திங்கள், 20 ஜூன், 2016

                               மறுபடி பிறந்தால்......

            3. கல்லினுள் தேரை.

                 உடல் நலத்தோடு பிறக்கும் குழந்தைகளுக்கு கிராமம் ஒரு சொர்க்க பூமி.



கால் தரையில் படாமல் வளரும் சில மேல் தட்டு குழந்தைகளுக்கு அது ஒரு பொன்விலங்கு. சொர்க்கத்தில் துள்ளி விளையாடும் என்னைப் போன்ற விவசாயக் குடும்ப சிறுவர்களுக்கு காலில் சக்கரங்கள்,கைகளும் சிறகுகளும்தேவைக்கேற்பத்தோன்றும்.ஊர்விட்டு ஊர் போய் விளையாடுவதும்,ஆறு,குளம்,வாய்க்கால் என்று நீர் நிலைகளில் நீச்சலடிப்பதும் மரங்களிலேறி ஒரு மரம் விட்டு ஒரு மரம் தாவுவது ஒரு விளையாட்டு.

                     நாலைந்து குழந்தைகள் என்ற விவசாயக் குடும்பத்தில் யார் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள்?
             யாருமில்லை.அவர்கள் கடவுளின் குழந்தைகள்.படிக்காத பெற்றோர்கள்.கதைப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பரிட்சைக்குப் படிக்கிறேனம்மா என்றால் சூடகப் பால் கொண்டுவந்துக் கொடுத்து நன்றாகப் படி என்று உபசரிக்கும் வெள்ளந்தியான கிராம மக்கள்.

                    ஆனாலும் கல்வியின் இலக்குகளை சிதரடித்தப் பிள்ளைகள்.

                   
                   மண்ணைத் தொட்டு வணங்கிவிட்டு விண்ணை நோக்கி கைகளை ஏந்தும் விவசாயியானத் தந்தைக்கு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட நேரமேது.தோளிலும் மார்பிலும் துக்கி வளர்த்தேன் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாத இளமைப் பருவம் எங்களது.

                       மண்ணிலேப்பிறந்து அந்த நறுமனச்ச்கதியில் உழன்று மண்ணோடு மண்ணாகிப் போகும் அந்த மாமனிதர்களுக்கு பொழுது போக்கு,மாற்றுத்தொழில் உற்றம்,சுற்றம் உறவுகள் என்று எதுவும் பெரிதில்லை.எல்லாமே அந்த மண் தான்,

                  என் தந்தை வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருந்த நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.அவர் கண்ணீர்விட்டு நான் பார்த்ததே இல்லை.பாட்டியும் தாத்தாவும் இறந்தபோது இறுகிய முகத்துடன்தான் இருந்தார்.சக பயணியாக அவருக்கு யாருமே இல்லை.நாங்கள் எல்லோரும் பணியாளர்கள்தான்.




                       ஆனாலும் அவர் மனதிலே அன்பு இருந்தது.தன்  மக்கள் என்ற பெருமிதம் அவ்வப்பொழுது விரிந்து ஒளி வீசும் அவர் கண்களில் தெரிந்தது.

                        கல்லினுள் தேரை என்று நான் படித்திருக்கிறேன்,பார்த்திருக்கிறேன்.ஆனால் மனித உருவில் அது எனது தந்தை என்று உணர்ந்துகொண்டபோது எனக்கு சுமார் 20-22 வயதிருக்கும்.

                  இராணுவ அதிகாரியாகி 1965ல் நடந்த இந்திய -பாகிஸ்தானியப் போரில் புகுந்து புறப்பட்டு காலில் குண்டடிபட்டு வலது காலில்  பெரிய கட்டுடன் பத்தான்கோட்,டெல்லி,லக்னோவ்,சென்னை போன்ற
இராணுவ மருத்துவ மனைகள் பார்த்து அதே  கட்டுடன் சன்னா நல்லூர் வந்த என்னை  அருகில் வந்து தொட்டுப்பார்த்து
                                         " நம்ம துருப்புகள் ரொம்பவும் நாசமாகிவிட்டன" என்று சொல்லுகிறார்களே
என்ற பொழுது அவரின் கண்ணீர்த்துளிகள் என் முகத்தில் விழுந்தபொழுது

                    அந்த "கல்லினுள் தேரையை"அடையாளம் கண்டுகொண்டேன்.

          மறுபடி பிறந்தால் மண்ணை நேசித்த அந்த மாமனிதர்க்கே மகனாகப் பிறக்க வேண்டும்.நமது சன்னா நல்லூர் மண்ணை உலகின் கீழ் கோடியான தென் துருத்திலே தூவிய உங்கள் மகனை வாழ்த்துங்கள் அப்பா என்று அவர் பொற்பாதங்களில்   பணியவேண்டும்.



சனி, 18 ஜூன், 2016

                                   மறுபடி பிறந்தால்........

          2.நட்பு என்பது என்ன.

                                  கிராமத்து வாழ்க்கை இயற்கை நடத்தும் பள்ளிக்கூடம் போல் எனக்கு இருந்தது.ஓடும் நீரில் துள்ளி விளையாடும் மீன்களைப் பார்த்துக்கொண்டே இருந்த நாட்களுமுண்டு.ஆனாலும் அன்பு என்பது என்ன,நட்பு  என்பது என்ன,பாசம் என்பது என்ன,கடமை என்பது என்ன போன்ற எண்ணங்கள் என் சிந்தையை சிதறடித்த நாட்களுமுண்டு.

                       இரண்டு அண்ணன்கள்,இரண்டு தம்பிகள்,ஒரு அக்காள்,ஒரு தங்கை என்ற பெரிய குடும்பத்தில் என் பெற்றோர் பள்ளிக்கூடம்  பார்த்தறியாதவர்கள்.ஆனால் பிள்ளைகளில் சிலர் கல்வியின் வரம்புகளில் புதிய இலக்கு நிர்ணயித்தவர்கள்.

                      அண்ணன் தம்பிகளிடையே ஏற்படும் உறவை பாசம்,அன்பு,கடமை என்ற எல்லைக்குள் அடைத்துவிட முடியுமா.இளமைப் பருவத்தில் கடமை என்பதைத்தவிர  வேறு விளக்கம் என்னால் கொள்ள முடியவில்லை.

                                  அன்பின் வழியது உயிர்நிலை அஹ்திலார்க்கு 
                                   என்புதோல் போர்த்த உடம்பு 
                 
                       என்ற குறளை மனப்பாடம் செய்து தேர்வு எழுதியபோது என் உற்றம் சுற்றதிடையே எனக்கு ஏற்ப்படுவது என்ன என்று நான் குழம்பியதுண்டு.

                   காலமெனும் காட்டாறு கரைபுரண்டோட நான் கல்லுரி வாசலில் நின்றேன்.1957ல் 500க்கு 487 மதிப்பெண் பெற்ற அண்ணனுக்குக் கிடைக்காத கல்லுரி வாழ்க்கை எனக்குக் கிடைத்தது.புதிய இடம்,புதிய வாழ்க்கை.

                            இங்கும்கூட நட்பு என்பதை உணரமுடியவில்லை.ஒன்றாக உறங்கி எழுந்து,ஓடிவிளையாடினாலும் கடமை  என்பது முன் நின்றதே தவிர நட்பு அல்லது அன்பு என்பது உணரப்படவில்லை.

                             இந்நிலையில் முதலாமாண்டு தேர்வு எழுதி முடித்து இரண்டு மாத விடுமுறையில் புறப்படும்  நாள்.நானும் எங்கள் பக்கத்துக்கு ஊர் பையனும் ரயிலில் ஏறப்போகிறோம். உடன்  படிக்கும் நண்பன் அருணாச்சலம் காலை முதல் என்கூடவே வருகிறான்.ஏன் இவன் என்கூடவே வருகிறான் என்று எனக்குப் புரியவில்லை.

                      ரயிலில் ஏறப்போகும் சமயம் எனது கைக்குட்டையைப் பிடுங்கிக்கொள்கிறான்.எனது அண்ணன் கொடுத்தது அது.இந்த முட்டாள்     ஏன்   அதைப் பிடுங்குகிறான்.கொடுடா என்று சண்டை போடுகிறேன்.

                      உடன் நின்று கொண்டிருந்த பையன் அந்த ,அவன் நட்பின் ஆழத்தைப் புறிந்து கொண்டதுபோல் விட்டுவிடு என்று என்னை இழுக்கிறான்

                         இன்று சுமார் 56 ஆண்டுகள் சென்ற பின்னும் அந்த அருணாச்சலத்தைத் தேடுகிறேன்.அன்று விடுமுறையில் வந்த சில நாட்களில் அவனது கடிதம் வந்தது.ஆங்கில மீடியத்தில் படித்திருந்த அவனது கடிதம்....

                   Ganesh ! I love you so much.I want you to become a gentleman of kind heart,good character,and a hero for the younger generation.It is a pitty that I am not able to express my love and affection,in different way.I will be watching you from distance.Read the book "of human bondage"you may understand Provis and Pip.

                    இனிய நண்ப ! உனது ஆசைப்படியே நான்  "Gentleman cadet "என்று அழைக்கப்பட்டு இந்தியத் திருநாட்டின் தென்  துருவ ஆய்வுதளமான "தக்ஷின் கங்கோத்ரியின்"தலைவராக உயர்ந்து உலகிலேயே "Para sailing" என்ற வீர விளையாட்டை உறை பனி உலகமான அன்டார்க்டிக்காவில் நடத்திய முதல் மனிதன்,அவன் தமிழன் என்று பதிவு செய்துள்ளேன்.நீ எங்கிருந்தாலும் இதை அறிந்து பெருமைப்படலாம்.

                           இன்னா செயினும் விடுதற்  கரியாரைத் 
                           துன்னாத் துறத்தல் தகுவதோ -துன்னருன்சீர் 
                          விண்குத்து  நீள்வரை வெற்ப  ! களைபவோ
                           கண் குத்திற்றேன்று  தன் கை.

                    அருணாச்சலம் என்ற அந்த நண்பனைத் தேடுகிறேன்.

             மறுபடி பிறந்தால்  அவன் அன்பை உணரும் மனம் வேண்டும் .உயிர்களை அன்பிற்காக பிரதி உபகாரம் தேடாமல் நேசிக்கும் மனம் வேண்டும்.

வெள்ளி, 17 ஜூன், 2016

                                                       மறுபடி பிறந்தால்.....



1.கிராமப் புற வாழ்க்கை.


           இந்தியத் திருநாடு கிராமங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஒரு காலத்தில் சொல்லுவார்கள்.இன்று அப்படி சொல்லமுடியுமா என்று தெரியவில்லை.

                             ஆடு,மாடுகள், கோழி என்றும் காவலுக்கு நாய் என்றும் இயற்கையோடு இயைந்து உறவாடும் வாழ்க்கை இனி தேடினாலும் கி.டைக்காது.

                                    ஆறு,குளம்,கால்வாய் என்று ஊரின் நான்கு புறமும் சிலம்பம் விளையாடும் நீர்நிலைகள்.அதிகாலையில் உண்மையிலேயே சிலம்பம் கற்றுக்கொள்ளும் சிறுவர்கள் குளக்கரையிலும் கலத்துமேட்டிலும் துள்ளித்திரிவதை இனி எக்காலத்தில் காண்போம்.

                      இனியொரு பிறவி உண்டென்றால் நான் கிராமத்திலேயே   பிறக்கவேண்டும்.மடி முட்டிக் குடிக்கும் கன்றை இழுத்துக் கட்டிவிட்டு பால் சுரந்து தடித்து நிற்கும் பசுவின்  மாடியிலிருந்து வேகம் வேகமாகப் பால் கறக்க  வேண்டும்.

                                 பின்னர் ஒரே ஓட்டமாக ஓடி சுறா மீன் நீரில் பாய்வதுபோல் குளத்தில் பாய்ந்து இக்கரைக்கும் அக்கரைக்குமாக நாலைந்து சுற்று நீச்சலடித்துவிட்டு கரையேறி வீட்டுக்கு ஓடி பள்ளிக்குத் தயாராகி தோளில் மாட்டியபுத்தகப்பை, கட்டைவிரலில் தொங்கும் டிபன்பாக்ஸ் பாக்கெட்டில் இங்க்பாட்டில்  ஆற்றின் கரையோரமாகவே 3 மைல் தூரத்தில் உள்ளப் பள்ளிக்கு ஓட்டம்.

                       மீண்டும் கிடைக்குமா அந்த வாழ்க்கை.

               வழியெல்லாம் நாவல் மரங்களும் புளியமரங்களும் இருக்க பருவ காலங்களுக்கேற்ப  ஒவொரு மரமும் பூத்துக்குலுங்க மரங்களிலேறி சுடாத பழம் சாப்பிடும் நாள் இனி வருமோ. அரை செங்கல் எடுத்து உயர்ந்த தென்னை மரத்தில் குறிபார்த்து அடிக்க தொப் என்று விழும் தேங்காயை எடுத்துக்கொண்டு ஓடிய நாட்கள் இனி வருமோ.
 
                    மறுபடி பிறந்தால்......நான் கிராமத்திலேயே  பிறக்க வேண்டும்.முன்னேரு,பின்னேரு என்று ஏறுபூட்டி முப்போகம் விளைவிக்கவேண்டும்.

                                       வாழ்ந்தே தீருவேன்.




Image result for village agriculture tamilnadu activities photo







வியாழன், 16 ஜூன், 2016

                                                      மறுபடி பிறந்தால்.....
 
                          வழுத்துதற்கு எளிது ஆய் வார்கடல் உலகினில் 
                          யானை முதலா எறும்பு ஈறு ஆய் ......

                                                       செல்லா அ நின்ற இத்தாவர -சங்கமத்துள் 
                                                        எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் .......

                என்று உருகும் மாணிக்கவாசகரைப்போல் நான் எனது பிறப்பு இறப்பு பற்றிஎண்ணிப்பார்ப்பதுண்டு.இராணுவவாழ்க்கையில்எல்லைப்புறத்தில் எதிரிகளுக்கும்  இயற்கைக் கொடுமைகளுக்கும் ஈடு கொடுத்துப் போராடும் பொழுது என்னிலிருந்து என்னை விலக்கி வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்கும்பொழுது இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றும்.

                     அப்படிப்பட்ட நேரங்களில் " மறுபடி பிறந்தால்...."எப்படி வாழவேண்டும் என்று எண்ணிப் பார்ப்பேன்.
                  நினைவு தோன்றிய நாள் முதல் செய்த தவறுகள்,சொல்லிய பொய்கள்,பிறருக்கு உதவி செய்ய மறுத்த,பிறரை எள்ளி நகையாடிய, பிறருக்கு செய்த தீங்குகள் போன்ற எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தமாய் வாழவேண்டும் என்று நினைப்பேன்.

                             அப்படிப்பட்ட நினைவுகளில் முதலாவதாகத் தோன்றுவது

                                               கிராமப்புற வாழ்க்கை 
                     இந்த கிராமப்புற வாழ்க்கைப் பற்றியும் அடுத்து அடுத்து மனதில் தோன்றிய எண்ணங்கள் பற்றியும்  இனி வரும் நாட்களில் ஒரு தொடராகப் பார்ப்போம்








திங்கள், 13 ஜூன், 2016

                        மண்ணின்  மைந்தனைப் பாருங்கள். 

           இராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதை பொதுமக்கள் உணர்வதில்லை.
அதிகாரிகள்,அதிகாரிகள் அல்லாதவர்கள் என்ற இருபெரும் பிரிவாக இயங்கும் இராணுவ அமைப்புகள்
ரெஜிமெண்ட்,பட்டாலியன், கம்பெனி,பேட்டரி squadran,போன்ற பல பெயர்களால் அமைப்பைப் பொறுத்து அழைக்கப்படுகின்றன.
               The queen of the battle என்று அழைக்கப்படும் காலாட்படைப்பிரிவு முதல் டான்குப்படை (Armoured Corps) பீரங்கிப்படை (Artillery) பொறியாளர் படை (Engineers) தொலைத் தொடர்புப் படை (Signals) போன்று
சுமார் 20க்கும் மேலான படைப் பிரிவுகளின் தராதரம் அதில் உள்ள அதிகாரிகளைப் பொறுத்தே உயர்ந்தது,தாழ்ந்தது என்று வேறுபடுகின்றன.
           ஒரு பொறியாளர் படைப்பிரிவு தங்களது தலைவனின் பிரிவு உபசார விழாவில் இந்தப் பாடலைப் பாடினார்கள்.

                            மண்ணின் மைந்தனைப் பாருங்கள் 
                            மலர்கள் தூவி வாழ்த்துங்கள் 
                            இதயக் கதவைத் திறவுங்கள் 
                             இனிதே வருக! கூறுங்கள்........          (மண்ணின் மைந்தனைப் )

                             இன்னா நினையாப் பாரிலே 
                             சன்னா நல்லூர் ஊரிலே 
                             சந்தைக்கூட்ட மனிதர்களில் 
                             விந்தைகள் புரிய அவதரித்தான் 
                              பாலோடு பழமும் உண்ணுங்கள் 
                             பாவாடை-தெய்வானைப் பாடுங்கள் ...............(மண்ணின் மைந்தனைப்)

                              உருண்டுப் புரண்டு  விழுந்து எழுந்து 
                              உருவ மாற்றம் பலவும் பெற்று 
                              வளர்கின்றான்....வளர்கின்றான் 
                              கல்வி கேள்வி சொல்லிச் சேர்த்த
                              அறிவும் பிறவும் பெறுகின்றான்..............(பாலோடு பழமும் )

                              எல்லைப் புறங்கள் இதய வாசல் 
                              தொல்லை கொடுக்கும் பகைவர் படைகள் 
                              அன்னை பாரதம் அழுகின்றாள் 
                              ஆண்மை உள்ளோரை அழைக்கின்றாள் 
                              அன்பு ,பாசம்,ஆசை,காதல் இன்ப உலகின் எல்லை ஓரம் 
                              எல்லாம் துறந்து புறப்பட்டான் 
                               எங்கள் மண்ணின் மைந்தன் புறப்பட்டான்
                               வாழ்த்து கூறிப் பாடுங்கள் ! இனிதே வருக கூறுங்கள்......(மண்ணின் மைந்தனைப்)

                               கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு 
                               எட்டு திசையும் பட்டு ஒலிக்கும் 
                                பெயரும் புகழும் பெருகவே ,பெருமை வாழ்வு மலரவே 
                                4 ER....... எமது ER.... என்று 
                                பாரிலுள்ளோர் பாடவே 
                                இரவும் பகலும்  ஒன்றாகவே 
                                இன்னல்கள் களையும் ஏராகவே 
                                தங்கத் தம்பிகளின் துணைகொண்டு -ஒரு 
                                சிங்கம் போல அவன் வருகின்றான் 
                                 வாழ்த்து கூறிப் பாடுங்கள் ! இனிதே வருக கூறுங்கள்......(மண்ணின் மைந்தனைப் )

                                ஏழு கண்டம் தாண்டி இந்திய நாட்டின் 
                                 துருவக் குழுவுக்கு தலைமை ஏற்கும் 
                                எங்கள் தலைவன் வல்லவன் 
                                அவனின் பிரிவு .....முடிவல்ல... மீண்டும் 
                                 தொடரா உறவல்ல ........
                                 சென்று வருக....வென்று வருக.....தலைவனே.........

                  இது டெல்கியிலிருந்து சென்னை வந்த விமானத்தில்  பயணித்த கர்னல் தனக்காகவே
தயாரித்தது .சுமார் 1800 படை வீரர்கள் ஒருங்கிணைந்து அவருக்காகப் பாடினார்கள்.

                    4  Engineer Regiment  என்ற அவரது படைப் பிரிவு இந்திய இராணுவத்தின் ஒரு மிகச்சிறந்த பிரிவாக பல மாமனிதர்களால் இன்றும்  வழி நடத்தப்பட்டு   வருகிறது.

                               வாழ்த்துவோம்   வாருங்கள்

ஞாயிறு, 12 ஜூன், 2016

இனிதே வருக, இளமையோடு  வாழ்க,பெருமையோடு வெளியேறுக. 

               அய்யா வணக்கம்.
   ஒரு இளைநிலை அதிகாரி  பணிவோடு வணக்கம் சொல்லுகிறார்.
                   தலை நிமிர்ந்த கர்னல் பதில் வணக்கம் சொல்லி வந்தவரை அமரச்  சொல்லுகிறார்.

           அது ஒரு இராணுவ தளம்.இரண்டாம் உலக மகா யுத்தத்தில்  George Crooss என்ற இந்தியா போர்வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய வீர விருதைப் பெற்ற சுபேதார் சுப்பிரமணியத்தின் நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு இராணுவத்தளம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

                அய்யா! பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழர் படைப் பிரிவுத் தலைவராக வந்திருக்கிறீர்கள்.
சுபேதார் சுப்பிரமணியம் நினைவு நாளை மிக பிரமாதமாகக் கொண்டாடவேண்டும்.என்ற வேண்டுகோளை முன் வைக்கிறார் கர்னலைக் காண வந்தவர்.

             ஒ! அதற்கென்ன,தாராளமாகச்  செய்திடுவோம்.24 February 1944 அன்று இத்தாலியில் நடந்து கொண்டிருந்த போரில் தன்னுயிரைத் தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பாற்றிய  சுபேதார் சுப்பிரமணியத்தை யார் மறக்க முடியும்?
                அவரைபற்றிய,அவரது குடும்பம் பற்றிய மேலும் விபரங்களைத் தயவுசெய்து கொண்டுவாருங்கள் என்று கட்டளை இடுகிறார் கர்னல்.
               ஓரிரு வரங்கள் ஓடிமறைய எந்த  விபரமும் கர்னலிடம் வரவில்லை.
          முன்பு வந்த அந்த அதிகாரியை கர்னல் வரவழைக்கிறார்.சற்றே கோபமாக கர்னல் கேட்கிறார்,
சுப்பிரமணியம் பற்றிய மேலும் விபரங்கள் எங்கே?

                  சற்றே பணிவோடு அவர் சொல்லுகிறார்.

             அய்யா! சுப்பிரமணியம் போரில் கொல்லப்பட்டு இன்றைக்கு சுமார் 50 வருடங்கள் ஆகிவிட்டன.அவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கீழ ஒத்திவாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர  வேறு விபரங்கள் எங்களிடம் இல்லை.ஒவ்வொரு வருடமும் அவர் போட்டோவை வைத்து மாலை போட்டுவிட்டு சில நினைவு சொற்பொழிவுடன்  விருந்து நடக்கும்
                    அந்த விருந்து சிறப்பாக இருக்கவேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

           சுமார் 50 ஆண்டுகளாக விருந்துண்ணும் உங்களால் மேலும் விபரங்கள் சேகரிக்க முடியவில்லை என்ற கர்னல் தனது மேஜையைத் திறந்து சுமார் 10-15 போட்டோக்களை முன் வைத்தார்.
                   எல்லாம் சுபேதார் சுப்பிரமணியம் ஊர் உறவு மகன் மகள் பற்றியது.
               விழிகள் விரிய வாயைப் பிளந்து கொண்டு பார்த்தவர் இவைகள் எப்படிக் கிடைத்தன அய்யா?
 என்றார்.

          கர்னல் " நானே என்னுடைய கேமெராவில் எடுத்தது.பங்களூரிலிருந்து பஸ்ஸில் காஞ்சிபுரம் போய் அங்கிருந்து 13 கி.மி துரத்தில் உள்ள கீழ ஒத்திவாக்கத்திற்கு ஆட்டோவில் போய் வந்தேன்.
               இந்த வருட சுபேதார் சுப்பிரமணியம் நினைவு நாளின் சிறப்பு விருந்தினர் அவரது  ஒரே மகன்

               சென்னையில் வசிக்கும் திரு.துரைலிங்கம் அவர்கள்.

          கதையை  முடித்த கர்னல் கம்பீரமாக எழுந்து நடக்கிறார்.

                                     serve with pride!      Retire with Honour