திங்கள், 4 ஜூலை, 2022

                                                 மண்மேடுகள்.(தொடர்...)

 கதைக்களம். 

                   இராணுவத்தில் பணியாற்றியவர்கள் -அதாவது சோற்றுப்பிழைப்புக்காக இராணுவத்திலாவது சேரலாம் என்றில்லாமல் சீருடையை நேசித்தவர்கள்,இராணுவ சம்பிரதாயங்களைப் பெருமையோடு கொண்டாடுபவர்கள் ,இராணுவத்தில் சுமார் 20-25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் எல்லைப்புறம்கூட பார்காதவர்கள்,இயற்கைப் பேரிடர்களைக்கலையை முன்னிற்காதவர்கள் ,போர்க்களம் காணாதவர்கள்,உலகிலேயே பழமையான,விண்ணுக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த தமிழ் மொழியின் பன்முகப் பரிமாணத்தை உணராதவர்கள்  என இராணுவத்தினரை பலவிதமாகப் பிரிக்கலாம். 

                        இப்படிப்பட்ட மனிதர்களுக்கிடையில் ,ஒரு வித்தியாசமான மனிதரை நாம் சந்திக்கப்போகிறோம்.

                          எல்லைப்புறங்கள் ,இதய வாசல்,

                   தொல்லைகொடுக்கும் பகைவர் படைகள்,

                  அன்னை பாரதம் அழுகின்றாள்;

                  ஆண்மையுள்ளோரை அழைக்கின்றாள்.......     

                    இந்த அழைப்பை ஏற்று சீருடை அணியவந்த சிங்கமென உலாவரும் அந்த மனிதர் .அவருடைய குண நலன்களை வெளியுலகுக்கு தெரிவிக்க வந்தவர் போல் அவரை பல இடங்களில்,பலவிதங்களில்,நேர்காணல் காணும் ஒரு முனைவர் பட்டம் பெற்ற தனியார் நிறுவன உயர் அதிகாரி,இவர்கள் ,தனித்தும் இணைந்தும் சமூக நலனுக்காக செயல்படும்  விதம்.இவர்களது செயல்பாட்டில் இடை இடையே வந்து போகும் சில மனிதர்கள்.இவர்களே கதை மாந்தர்கள்.

                          இமயம் முதல் குமரி  வரை என்றும் காந்தாரம் முதல் பர்மா வரையிலும் என விரிந்து பரந்த இந்தியத் திருநாடே கதைக் களம் .அவர்கள் காத்திருக்கிறார்கள் ......! வாருங்கள் ! அவர்களை சந்திப்போம் 

1.அறிமுகம் .  

                              ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறுபோல்,

                                    மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ ?

                                    கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா 

                                   வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்தவேணுமே. 

                                                                                               -    சிவ  வாக்கியார் 

புவியியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள் அண்டங்கள் பற்றியும் அவை வெளிப்படுத்தும் அதிசயங்கள் பற்றியும் ஏராளமான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.நமது ஆய்வுகளுக்குள்ளான சூரிய மண்டலமும் அதன் ஆளுமைக்குள்ளான கோள்கள் மட்டுமல்லாமல் கோடான கோடி அண்டங்கள் இந்த பால் வெளியில் மிதந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.நமது பூமி உருண்டையைப்பற்றி ஆய்வு நடத்துவோர்  சுமார் 600 கோடி வருடங்களுக்கு முன் உலக நிலப்பரப்பு "பாங்கியா" என்ற மாபெரும் கண்டமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தது என்கிறார்கள்.கண்டங்களின் ஈர்ப்பிசைபற்றிய அறிவு விளக்கம் ஏற்பட்டபொழுது இந்த "பாக்கியா  " என்ற மாபெரும் கண்டம்இரண்டாக்கப் பிரிந்து "கோண்டுவானா,மற்றும் "லாவ்ரெழியா "என்றாகியது என்றும் பின்னர் கோண்டுவானா பிரிந்து தென்னமெரிக்கா ,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,இந்தியா மற்றும் அண்டார்க்டிகா என்றாகியது என்று விளக்கம் சொல்லுகிறார்கள்.

               ஆர்வம் காரணமாக புவியியல் பற்றி அறிந்துகொள்ள முற்பட்டாலும் அலுவல வேலை காரணமாக உலகின் பல பகுதிகளுக்கும் அவ்வப்பொழுது சென்றுவரும் எனக்கு இப்புண்ணிய பாரதம் பிறந்த நாடாக அமைந்தது எனது பூர்வ ஜென்ம பலனாக இருக்கலாம்.எண்ணற்ற மாமனிதர்கள் இந்த மண்ணிலே பிறந்து மனிதகுலம் தழைக்க தம்மை வருத்தித் தவமிருந்து பல உண்மை விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.தொலைதூர பயணத்தின் போது அதுபோன்ற விளக்கவுரைத் தொகுப்புகளை உடன் எடுத்துச்சென்று நேரம் கிடைக்கும்போது படித்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது எனது வழக்கம்.

                 இப்படி அலுவலக வேலை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும்,இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏனோ என்னைக் கவர்ந்திழுக்கிறது.மிக,மிக சாதாரண வாழ்க்கை முறையுடைய மக்கள் .வியாபாரம் காரணமாக பல வியாபார சமூகத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு இடம் பிடித்துக்கொண்டாலும் கிராம புறங்களில் அஸ்ஸாம் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இல்லை.

                இந்தியாவில் ஓடிவரும் நதிகளிலேயே ஆண்மைப் பெயர்கொண்ட பிரம்மபுத்திரா  நதி தன்  பெயருக்கேற்ப  மழைக்காலத்தில் ஒரு வெறிகொண்ட ஆண் மகனைப்போல் எங்கும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.இமயத்தின் மடியில் மானசரோவர் மலைப்பகுதியில் உருவாகி "போ "என்ற பெயருடன் திபெத்திய மலைப்பகுதிகளில் கிழக்கு நோக்கி ஓடிவரும் நதி அருணாச்சல பிரதேசத்தின் உயர்மலைக் காட்டுப்பகுதிகளில் மறைந்துபோய்விடுகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய  நிலசீரமைப்பாளர்களில்பலர் "போ "நதி எங்கு போகிறது என்று கண்டறிய முற்பட்டு சில இடங்களுக்குப்பிறகு காணாமல் போயிருக்கிறார்கள்.விண்ணில் புகைமூட்டம்போல் காணப்படும் இடத்தில் இந்த நதி ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியாக ஆயிரக்கணக்கான அடி பள்ளத்தில் பாய்கிறது என்று அனுமானித்திருக்கிறார்கள்.

                       கவனத்தில் கொள்ளுங்கள்-இது ஒரு அனுமானம்தான்.எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருக்கும் இன்றுகூட (2021)"போ "நதி எங்கு மறைத்து, எப்படி வெளிப்படுகிறது என்பதை யாராலும் துள்ளியமாக  அறிய முடியவில்லை.

                இயற்கையின் மாபெரும் சக்திக்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் இயற்கையின் ரகசியங்கள் ஒவ்வொரு யுகத்திலும்,ஒரு புது செய்தியாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.North East Frontier Agency (N E F A ) என்று முன்னாள் அறியப்பட்டு இன்று ஐந்து மாவட்டங்களைக்கொண்ட அருணாச்சலப்பிரதேசம் எனப்படும் மாநிலத்தில் லோஹித் மாவட்டத்தில் வெளிப்படும் மாநதியே பிரம்மபுத்திரா என்று அனுமானிக்கிறார்கள்.ஆற்றுப் பயணம் என்று கடலின் சங்கமத்திலிருந்து மேல்நோக்கிப் பயணிப்பவர்கள் லோஹித் மாவட்டத்தின் காட்டுக்குள் இன்றுவரை நுழைய முடியவில்லை.திருமந்திரம் வழங்கிய திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை விவாதப்பி பொருளாக ஏற்று பட்டிமன்றம் நடத்தும் மக்களுக்கிடையில் "போ "நதியின் பள்ளத்தாக்கில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வயதுடைய  மாமுனிவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.



                    குடிசைவீடே பிரம்மபுத்திராவின் வெள்ளப்பெருக்கில் மிதந்துகொண்டிருந்தாலும் வீட்டின் கூரைமேல் உட்கார்ந்துகொண்டு தூண்டில் போட்டு மீன்பிடிக்க முயற்சிக்கும் இந்த அஸ்ஸாம் மக்களின் வெள்ளந்தியான மனமும் உலகைப்புரிந்துகொள்ள முடியாத அறியாமையும் என்னை வியப்பிலாழ்த்தும்.நாள் முழுவதும் இப்படித் தூண்டில் போட்டுக்கொண்டிருந்தாலும் சுண்டு விறல் அளவுக்கு ஒரு மீன் கிடைத்துவிட்டால் அவர்கள் துள்ளிக்குதித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.பெரும்பாலும் ஆண்கள் சோம்பேறிகளாகத் திரிகிறார்கள்.இனப்பெருக்கம் செய்வதுதான் அவர்களது முக்கிய வேலைபோல் சாலையின் பல இடங்களிலும் கூட்டம் கூட்டமாக அரைநிர்வான -முழுநிர்வானக்  குழந்தைகளைக் காணலாம்.இந்த மழை வெள்ளத்தினூடே நாலைந்து வாழை மரங்களை ஒன்றாகக்கட்டி ஒரு தெப்பம் போல் செய்து அதை அங்கும் இங்கும் போய்வர உபயோகிக்கிறார்கள்.திருமணம் வரை ஒழுங்காக உடை உடுத்தும் பெண்கள் திருமணத்திற்குப்பின் இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று ரவிக்கை அணிவதில்லை போலும்.ஆனாலும்  வயதுப்பெண்கள் தங்களது பள்ளிக்கூட சீருடையான பச்சை பார்டர் போட்ட வெள்ளைப்புடவையும் பச்சை வவுக்கையும் போட்டுக்கொண்டு கையில் ஒரு கோலுடன் ஒரு தேவதைபோல் அந்த வாழைமர தெப்பத்தில் வருவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.

                 அவ்வப்பொழுது இனக்கலவரத்தினாலும்,பொருளாதார பிரச்சினைகளாலும் ஊர் ஊராக  வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன.மூங்கிலியும் கோரைப்புற்களாலுமான வீடுகள் வெகு சீக்கிரம் சாம்பலாகிப் போய்விடுகிறது.

                  "ஹட்ஜாவோ .........ஹட்ஜாவோ" 'என்ற உரத்தகுரலும் தொடர்ந்து ஒரு போர்ட்டர் தலையில் சாமான்களுடன் வேகமாக வருகிறான்.ஒரு ரயில்வே  சந்திப்புக்கே உரித்தான நெரிசலுடனிருக்கும் இந்த  நியூ  பொங்கைகாவ்ன்  ஸ்டேஷனில்சமீபத்திய இனக் கலவரத்தினால் ஏற்பட்ட கொலை,கொள்ளை வெறிச்செயல்களால் பல அஸ்ஸாம்  மக்கள் மேற்கு வாங்க நகரங்கள் நோக்கி தங்களது உடைமைகளுடன்  புறப்பட்டு விட்டதால் வழக்கத்திற்கு மாறான கூட்டம்.ரயில் பெட்டிகளின் கூரைமேல் கூட ஏறி மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். 

         பொதுவாக இயற்கையை ரசிக்கும் இயல்புடைய எனக்கு இந்த மக்களின் போராட்டமும் இதனால் சில மண் சட்டிகள்,பானைகள்,ஒரு ஆட்டுக்குட்டி, என்ற தங்களது உடமைகளை  எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்ட நிலை என்னுள் ஆழ்ந்த சிந்தனையைத்தூண்ட என் மன  ஓட்டத்தின் வேகத்தை போர்ட்டரின் சப்தம் தடுத்து நிறுத்திவிடுகிறது.

                  கண்ணாடியைக் கழட்டி துடைத்துவிட்டு திரும்பவும் போட்டுக்கொண்டு போர்ட்டரின் சப்தத்தினால் சிந்தனைக்கு கலைந்து சப்தம் வந்த திசையை நோக்கிப்  பார்க்கிறேன்.கல்கத்தா செல்லவிருக்கும் "காம் ரூப் "எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிறது.ஒரு நடுத்தர வயது மனிதர் போர்ட்டரின் பின்னே அவசரம் அவசரமாக ஓடிவருகிறார்.

                                ஜன்னலோரமாக நான் அமர்ந்திருந்த முதல் வகுப்பு  பெட்டிக்கருகில் சாமான்களைப்போட்டுவிட்டு சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த ரயில்வே கண் ட க்டரிடம் சென்று என்னவோ கேட்கிறார்.தனக்கு முதல்வகுப்பு ரிசர்வேஷன் கான்பெரம்என்று வந்தும் கூட தனது பெயர் லிஸ்டில் இல்லாதது குறித்து கோபமாகவும் வேதனையுடனும்  அவர் பேசுவது காதில் விழுகிறது.நமது நாட்டில் ரயில்வே பயணத்தில் இப்படி நடப்பது சர்வ சாதாரணம்.இந்தியன் ஆயில் கார்பொரேஷனில் ஒரு பெரிய உயர் அதிகாரியாக இருக்கும் எனக்கே பல நேரங்களில் இப்படி நடந்திருக்கிறது.பெண் என்றும் பாராமல் கண்டிப்பாக இடமில்லை என்று சொன்னதினால் பல நேரங்களில் நான் பயணத்தைக் கான்சல் செய்துவிட்டு ரயில்வே அதிகாரிகளுடன் சண்டை போட்டிருக்கிறேன்.

                        அவர் என்னவோ பேசிவிட்டு இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தபின் ஓய்ந்துபோய் நிக்கிறார்.பார்ப்பதற்கு தென்னிந்தியார் போலிருக்கிறார். மொழியறியா இம்மாநிலங்களில் நான் பயணம் செய்யும்போது தமிழர்களைப்பார்த்தால் இயற்கையாக வரும் ஒரு நட்புணர்வு எப்பொழுதும் தோன்றுவதுபோல் இப்பொழுதும் தோன்றுகிறது.இராணுவத்தினராக இருப்பாரோ ? இப்படி மொழியறியா இம் மாநிலங்களில் வழியறியா எல்லைப்புறங்களில் எதிகளுக்கும் இயற்கைக்கு கொடுமைகளுக்குமாக சின்ன பின்னமாக்கப்படும் இராணுவத்தினர் மீது எனக்கு எப்பொழுதும் ஒரு அன்பும் அனுதாபமுமுண்டு.இளம் வயதில் இராணுவத்தினர்களைப்பற்றி அதிகம் கேட்டிருந்தால் அவர்களிடம் ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது.திருமணம் என்ற ஒன்று ஆகியிருந்தால் ஒருவேளை யாராவது இராணுவத்தினரை மனந்திருப்பேனோ என்னவோ ?பள்ளி கல்லூரிப் படிப்பு என்று தொடர்ந்து ஏற்றுக்கொண்டவேளை எதுவாக இருந்தாலும் அதில் உள்ளம் ஒன்றுபட்டு ஈடுபடும் எனது மனப்பாங்கு என்னை ஒரு முதுகலை  பட்டதாரியாக்குகிறது. பின்னர் எம் பி ஏ ,மனோதத்துவதில் ஓரு டாக்டரேட் என்று வாழ்க்கைப்பயணம் எங்கெங்கோ திசை திரும்பிப் போய்விட்டது.பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் இவர் யாராக இருப்பார் ?.

               Excuse me.! I am Parimalaa.Are you going to Calcutta ?If so,please get into the train.I shall arrange a berth for you.

              முன் பின் அறிமுகமில்லாமல் நான் பேசியதும் அவர் விழிக்கிறார்.எதோ பேச வாய் திறக்கிறார்.

                        Please......There is no time to discuss.Kindly get into the train. என்கிறேன். 

           அவசரம் அவசரமாக ஓடிவந்து ஏறிக்கொள்ளவும் வண்டி புறப்படவும் சரியாக இருக்கிறது.

                              நீரின் மேற் குமிழி  என்ற நிலையற்ற இவ் வாழ்வினிலே நாளும் பல புதுமையான மனிதர்களை  சந்தித்துப் பிரிகிறோம்.சந்தித்த அனைவரையுமே மனதில் கொள்ள நினைத்தால் இந்த இதயம் ஒரு குப்பைமேடாகிவிடும்.பிறகு எழிலோவியமான சில மனிதர்களுக்கோ இனிமை சிந்தும் அவர்களது நினைவுகளுக்கோ இந்த இதயத்தில் இடமில்லாமல் போய்விடக்கூடும்.இந்த விந்தையான மனிதரை சந்தித்ததும் அப்படித்தான்.. 

                          என்னை அறிமுகம் செய்துவிட்டு என்னோடு வரவிருந்த துணை அதிகாரி ரிசர்வேஷன்   செய்திருந்தும்கூட கடைசிநேரத்தில் வரமுடியாமற் போய்விட்டது.இது தான்  அவரது டிக்கெட்.So far all purposes you are Nirmal kumar Bhattacharya.! ! என்று அவரிடம் சொல்லுகிறேன்.

                          இலேசான புன்முறுவலுடன் ,Well !  I am Arvind,  என்கிறார்.

           அதுவரையில் ஆங்கிலேயத்திலேயே பேசிக்கொண்டிருந்த நான் அவர் பெயரைக் கேட்டவுடன் ,"நீங்கள் தமிழரா " ? என்கிறேன்.திடீரென்று அவர் தமிழராக இருந்துவிடக்கூடாதா என்ற ஒரு ஏக்கமான பரிதவிப்பு ஒரு வினாடி என் இதயத்துள் ஓடி மறைகிறது.

                       ஆம். ! என் பெயர் அரவிந்தன்.தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் ஒரு கிளைநதியோரத்தில் பிறந்தவன் நான். 1962ல் சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்த அவசரகால அழைப்பு விடுத்தபொழுது தமிழக பொதுப்பணித்துறையில் நிரந்தர பொறியாளராக இருந்த நான் அதை விட்டு விட்டு இராணுவத்தில் சேர்ந்தேன்.மனதாலும் செயலாலும் இந்தப் புனிதமானப் பணியை நான் விரும்புகிறேன். வெல் !  இருபதாண்டு காலம் ஓடிவிட்டது.

                        வழியெல்லாம் அவர் என்னென்னவோ பேசிக்கொண்டேயிருக்கிறார்.ஆச்சர்யமாக இருக்கிறது.இப்படியும் சில மனிதர்களா ?.ஏற்றுக்கொண்ட வேலையை ,அது எதுவாக இருந்தாலும் சில நாட்களிலேயே அதில் பல குறைகளைக்கண்டு வெறுப்பதும் அந்த வேலையே தங்களது முன்னேற்றத்துக்கான ஒரு பார்ட் டைம்  வேலையைப்போல் வைத்துக்கொண்டு சொந்த வேலைகளைக் கவனிப்பவர்களையும்தானே  நாம் பார்த்திருக்கிறோம்.அப்படிப்பட்ட சமுதாய சூழலில் இராணுவ வாழ்க்கையை -அதிலும் எல்லைப்புற கடினமான உழைப்பு,போர்நிலை தகுதிக்கானப் பயிச்சிகள் -உள்  நாட்டுக் கலவரங்களில் தங்கள் இன்னுயிர் சகோதரர்களையே  எதிரிகளாகப் பாவித்துப் போரிடவேண்டிய நிலை -இப்படிப்பட்ட வாழ்க்கையை -மிக மிக உள்ளார்ந்த உணர்வுடன் உடலும் மனமும் ஒன்றி நேசிக்கும் ஒரு மனிதரா ?

                           நான் மனம் நெகிழ்ந்து போகிறேன்.இவர் நல்லவர்.இவரைப்பெற்றவர்கள் நல்லவர்கள்.இவரைக் கணவராக அடையபெற்ற பெண் பாக்கியசாலி என்ற எண்ணமும் அதைத் தொடர்ந்து புறநானூற்று,மற்றும் கலிங்கத்துப்பரணி நிகழ்ச்சிகளும் மனதில் ஓடுகிறது.

             இராணுவத்தினர்களைப்பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை என்றாலும் என் அம்மாவின் அப்பா இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியிருக்கிறார்.என் அம்மா பிறந்ததே பர்மாவில் மேமியோ-மேக்டிலா பகுதியென்றும் இராணுவ வாழ்வின் பெருமைபற்றி அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்.அம்மாவிற்கு சுமார் 10 வயதிருக்கையில் தாத்தா ஒய்வு பெற்றார் என்றும் சில நாட்களிலேயே இறந்துவிட்டார் என்றும் சொல்லுவார்கள்.ஆங்கிலேயர் ஆட்சியில் இராணுவத்தினர் பெரு மதிப்புப் பெற்றிருந்தனர் என்பார்கள்.நன்றிக்கடன்,கடமையுணர்வு,ராஜ விசுவாசம் போன்றவைகள் தமிழர்களுக்கு உலகிலேயே சிறந்த போர்வீரர்கள் என்ற பெயர் வாங்கி கொடுத்துள்ளது.திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் போரிட்டபொழுது இராணுவத்தினர் பலர் தங்கள் நாட்டு மன்னனானத் திப்புசுல்தானுக்கு எதிராக -தாங்கள் ஆங்கிலேயர்களின் கூலிப்படைகள் என்ற அவமானம் இல்லாமல் தங்கள் நாட்டு மக்களையே தயவு   தாட்சண்யமின்றி கொன்று குவித்து திப்புசுல்தானையும் தோற்கடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடுகட்டுவதுபோல்  தனியொரு மனிதனுக்காக பிரிட்டிஷ் அரசு "சொக்கலிங்கம் மெடல் "என்ற ஒரு கௌரவ விருதை ஏற்படுத்தி ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் இப்படி சிறப்பாகப்  பணியாற்றிய லான்ஸ் ஹவில்தார் சொக்கலிங்கம் என்ற மெட்றாஸ் பயோனியரைச்சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு வழங்கியதாக அம்மா சொல்லுவார்கள்.

                       இன்றும் கூட Madras Engineer Group  என்ற பெங்களூரில் உள்ள இராணுவப்பிரிவில் இந்த மெடல் வைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் அந்த குரூப்பைச்சேர்ந்த ஒரு பயிற்சிப்ப் பிரிவிற்குச்  சொக்கலிங்கம் கம்பெனி என்றே பெயரிட்டிருக்கிறார்களாம். 

                               இப்படி இராணுவ வாழ்க்கை பற்றி நிறையாக கேள்வி பட்டிருந்ததால் அரவிந்தனின் பேச்சும்,கொள்கையும் என்னை மிகவும் மகிழ்வுறச்செய்தன.  

                          அதுமட்டுமல்லாமல் எனது தந்தைவழி பாட்டனாரின் தமையன் தேசப்பற்று காரணமாக சுபாஷ் சந்திர போஸின் Indian National Army  (I N A )  யில் பணியாற்றியவர்.இரண்டாவது உலகமகாப் போரில் ஜப்பானியர்கள் இந்தியாவின் கிழக்கு கோடியில் பர்மாவின் கதவுகளை உடைத்தெறிந்து இந்திய எல்லையை மிதித்த பொழுது ஆங்கிலேய அரசின் புரட்சித் தளபதியான மேஜர் ஜெனரல் வின்கேட் தலைமையில் Chindit என்ற அதிரடிப் படை வீரர்கள்  பர்மா எல்லைக்குள் ஜப்பானியர்களின் பின்புறம் நுழைந்து பலப் பதுங்கிப்பாயும் போர்களைப்  புரிந்துள்ளார்கள்.அங்கு ஜப்பானியர்களுக்குத் துணையாக சுபாஷ் சந்த்ர போஸின் I N A  வீரர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் ..இப்படி நாட்டுப் பற்று-செஞ்சோற்றுக்கடன் என்ற உணர்வோடு எனது குடும்பத்தின் முன்னோர்கள் பணியாற்றியுள்ளது பற்றி நான் பெருமை கொள்வேன்.இன்றும் எங்கள் வீட்டில்,தாத்தா,முப்பாட்டனார்  போன்றோர்களின் இராணுவ உடையிலுள்ள புகைப்படங்கள் உண்டு.

                          ரயில் பயணத்தில் எதிரில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியான அரவிந்தனைப்  பார்த்து நான் பெருமைகொண்டேன்.

                        கல்கத்தா வந்து பின்னர் சென்னை மெயிலில் இடம்கிடைக்காமல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னை சென்றடைந்தோம்.ஒருவரை சந்தித்த சில மணி நேரத்திற்குள் அவரது குடும்பம்,உறவு,குழந்தைகள் என்று தோண்டித்துருவி கேள்விகளைக்கேட்கும் வழிப்பயண நண்பர்களில் இவர் வித்தியாசமானவராகப் படுகிறார்.இராணுவ அதிகாரியாக இருந்தும் இராணுவத்திற்கும்அப்பாற்பட்டவிஷயங்களைத்தெரிந்துவைத்திருக்கிறார்.இலங்கைத்தமிழர்களின்  பிரச்சினை என்னவென்று மிகவும் ஆணித்தரமாகப் பேசும் இவர் வரும் ஒலிம்பிக் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று விவாதிக்கிறார்.தனது சொந்த ஊரான "கண்கொடுத்த வணிதத்தில் "தென்னை சாகுபடி எப்படி செய்வார்கள் என்று சொல்லுகிறார்.அவரது ஊரின் பெயரே ஒரு இலக்கியச்சுவையோடு இருக்கிறது.

                          இப்படிப்பட்ட உத்தம நண்பர் தனது முகவரியைத்தந்துவிட்டு ,பயண உதவிக்கு நன்றி ,நாம் நண்பர்களாகப் பிரிவதற்கு எனது வாழ்த்துக்கள் ,விபத்துகள் நேர்ந்தால் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற வினோதமான வாழ்த்துக்களுடன் அவர் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் கூட்டத்தில் கலந்து மறைந்த போது ஒரு கனவு உலகத்திலிருந்து வந்தது போன்று உணர்கிறேன். 

           ஏன்டி  இப்படி பேயறைந்ததுபோலிருக்கிறாய்  ? என்ற தோழியின்  பேச்சு என்னை நினைவுலகத்திற்கு கொண்டுவருகிறது.

              சாமான்கள் சரியாக இருக்கிறதா மேடம் ? எனது அலுவலக அதிகாரிகள் சாமான்களை சரிபார்த்துக் கொடுக்க,நான் புறப்படுகிறேன்.அன்பான உபசரிப்புடன் கடந்த ஒருமாதகால வீட்டின் நிகழ்வுகளை டிரைவர் கண்ணுசாமி சொல்லிக்கொண்டேபோக வீடு வந்த சேர்கிறேன். 

                                                                                                                             2.சன்னாநல்லூர் .........


.                        

1 கருத்து:

  1. அருமை ஐயா, தங்களின் நூலைப் படித்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன.

    பதிலளிநீக்கு