வெள்ளி, 17 ஜூன், 2016

                                                       மறுபடி பிறந்தால்.....1.கிராமப் புற வாழ்க்கை.


           இந்தியத் திருநாடு கிராமங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஒரு காலத்தில் சொல்லுவார்கள்.இன்று அப்படி சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.

                             ஆடு,மாடுகள், கோழி என்றும் காவலுக்கு நாய் என்றும் இயற்கையோடு இயைந்து உறவாடும் வாழ்க்கை இனி தேடினாலும் கி.டைக்காது.

                                    ஆறு,குளம்,கால்வாய் என்று ஊரின் நான்கு புறமும் சிலம்பம் விளையாடும் நீர்நிலைகள்.அதிகாலையில் உண்மையிலேயே சிலம்பம் கற்றுக்கொள்ளும் சிறுவர்கள் குளக்கரையிலும் கலத்துமேட்டிலும் துள்ளித்திரிவதை இனி எக்காலத்தில் காண்போம்.

                      இனியொரு பிறவி உண்டென்றால் நான் கிராமத்திலேயே   பிறக்கவேண்டும்.மடி முட்டிக் குடிக்கும் கன்றை இழுத்துக் கட்டிவிட்டு பால் சுரந்து தடித்து நிற்கும் பசுவின்  மாடியிலிருந்து வேகம் வேகமாகப் பால் கறக்க  வேண்டும்.

                                 பின்னர் ஒரே ஓட்டமாக ஓடி சுறா மீன் நீரில் பாய்வதுபோல் குளத்தில் பாய்ந்து இக்கரைக்கும் அக்கரைக்குமாக நாலைந்து சுற்று நீச்சலடித்துவிட்டு கரையேறி வீட்டுக்கு ஓடி பள்ளிக்குத் தயாராகி தோளில் மாட்டியபுத்தகப்பை, கட்டைவிரலில் தொங்கும் டிபன்பாக்ஸ் பாக்கெட்டில் இங்க்பாட்டில்  ஆற்றின் கரையோரமாகவே 3 மைல் தூரத்தில் உள்ளப் பள்ளிக்கு ஓட்டம்.

                       மீண்டும் கிடைக்குமா அந்த வாழ்க்கை.

               வழியெல்லாம் நாவல் மரங்களும் புளியமரங்களும் இருக்க பருவ காலங்களுக்கேற்ப  ஒவொரு மரமும் பூத்துக்குலுங்க மரங்களிலேறி சுடாத பழம் சாப்பிடும் நாள் இனி வருமோ. அரை செங்கல் எடுத்து உயர்ந்த தென்னை மரத்தில் குறிபார்த்து அடிக்க தொப் என்று விழும் தேங்காயை எடுத்துக்கொண்டு ஓடிய நாட்கள் இனி வருமோ.
 
                    மறுபடி பிறந்தால்......நான் கிராமத்திலேயே  பிறக்க வேண்டும்.முன்னேரு,பின்னேரு என்று ஏறுபூட்டி முப்போகம் விளைவிக்கவேண்டும்.

                                       வாழ்ந்தே தீருவேன்.
Image result for village agriculture tamilnadu activities photoகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக