திங்கள், 31 ஜூலை, 2017


                                      உருவமற்ற குரல் .
     
                       பாவாடை-தெய்வானை என்ற பெற்றோர்களுக்குப்  பிறந்த குழந்தைகளுள்  ஒரு ஆண் குழந்தைக்கு அவர்கள் "கணேசன்"என்று பெயரிட்டு வளர்த்தனர் .இவரது வாழ்க்கை அனுபவங்களைப்  படிக்கும்போது "வளர்த்தனர் "என்பது சரியான சொல்லாக இருக்காது."பெயரிட்டனர்" என்பதோடு நிறுத்திக்கொள்ளலாம் .

                            கிராமப்புறத்து நடு மட்ட விவசாயக்குடும்பம் என்பதால் வீட்டில் மனிதர்களுடன் ஆடு,மாடு,கோழி  என்றும் சுற்றுப்புறங்களில் ஆறு,குளம் ,வாய்க்கால் ,வரப்பு என்ற சூழ்நிலைகளுக்கிடையிலேயே  அவர் வளர்ந்தார்.

                                      

                         இன்றைய நாகரீக வாழ்க்கையைப்போல் இல்லாமல் அன்றைய கிராமப்புறத்தில் குழந்தைகள் வளர்ந்த விதம் வித்தியாசமானது.அப்பா நிலபுலன்களைப்பார்க்கவும் அம்மா குடும்பத்ததையும் குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளவும்அண்ணன் தம்பி அக்காள் தங்கை அவரவர்கள் வேலைகளைப்பார்க்கவும் வேலைக்காரர்கள் ஆடு மாடுகளைப் பார்க்கவும் குழந்தைகள் தாமாகவே வளர்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

                       சற்றே படித்த குடும்பத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லுகையில் விவசாயக்குடும்பத்தில் குழந்தைகள் வளர வளர விவசாய வேலைகளுக்கும் ஆடு,மாடுகள் மேய்க்கவும் ,மீன் பிடிக்க,தோட்டம் தொரவுகள் பார்க்கவும் போய்விடுவார்கள்.

                             பக்கத்து வீட்டு பையன் பள்ளிக்கூடம் போகையில் நான்மட்டும் மாடுமேய்க்கப் போகவேண்டுமா என்று ஒரு துணிப்பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் என்ற அந்த  பவித்திரமான கோவிலுக்குள் நுழைந்தார்கள் கணேசனும் அவரது சகோதரர்களும்.

                                              Image result for thanjavur dt village scene


                       ஐந்தும் மூன்றும் எத்தனை என்றால் ஐந்துக்குப்பிறகு  ஆறு,ஏழு ,எட்டு என்று விரல்விட ஆரம்பித்தார்கள்.காலம் அவர்களைத்தாலாட்டியது.கணிதத்திலும்  விஞ்ஞானத்திலும் ,மொழியிலும் அதுவரையிலிருந்த பதிவுகளையெல்லாம் அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

                             கழக உயர்நிலைப்பள்ளிக்கூடம் ,நன்னிலம் என்ற கல்விக்கூடத்தில் 1947, S S LC தேர்வில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றார் அவரது மூத்த அண்ணன் .1957 ல் அதே தேர்வில் 500 க்கு 488 மதிப்பெண் பெற்று பள்ளிக்கூடத்தில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார் அவரது அடுத்த அண்ணன் .

                      அண்ணன்  தம்பிகளுள் கணேசன் வித்தியாசமானவராக உருவெடுக்க ஆரம்பித்தார்.1949 ல்  மூன்றாம் வகுப்பிலிருந்த கணேசன் அரையாண்டுத்தேர்வில் நான்காம் வகுப்பிற்கும் ஆண்டுத்தேர்வில் ஐந்தாம் வகுப்பிற்கும் மாற்றப்பட்டார்.

                          ஊரில் நான்குபுறமும் குளங்கள் .ஆறும் வாய்க்காலும் வயலும் என எங்குபார்த்தாலும் தண்ணீர்.நடைபயிலுமுன்பே நீச்சல் பழகினார்கள் சகோதரர்கள்.ஊரைச்சுற்றிலும் மரங்கள்.தென்னை மரம் ஏறுவதும் பனைமரம் ஏறுவதும் மற்றகிளைகளுடனான மரங்கள் ஏறுவதும் வித்தியாசப்படும் .எந்த சூழ்நிலையிலும் தன்னைக்காத்துக்கொள்ளும் சுய பாதுகாப்பாக கிராமத்துக்கே உரிய எல்லா கலைகளிலும் வித்தகர்களானார்கள்.

                                            Image result for village scene,swimming climbing tree etc

                                 சுமார் நாலைந்து வயது சிறுவர்களாக கணேசனும் அவரது அண்ணனும் தெருக்கோடியிலிருந்த கிணற்றுக்கு குடிதண்ணீர் கொண்டுவர சென்றார்கள்.சுமார் மூன்றடி கைப்பிடி சுவற்றில் ஏறி நின்று குடத்தில் கயிறு கட்டி தண்ணீர் தூக்கவேண்டும்.சுமார் 15 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது.கிணற்றின் உள்ளே இறங்க வளையம் வளையமாக படிகள் சுமார் இரண்டு அங்குலம்  இருக்கும்.அண்ணன் தண்ணீர் தூக்கி குடத்தில் நிரப்ப கணேசன் கிணற்றின் முதல் உள்படியில் இறங்கி நின்றுகொண்டு பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.காய்ந்திருந்த கிணற்றின் உள்புறம் ஒன்றிரண்டு வாளி தண்ணீர் தூக்குகையில் சிதறிய தண்ணீர் காரணமாக படிந்திருந்த பாசி ஈரமாகிவிட்டது.

                      கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசன் நின்றிருந்த படி வழுக்கிவிட கணேசன் தடால் என கிணற்றுக்குள் விழுந்தார்.

                            சுவற்றில் எங்கும் அடிபடவில்லை .வாளி மேலே தூக்கப்பட்டிருந்ததால் வாளியில் மோதிக்கொள்ளவில்லை.நீச்சல் தெரிந்திருந்ததால் நீரில் மூழ்கிப்போய்விடவில்லை.ஆகாயத்தில் இறைவெளி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.

                     அண்ணனும் சப்தம் கேட்டு ஓடிவந்த இன்னொரு சிறுவனும் சேர்ந்து கயிற்றை கிணற்றில் விட கணேசன் கயிற்றைக்கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலேவந்தார்.

                                 வாழ்க்கைச்சக்கரம் உருண்டோடியது.

                   ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடையே சண்டை வர முத்துவேல் என்ற சிறுவன் கணேசனை அடித்துவிட்டு ஓடினான்.கணேசன் அவனை விரட்ட ஆரம்பித்தார்.அப்படி இப்படி ஓடிய முத்துவேல் திடீரென்று குளத்தில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தான்.கணேசனும் விடாமல் குளத்தில் பாய்ந்து நீந்த நடுக்குளத்தில் முத்துவேலைப் பிடித்துவிட்டார்.மீண்டும் சண்டை.ஒரு நிலையில் முத்துவேலை தண்ணீருக்குள் அழுத்த அவன் மூச்சுவிட முடியாமல் திணற ஒரு நிமிடம் !ஒரே ஒரு நிமிடம்! அவன் இறந்துவிட்டால்......இந்த எண்ணம் மனதில் தோன்ற கணேசன் தனது பிடியைத் தளர்த்திவிட்டு  கரைக்குத்திரும்ப நீந்தினார்.முத்துவேல் அழுதுகொண்டே பின்னால் நீந்தி வந்தான்.

                    அன்று முத்துவேல் இறந்திருந்தால்..........கணேசன் சிறுவர்கள் சீர் திருத்தப்பள்ளியிக்குப் போய் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கலாம்.

                                         காலம் ஓடியது........

                  ஆரம்ப கல்வி முடிந்து உயர் கல்விக்காக சுமார் 3-4 கி .மீ, தூரத்திலுள்ள நன்னிலம் உயர்நிலைப்பள்ளியில் 6-ம்  வகுப்பில் சேர்ந்தார்.தினமும் 3-4 கி .மீ போகவும் 3-4 கி.மீ  திரும்பவும் என 6-7 கி.மீ நடை,ஓட்டம் ,வழியெல்லாம் விளையாட்டு.சன்னாநல்லூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றின் கரைவழியேதான் நடை.குறுக்கு வழியென்றால் வயல்வரப்பு,இரண்டு மூன்று வாய்க்கால் தாண்டிப்போகவேண்டும்.சில நேரம் சாலை வழியாகவும் சிலநேரம் குறுக்கு வழியிலும் சிறுவர்களும் சிறுமிகளும் ஓடுவார்கள்.ஊர் சிறுமிகளுக்கு சிறுவர்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து முன்னும் பின்னுமாக நடப்பார்கள்.

                     சாலையின் இருபுறமும் புளி ,நாவல்,மா தென்னை என மரங்கள் அந்தந்த காலத்திற்கேற்ப பூவும் காயும் கனியுமென்றிருக்கும்.பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் காய்,கனிகளை பறிப்பது வழக்கம்.நாவல் பழ காலத்தில் மரம் ஏறத்தெரியாத ஒரு சிறுவர் கூட்டம் எப்பொழுதும் கணேசன் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும்.

                               அப்படி ஒருமுறை ஒரு கூட்டம் பின்தொடர கணேசன் நாவல் மரம் ஏறினார்.உச்சி கிளையைப்பிடித்து உலுக்க நாவல்பழம் கீழே
உதிர்ந்தது.கீழ் கிளையில் நின்றுகொண்டு மேல்கிளையை உலுக்க திடீரென்று இரண்டு கிளைகளும் முறிந்து கணேசன் கையில் பிடித்த கிளையுடன் கீழே விழ ஆரம்பித்தார்.அதிர்ஷ்ட்ட வசமாக கையில் பிடித்திருந்த கிளை மற்றோரு கீழ் கிளையில் மாட்டிக்கொள்ள  கிளையுடன் தொங்கிக்கொண்டிருந்த கணேசன் வளைந்து ஏறி அடுத்த கிளை  வழியாக கீழே இறங்கினார்.பயத்தில் உறைந்துபோயிருந்த மற்ற சிறுவர்களுக்கு அப்பொழுதுதான் உயிர் வந்தது.

                                தரையில் கால்வைத்த கணேசனை விண்ணும் மண்ணும் ஆசிர்வதிக்க காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.

                       1958  மார்ச் கணேசன் S S L C  தேர்வு எழுதவேண்டும்.வீட்டில் வித்தியாசமான சூழ்நிலை.அம்மா காசநோய் காரணமாக தஞ்சாவூர் மருத்துவ மனையில்.மூத்த அண்ணன் ,அக்காள் ,இளைய அண்ணன் எல்லோரும் வெளி ஊர்களில்.வீட்டில் அப்பா,இரண்டு தம்பிகள் (14,8 வயது) ஒரு தங்கை (10 வயது).காலை 4 மணிக்கு எழுந்திருக்கும் கணேசன் சாதம் வடித்து ,ரசம் வைத்து,பின்னர் அன்றைய தேர்வுக்கான பாடத்தைப் படித்துவிட்டு நன்னிலம் பள்ளிக்குப் புறப்பட்டு ஓடுகையில் அப்பா ஹோட்டலில் இட்டிலி வாங்கி வைத்துக்கொண்டு நிற்பார்.3-4 கி.மீ. ஓடி கலைப் பரீட்சை எழுதுவார்.பின்னர் பள்ளிக்குப் பின்புறமிருக்கும் மதுவனேஸ்வரர் கோவிலில் போய் உட்கார்ந்து பகலுணவு சாப்பிட்டுவிட்டு மாலைத் தேர்வுக்கான பாடத்தைத்திருப்பிவிட்டு  வந்து தேர்வு  எழுதுவார். தேர்வு முடிந்து வீட்டுக்கு ஓடிவந்து மற்ற வேலைகள்,மறுநாள் தேர்வுக்கான ஆயத்தம்.                                                         Image result for village school

                              தேர்வு முடிந்து வீட்டு வேலைகள்,ஆடு,மாடுகள் பராமரிப்பு ,வயல் வேலைகளில் அப்பாவுக்குத் துணை என்று நாட்கள் ஓடின.என்றோ ஒருநாள் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வந்திருக்கின்றன என்று ஊர் மக்கள் சொல்ல மறுநாள் பழைய பேப்பரில் தனது தேர்வு எண்ணை பார்த்துவிட்டு மற்ற வேலைகளைப்பார்க்க போய்விட்டார்.

                     சுமார் 10-15 நாட்கள் சென்று அவரது மூத்த அண்ணன் ஊருக்கு வந்தார்.கணேசனிடம் mark sheet,Transfer certificate எல்லாம் வாங்கிவிட்டாயா என்று கேட்டார்.அதுவரை அந்த பெயர்களைக் கேள்விப்பட்டிருக்காத கணேசன் விழித்துக்கொண்டு நின்றார்.அண்ணனின் அறிவுரைப்படி பள்ளிக்கு சென்று எல்லாவற்றையும் வாங்கிவந்து அவரிடம் கொடுத்துவிட்டு வயலுக்குப் போய்விட்டார்.

                                     இன்னும் சில நாட்கள் சென்று அண்ணன் வந்து செட்டிநாடு அண்ணாமலை தொழிற்நுட்பக் கல்லூரியில் மூன்றாண்டு படிப்புக்கான interview க்குப் போகவேண்டும் என்று அழைத்துச்சென்றார்.அங்கேயே சேர்ந்துவிட முடிவானது.ஒருசில நாட்களில் கணேசன் சன்னாநல்லூரைப் பிரிய நேர்ந்தது.ஒருமுறை ஆறு,குளம்,வயல்,வாய்க்கால்,ஆடு,மாடுகள் ,மரம்,செடிகொடிகள் எல்லாவற்றையும் கண்கள் கலங்க பார்த்துவிட்டு கணேசன் சன்னாநல்லூரைப்பிரிந்தார் .

                     உருவமற்றகுரல் உருவாக  ஆரம்பித்தது.

                                                                                      (  தொடருவோம் ..........)                                   Image result for Annamalai polytechnic.chettinad


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக