் ஆன  விநாடியிலிருந்து அப்பெண்ணுக்கு கணவனே தெய்வம் என்றும் அவனது பெற்றோர்கள் இவளுக்கும் தாய் தந்தையர் என்றும் பொருளாகும்.
             இடம் பெயர்தல்,புலம் பெயர்தல்,மனித இயற்க்கை.இடம் பெயர்தலுக்கானக் காரணம் வேண்டுமானால் காலத்தைப்பொறுத்து மாறுபடலாம்.தண்ணீரைத்தேடி,உணவு தேடி,பிழைப்பு தேடி ,உறவுகள் தேடி புலம்  பெயர்ந்தவர்கள் எண்ணற்றோர்.ஆடுகள்,மாடுகள்,மிருகங்கள் காலத்திற்கேற்ப இடம் மாறுகின்றன.மீன்கள்,பறவைகள் போன்றவைகளும் இடம் மாறுகின்றன.புத்தர்,ஏசுநாதர்,முகமது நபி போன்றவர்கள் உண்மையைத்தேடி இடம் மாறினார்கள்.இந்த அலைதல்  எப்பொழுது நிற்கும் ? நிற்காது.செயலாற்றும் திறமையும்,அறிவின் தேடுதலும் தொடரும் வரை "அலைதல்  " தொடரும்.செயற்ற மனிதன் உட்கார்ந்து விடுகிறான்.மன  வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும்போது "அலைதல் " குறைந்துவிடுகிறது.
               கற்றுணர்ந்த குடும்பங்களில் பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றுமிடங்களில் பெண் புலம் பெயர்ந்து கணவனையடைகிறாள்.கணவன் வீட்டில் புதுமணப்  பெண் திருமகளாக வரவேற்கப்படுகிறாள்.பால் பற்கள் விழுந்து உறுதியானப் பற்கள் முளைப்பதுபோல் ,விதைத்த இடத்தில் முளைத்த பயிரை விளை  நிலம் பார்த்து எடுத்து நட்டவுடன் புதுவேர்கள் புத்துணர்வுடன் பரந்து விரிவதைப்போல் புதுமணப்பெண் கணவனுடன் ஒன்றி தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்குகிறாள் .உறவுகள் பெருகவும் ,சமுதாயம் சீரடையவும்,சத் புத்திரர்களையும் ,மகா புருஷர்களையும் அவர்கள் ஈன்றெடுக்க இறையருள் துணை புரி கிறது.



                     திருமண பந்தத்திற்கு குறிப்பாக முன் பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணும் ஆணும் திருமண பந்தத்தில் இணையும்போது இந்த குறுந்தொகை பாடல் உவமையாகக் காட்டப்படுகிறது.

                       யாயும் ஞாயும் யாராகியரோ
                       எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர் ?
                       யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
                       செம்புலப் பெயல்நீர் போல
                        அன்புடை நெஞ்சம் தாம்  கலந்தனவே.

                 இது ஒரு அற்புதமானப் பாடல்.மனித வாழ்வின் சிறப்பிற்கு அறிவும்,உணர்வும் ஒரு உன்னத நிலையை அடையவேண்டும்.இதுபோன்ற சங்க காலப் பாடல்களின் உட்பொருளை விளக்க முற்பட்ட பெரியோர்கள் தங்களது அறிவிற்கும் உணர்வுக்கும் எட்டிய விதமே விளக்கம் சொன்னார்களேயொழிய இதுதான் விளக்கம் என்பது பாடல் இயற்றிய அந்த மறைமொழி மாந்தர்களுக்கே தெரியும்.
            இந்த குறுந்தொகைப் பாடலுக்கு விளக்கம் சொல்ல வந்தவர்கள் "செம்மண் பூமியில் மழை பொழிந்து நிறமற்ற மழை நீர் செம்மண்ணுடன் கலந்து செந்நீராக மாறுவதுபோல் " என்பார்கள்.செம்மண்ணுடன் கலந்து சிவப்பாக மாறிய நீர் ஓரிடத்தில் தேக்கம் ஏற்படும்பொழுது கலங்கல்  தெளிவடைந்து தெளிந்த நீர் மேலாகவும் செம்மண் கீழாகவும் பிரிந்துவிட  வாய்ப்புண்டு.ஆதலால் இப்பாடலுக்கு வேறுவிதமாகப் பொருள் கொள்ளவேண்டும்.
                 செம்புலம் என்பதற்கு பாலை நிலம்-வறண்ட பூமி என்று ஒரு பொருள் உண்டு.பாலை நிலத்தில் மழை பொழிவது ஒரு அதிசயம்.! அற்புதம் ! பாலை நிலத்தில் மழை பொழியும்போது அங்கு ஒரு புது உற்சாகம் வெடித்துக் கிளம்புகிறது.இலேசாக மேகம் சூழ்ந்த கோடைகால மாலை நேரத்தில் காற்று வீசும்போது மேய்ச்சலிலிருக்கும் மாடுகள் திடீரென்று வாலைத்தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாகக்  குறுக்கும் நெடுக்கும் ஓடும்.இது அந்த பருவநிலை ஏற்படுத்தும் மாற்றங்கள்.ஆண்  மயில் தோகை விரித்தாடும். புது மழையின் மண் வாசமும் அப்படித்தான்.இதை நேரில் பார்ப்பதும் அந்த சுகத்தை அனுபவிப்பதும் அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கவிதை எழுதுவதும் தனி மனிதர்களுக்கு சொந்தமானது.




                   எனது மகிழ்ச்சி உனது மகிழ்ச்சியாக இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்.? ஆனால் பாலை நிலத்தில் பெய்யும் மழைநீர் எல்லா உயிரினங்களையும் சிலிர்க்க வைக்கிறது.பொட்டல்  நிலமாக இருந்த பாலையில் புதுப் பயிர்கள் வெடித்துக் கிளம்புகின்றன.யார் இன்னார் என்று அறியாத நெஞ்சங்களில் மகிழ்ச்சி பெருவெள்ளம் கிளர்ந்து எழ அவை இரண்டும் கலந்த ஒரு புது நிறமாக மாறுகிறது.இது பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவது என்பது இனி கிடையவே கிடையாது.இந்தப் பருவத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்தப் பயிரோடுதான் முடியும்.
                அதுபோல் இவனுக்கு இவள் என்று இறைவன் வகுத்ததைக் கண்டுகொண்ட இந்தப் புதுமணப்  பெண்ணும் பிள்ளையும் இனி வாழும் காலம் முழுவதும் புதுப்பொலிவோடு வாழவேண்டும் என்பதே இறைவன் கட்டளை.இதில் பிரிவு என்பதோ மாற்றம் என்பதோ கிடையாது.இதுதான் "செம்புலப் பெயல் நீர்"என்பதற்குப் பொருத்தமான விளக்கம்.
               திருமணமும் அதன் தொடர் நிகழ்வுகளும் இன்று மிகவும் கொச்சை படுத்தப்படுகிறது.உடலுறவுகள் அங்கம் அங்கமாகச் சிதைக்கப்பட்டு விமர்சிக்கப் படுகின்றன. " அந்தரங்கம் புனிதமானது " என்பார்கள்.இனச்சேர்க்கை எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பது தவறான கருத்து.
                   மனித இனத்தின் தாம்பத்தியம் ஞானேந்திரியங்களாலும் (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ) கர்மேந்திரியங்களாலும் உணரப்படவேண்டும்.அப்படியானால் உணர்வுகள் எப்படி பொதுவானதாக இருக்கமுடியும் ?ஆக இல் வாழ்க்கை தனி மனிதர்களின் உணர்வுகளைப்பொறுத்து அமைவது.
                     பண்பட்ட  மனத்துடன் ஏற்கும் இல்லறம் சமன்படுத்தப்பட்ட நிலத்தில் செய்யும் விவசாயம் போன்றது.அங்கு சத்திய புத்திரர்கள்/புத்திரிகள்
தோன்றுவது இயற்கை..