வெள்ளி, 20 செப்டம்பர், 2019

                                                       திருமணத் தாம்பூலம் 
           சமீப காலங்களில் காதல் திருமணங்களும்  திருமணத் தரகர்கள் மூலம் நிச்சயிக்கப்படும் திருமணங்களும் நிறைய நடைபெறுகின்றன.திருமண வயதிலிருக்கும் ஆண்களும் பெண்களும் அவர்களது பெற்றோர்களும் திருமணம் ஏன்  என்று ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதாகத் தெரியவில்லை.
                       தம்பிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் சென்ற பிறகும்  எடுத்துதவ அன்பான உறவுகளின்றி கடமைக்காக சில இடங்களை பார்த்து ஒரு பெண்ணை முடிவு செய்யும் வேளையிலும் இது ஏற்புடையது தானா ? என்ற சிந்தனையுடன் நல்ல நண்பர் ஒருவரின் அறிவுரைப்படி அதை ஒதுக்கித்தள்ளி வேறு இடத்தில் அதுவும் அந்த நண்பரின் அறிவுரையை ஏற்று  திருமண வாழ்க்கை ஏற்றவன் நான்.
                ஆகையினால் திருமண த்தைப்பற்றி  ஆழ்ந்து சிந்தித்து நான் எழுதியதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன் .
                          திருமணம் என்பது இரு நல்ல குடும்பங்கள் ஒன்று சேரும் ஒரு புனித சடங்கு.இந்த சுப நிகழ்வு பெண்ணை அடிப்படையாகக் கொண்டதாகும்.பெண் சக்தியின் வடிவம் என்பதும் உலக நிகழ்வுகள் சிவ  சக்தியின் விளையாட்டு என்பதும் நாம் அறிந்ததே.ஜோதிடக் கலையின் எல்லா பொருத்தங்களும் பெண்ணின் பிறந்தநாள் குறிப்பின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றன.
                இல்வாழ்வில் கருவை சுமப்பதும் அதன் மூலமாக சத்திய புருஷர்களை உலகுக்கு வழங்குவதும் பெண்ணின் கடமையாகிறது."பெண் ஒரு தாயாகி கணவனைப் பெற்றெடுக்கிறாள் " என்பார்கள்.
                  திருமணத்தின் போது ஒவ்வொரு பெண்ணிற்கும் "ஜாதகரணம்,""நாமகரணம் "என்னும் இரு மந்திர பூர்வமான சடங்குகள் செய்யப்படுகின்றன.இதன் பொருள் விவாகம் ஆகும் வரை பெற்று வளர்த்தவர்கள் அன்னை தந்தை என்றும் ,விவாகத்தின்போது பெண் புதுப்பிறவி எடுக்கிறாள் என்றும் அங்கு அக்கினி சாட்சியாக ,தேவர்கள் சாட்சியாக,இரு வீட்டாரின் பித்த்ருக்கள் சாட்சியாகக் கணவனாக வரப்போகிறவனிடமும் அவனது பெற்றோர்களிடமும் பெண் ஒப்படைக்கப் படுகிறாள் என்றும் திருமணம் ஆன  விநாடியிலிருந்து அப்பெண்ணுக்கு கணவனே தெய்வம் என்றும் அவனது பெற்றோர்கள் இவளுக்கும் தாய் தந்தையர் என்றும் பொருளாகும்.
             இடம் பெயர்தல்,புலம் பெயர்தல்,மனித இயற்க்கை.இடம் பெயர்தலுக்கானக் காரணம் வேண்டுமானால் காலத்தைப்பொறுத்து மாறுபடலாம்.தண்ணீரைத்தேடி,உணவு தேடி,பிழைப்பு தேடி ,உறவுகள் தேடி புலம்  பெயர்ந்தவர்கள் எண்ணற்றோர்.ஆடுகள்,மாடுகள்,மிருகங்கள் காலத்திற்கேற்ப இடம் மாறுகின்றன.மீன்கள்,பறவைகள் போன்றவைகளும் இடம் மாறுகின்றன.புத்தர்,ஏசுநாதர்,முகமது நபி போன்றவர்கள் உண்மையைத்தேடி இடம் மாறினார்கள்.இந்த அலைதல்  எப்பொழுது நிற்கும் ? நிற்காது.செயலாற்றும் திறமையும்,அறிவின் தேடுதலும் தொடரும் வரை "அலைதல்  " தொடரும்.செயற்ற மனிதன் உட்கார்ந்து விடுகிறான்.மன  வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும்போது "அலைதல் " குறைந்துவிடுகிறது.
               கற்றுணர்ந்த குடும்பங்களில் பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றுமிடங்களில் பெண் புலம் பெயர்ந்து கணவனையடைகிறாள்.கணவன் வீட்டில் புதுமணப்  பெண் திருமகளாக வரவேற்கப்படுகிறாள்.பால் பற்கள் விழுந்து உறுதியானப் பற்கள் முளைப்பதுபோல் ,விதைத்த இடத்தில் முளைத்த பயிரை விளை  நிலம் பார்த்து எடுத்து நட்டவுடன் புதுவேர்கள் புத்துணர்வுடன் பரந்து விரிவதைப்போல் புதுமணப்பெண் கணவனுடன் ஒன்றி தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்குகிறாள் .உறவுகள் பெருகவும் ,சமுதாயம் சீரடையவும்,சத் புத்திரர்களையும் ,மகா புருஷர்களையும் அவர்கள் ஈன்றெடுக்க இறையருள் துணை புரி கிறது.



                     திருமண பந்தத்திற்கு குறிப்பாக முன் பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணும் ஆணும் திருமண பந்தத்தில் இணையும்போது இந்த குறுந்தொகை பாடல் உவமையாகக் காட்டப்படுகிறது.

                       யாயும் ஞாயும் யாராகியரோ
                       எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர் ?
                       யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
                       செம்புலப் பெயல்நீர் போல
                        அன்புடை நெஞ்சம் தாம்  கலந்தனவே.

                 இது ஒரு அற்புதமானப் பாடல்.மனித வாழ்வின் சிறப்பிற்கு அறிவும்,உணர்வும் ஒரு உன்னத நிலையை அடையவேண்டும்.இதுபோன்ற சங்க காலப் பாடல்களின் உட்பொருளை விளக்க முற்பட்ட பெரியோர்கள் தங்களது அறிவிற்கும் உணர்வுக்கும் எட்டிய விதமே விளக்கம் சொன்னார்களேயொழிய இதுதான் விளக்கம் என்பது பாடல் இயற்றிய அந்த மறைமொழி மாந்தர்களுக்கே தெரியும்.
            இந்த குறுந்தொகைப் பாடலுக்கு விளக்கம் சொல்ல வந்தவர்கள் "செம்மண் பூமியில் மழை பொழிந்து நிறமற்ற மழை நீர் செம்மண்ணுடன் கலந்து செந்நீராக மாறுவதுபோல் " என்பார்கள்.செம்மண்ணுடன் கலந்து சிவப்பாக மாறிய நீர் ஓரிடத்தில் தேக்கம் ஏற்படும்பொழுது கலங்கல்  தெளிவடைந்து தெளிந்த நீர் மேலாகவும் செம்மண் கீழாகவும் பிரிந்துவிட  வாய்ப்புண்டு.ஆதலால் இப்பாடலுக்கு வேறுவிதமாகப் பொருள் கொள்ளவேண்டும்.
                 செம்புலம் என்பதற்கு பாலை நிலம்-வறண்ட பூமி என்று ஒரு பொருள் உண்டு.பாலை நிலத்தில் மழை பொழிவது ஒரு அதிசயம்.! அற்புதம் ! பாலை நிலத்தில் மழை பொழியும்போது அங்கு ஒரு புது உற்சாகம் வெடித்துக் கிளம்புகிறது.இலேசாக மேகம் சூழ்ந்த கோடைகால மாலை நேரத்தில் காற்று வீசும்போது மேய்ச்சலிலிருக்கும் மாடுகள் திடீரென்று வாலைத்தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாகக்  குறுக்கும் நெடுக்கும் ஓடும்.இது அந்த பருவநிலை ஏற்படுத்தும் மாற்றங்கள்.ஆண்  மயில் தோகை விரித்தாடும். புது மழையின் மண் வாசமும் அப்படித்தான்.இதை நேரில் பார்ப்பதும் அந்த சுகத்தை அனுபவிப்பதும் அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கவிதை எழுதுவதும் தனி மனிதர்களுக்கு சொந்தமானது.




                   எனது மகிழ்ச்சி உனது மகிழ்ச்சியாக இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்.? ஆனால் பாலை நிலத்தில் பெய்யும் மழைநீர் எல்லா உயிரினங்களையும் சிலிர்க்க வைக்கிறது.பொட்டல்  நிலமாக இருந்த பாலையில் புதுப் பயிர்கள் வெடித்துக் கிளம்புகின்றன.யார் இன்னார் என்று அறியாத நெஞ்சங்களில் மகிழ்ச்சி பெருவெள்ளம் கிளர்ந்து எழ அவை இரண்டும் கலந்த ஒரு புது நிறமாக மாறுகிறது.இது பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவது என்பது இனி கிடையவே கிடையாது.இந்தப் பருவத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்தப் பயிரோடுதான் முடியும்.
                அதுபோல் இவனுக்கு இவள் என்று இறைவன் வகுத்ததைக் கண்டுகொண்ட இந்தப் புதுமணப்  பெண்ணும் பிள்ளையும் இனி வாழும் காலம் முழுவதும் புதுப்பொலிவோடு வாழவேண்டும் என்பதே இறைவன் கட்டளை.இதில் பிரிவு என்பதோ மாற்றம் என்பதோ கிடையாது.இதுதான் "செம்புலப் பெயல் நீர்"என்பதற்குப் பொருத்தமான விளக்கம்.
               திருமணமும் அதன் தொடர் நிகழ்வுகளும் இன்று மிகவும் கொச்சை படுத்தப்படுகிறது.உடலுறவுகள் அங்கம் அங்கமாகச் சிதைக்கப்பட்டு விமர்சிக்கப் படுகின்றன. " அந்தரங்கம் புனிதமானது " என்பார்கள்.இனச்சேர்க்கை எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பது தவறான கருத்து.
                   மனித இனத்தின் தாம்பத்தியம் ஞானேந்திரியங்களாலும் (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ) கர்மேந்திரியங்களாலும் உணரப்படவேண்டும்.அப்படியானால் உணர்வுகள் எப்படி பொதுவானதாக இருக்கமுடியும் ?ஆக இல் வாழ்க்கை தனி மனிதர்களின் உணர்வுகளைப்பொறுத்து அமைவது.
                     பண்பட்ட  மனத்துடன் ஏற்கும் இல்லறம் சமன்படுத்தப்பட்ட நிலத்தில் செய்யும் விவசாயம் போன்றது.அங்கு சத்திய புத்திரர்கள்/புத்திரிகள்
தோன்றுவது இயற்கை..


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக