திங்கள், 20 ஜூன், 2016

                               மறுபடி பிறந்தால்......

            3. கல்லினுள் தேரை.

                 உடல் நலத்தோடு பிறக்கும் குழந்தைகளுக்கு கிராமம் ஒரு சொர்க்க பூமி.



கால் தரையில் படாமல் வளரும் சில மேல் தட்டு குழந்தைகளுக்கு அது ஒரு பொன்விலங்கு. சொர்க்கத்தில் துள்ளி விளையாடும் என்னைப் போன்ற விவசாயக் குடும்ப சிறுவர்களுக்கு காலில் சக்கரங்கள்,கைகளும் சிறகுகளும்தேவைக்கேற்பத்தோன்றும்.ஊர்விட்டு ஊர் போய் விளையாடுவதும்,ஆறு,குளம்,வாய்க்கால் என்று நீர் நிலைகளில் நீச்சலடிப்பதும் மரங்களிலேறி ஒரு மரம் விட்டு ஒரு மரம் தாவுவது ஒரு விளையாட்டு.

                     நாலைந்து குழந்தைகள் என்ற விவசாயக் குடும்பத்தில் யார் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள்?
             யாருமில்லை.அவர்கள் கடவுளின் குழந்தைகள்.படிக்காத பெற்றோர்கள்.கதைப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பரிட்சைக்குப் படிக்கிறேனம்மா என்றால் சூடகப் பால் கொண்டுவந்துக் கொடுத்து நன்றாகப் படி என்று உபசரிக்கும் வெள்ளந்தியான கிராம மக்கள்.

                    ஆனாலும் கல்வியின் இலக்குகளை சிதரடித்தப் பிள்ளைகள்.

                   
                   மண்ணைத் தொட்டு வணங்கிவிட்டு விண்ணை நோக்கி கைகளை ஏந்தும் விவசாயியானத் தந்தைக்கு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட நேரமேது.தோளிலும் மார்பிலும் துக்கி வளர்த்தேன் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாத இளமைப் பருவம் எங்களது.

                       மண்ணிலேப்பிறந்து அந்த நறுமனச்ச்கதியில் உழன்று மண்ணோடு மண்ணாகிப் போகும் அந்த மாமனிதர்களுக்கு பொழுது போக்கு,மாற்றுத்தொழில் உற்றம்,சுற்றம் உறவுகள் என்று எதுவும் பெரிதில்லை.எல்லாமே அந்த மண் தான்,

                  என் தந்தை வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருந்த நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.அவர் கண்ணீர்விட்டு நான் பார்த்ததே இல்லை.பாட்டியும் தாத்தாவும் இறந்தபோது இறுகிய முகத்துடன்தான் இருந்தார்.சக பயணியாக அவருக்கு யாருமே இல்லை.நாங்கள் எல்லோரும் பணியாளர்கள்தான்.




                       ஆனாலும் அவர் மனதிலே அன்பு இருந்தது.தன்  மக்கள் என்ற பெருமிதம் அவ்வப்பொழுது விரிந்து ஒளி வீசும் அவர் கண்களில் தெரிந்தது.

                        கல்லினுள் தேரை என்று நான் படித்திருக்கிறேன்,பார்த்திருக்கிறேன்.ஆனால் மனித உருவில் அது எனது தந்தை என்று உணர்ந்துகொண்டபோது எனக்கு சுமார் 20-22 வயதிருக்கும்.

                  இராணுவ அதிகாரியாகி 1965ல் நடந்த இந்திய -பாகிஸ்தானியப் போரில் புகுந்து புறப்பட்டு காலில் குண்டடிபட்டு வலது காலில்  பெரிய கட்டுடன் பத்தான்கோட்,டெல்லி,லக்னோவ்,சென்னை போன்ற
இராணுவ மருத்துவ மனைகள் பார்த்து அதே  கட்டுடன் சன்னா நல்லூர் வந்த என்னை  அருகில் வந்து தொட்டுப்பார்த்து
                                         " நம்ம துருப்புகள் ரொம்பவும் நாசமாகிவிட்டன" என்று சொல்லுகிறார்களே
என்ற பொழுது அவரின் கண்ணீர்த்துளிகள் என் முகத்தில் விழுந்தபொழுது

                    அந்த "கல்லினுள் தேரையை"அடையாளம் கண்டுகொண்டேன்.

          மறுபடி பிறந்தால் மண்ணை நேசித்த அந்த மாமனிதர்க்கே மகனாகப் பிறக்க வேண்டும்.நமது சன்னா நல்லூர் மண்ணை உலகின் கீழ் கோடியான தென் துருத்திலே தூவிய உங்கள் மகனை வாழ்த்துங்கள் அப்பா என்று அவர் பொற்பாதங்களில்   பணியவேண்டும்.



6 கருத்துகள்:

  1. மெய்சிலிர்க்க வைக்கின்றது தந்தையின் நினைவு!

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே !

    கடல் கடந்து நின்றும் எண்ணத்தளவில் மிக அருகில்
    இருப்பதுபோல் இருக்கிறது.
    எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இன்றைய இளைய சமுதாயம்
    விண்ணை நோக்கி உயரவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

    தங்களது தனிமரத்தைத் தோப்பாக்க நானும் கன்று நாட்டு நீர் வார்த்து பாதுகாப்பேன்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி ஜெயக்குமார்.மனதில் புதைந்துள்ள நினைவுகள் மனித சமுதாயத்திற்கு உபயோகப்படுமானால்
      அவற்றை வெளிப்படுத்துவது நமது கடமை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  4. உள்ளத்தைத் தொடும்
    அருமையான பதிவு

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  5. .நன்றி நண்பரே.
    எனது web site,"pavadaiganesan.com" ஏராளமான செய்திகளுடன் வருகிறது. முடிந்தால் பாருங்கள்.
    கருத்து மோதலுக்கு விரைவில் வருகிறேன்.

    பதிலளிநீக்கு