மண் மேடுகள். ......( தொடர் )-2
பத்து அத்தியாயங்களடங்கிய இந்த நாவலில் இது 2 வது.
2. சன்னாநல்லூர்.
நல்லார்க்குத் தம் ஊரென்றூரில்லை நன்னெறிச்
செல்வார்க்குந் தம் மூறென்றூரில்லை யல்லாக்
கடைகட்குந் தம் ஊரென்றூரில்லை தங்கைத்
துடையாக்கும் எவ்வூருமூர்.
-நான்மணிக்கடிகை
விபத்துகள் நேரத்தான்
செய்கின்றன. எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடனும் எவ்வளவோ பயிற்சிகளுடனும் வண்டி ஓட்டும் நமக்கு விபத்துகள்
நேரும்போது அதற்கு விளக்கமே கிடையாது. அப்படி
விளக்கத்திற்கு உட்பட்டு ஒன்று நடந்தால் அது திட்டமிடப்பட்ட செயல் என்று அதற்கு கிரிமினல்
- சிவில் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்படலாம். விபத்துகள், விபத்துகளே அன்றி அதற்கு விளக்கம்
சொல்ல முடியாது. வண்டி சக்கரம்
பின்னோக்கி ஓடுவது போல் ஒரு சில வினாடிகள் எனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி எண்ணிப்
பார்க்கிறேன்.
பள்ளிப்பருவம்முடியும்வரைஎனதுவாழ்க்கைவித்தியாசமானதாகஇருந்தது.
அம்மா அப்பாவுடன் அவ்வப்பொழுது வெளியூர்
சென்று வந்திருந்தாலும் எனது உலகம் சென்னையைச் சுற்றியதுதான். துன்பம் என்பதற்கு அர்த்தம் புரியாத வாழ்க்கை.
பணத்திற்கோ, பொருள் வசதிகளுக்கோ அல்லது அன்பிற்கோ நான்
ஏங்கியவள் இல்லை. இளமையில்
நகர வாழ்க்கைதான் உலகம் என்றிருந்த எனக்கு கிராமம் என்று ஒன்று உள்ளது என்றோ இந்தியாவின்
பொருளாதாரம் விவசாயத்தைப் பெருமளவிற்கு பொறுத்தே உள்ளது என்றோ என் சிற்றறிவிற்கு எட்டாத
இளம்வயது. அந்த வயதில் பட்டிக்
காட்டிலேயேப் பிறந்து வளர்ந்து சென்னைக்குப் படிக்க வந்த தேவகி எனக்கு உற்ற தோழியானாள்.
சத்தியம்,
நேர்மை, பொய்பேசாமை, இனிமையான பேச்சு, உண்மையான அன்பு எல்லாம் அமையப் பெற்ற ஒரு
மிகச்சிறப்பான பெண் அவள். அவளை
முதன் முதல் சந்தித்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
பள்ளிக்கூட இறுதி
வகுப்பு முடிந்து கல்லூரி சேர்க்கைக்காக எல்லா கல்லூரிகளிலும் கூட்டம் கூட்டமாக மாணவ
மாணவியர் குவிந்து கொண்டிருந்தநேரம். புகழ்
பெற்ற பெண்கள் கல்லூரி ஒன்றில் நான் சேர்ந்து விட்ட இரண்டாம்நாள். மற்ற தோழியர்களுக்கு உதவும் பொருட்டு கல்லூரி
சென்ற நான் கல்லூரி வளாகத்தில் ஒரு முதியவரும் ஒரு இளம் பெண்ணும் கண்ணீருடன் நிற்பதைக்
கண்டு என்னுள் வழக்கமாக எழும் பிறர்க்கு உதவும் உணர்வு தோன்ற அந்தக் கிராமப்புற முதியவரிடம்
போய் ஏதாவது உதவி வேண்டுமா என்று விசாரித்தேன். அந்தப் பெண் அன்று கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் தஞ்சை மாவட்ட
கிராமப்புறமாதலால் பெண்ணை மாணவியர் விடுதியில் சேர்த்திருப்பதாகவும் முதன் முதலாகப்
பெண்ணை யாருடைய துணையுமின்றி தனியாக விட்டுப் போவது கலக்கமாக இருப்பதாகவும் பெரியவர்
சொல்லுகிறார். ஒருவினாடிநேரம்நான்அந்தப்பெண்ணைப்பார்க்கிறேன்.
வெளியுலகம் அறியாத ஒரு மிரட்சியை அவள்
கண்களில் பார்த்தேன். அருகில்
சென்று அவளை அணைத்துக் கொண்டு இன்று முதல் நான் தான் உனக்குப் பாதுகாவலர். எனது தந்தை ஒரு காவல் துறை உயர் அதிகாரி;
எனது
தாய் ஒரு கல்வி அதிகாரி. சென்னையிலேயேப்
பிறந்து வளர்ந்த எனக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. இன்று முதல் நீ தான் எனது தங்கை மாதிரி.
கொஞ்சம்
கூடப் பயப்பட வேண்டாம். ஐயா
! பெரியவரே ! நீங்கள் தைரியமாகப் போய் வாருங்கள்.
எங்கள் வீட்டு தொலைபேசி எண்ணைக் குறித்துக்
கொள்ளுங்கள்.
எப்பொழுது வேண்டுமானாலும்
உங்கள் பெண்ணுடன் பேசுவதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நான் உங்கள் பெண் தேவகிக்கு உற்ற தோழியாக
இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
அன்று அறிமுகமான
நட்பு, ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டது கடைசி வரை தொடர்ந்தது. அறிமுகமாகி
சில மாதங்கள் சென்று அரை ஆண்டு விடுமுறை வந்தது. நெல் காய்க்கும் மரங்களை நீ பார்த்திருக்கிறாயா? எங்கள் கிராமத்திற்கு வா, பார்க்கலாம் என்று தேவகி ழைக்க உண்மையாகவே
நான் அந்த மரங்களைப் பார்க்கப் புறப்பட்டேன்.
பெண்மை மலர்ந்து
இளமையின் அடிவாயிலில் கால்வைத்திருந்தநேரம். உடலில் ஏற்படும் பல மாற்றங்களை தனிமையில் தொட்டுப்பார்த்து எனக்கு
நானே வியந்து கொள்ளும் ஒரு விடலைப்பருவம். அந்த
நிலையில் கிராமத்து அறிமுகம் எனக்குள் வியப்பான தொரு உலகத்தைக்காட்டியது. சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள் மயிலாடுதுறையில்
மாற்று வண்டி ஏறி நன்னிலம் என்ற ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது இருள் பிரியும் இளங்காலை
நேரம். நன்னிலம் என்றஊர் 5 கி.மீ. தூரத்திலிருந்தாலும் சன்னாநல்லூர் என்ற இடத்தில் உள்ள ரயில்வே
ஸ்டேஷனுக்கு நன்னிலம் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.
அது ஆடி-ஆவணி மாதம்
என நினைக்கிறேன். எங்கு நோக்கினும்
வயல்களில் நீர்த்தேக்கமும் நாற்றங்காலும் உழவும் நடந்துகொண்டிருந்தது. சன்னாநல்லூர் என்ற அழகாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
செந்நெல் விளையும் இந்த ஊருக்கு செந்நெல்லூர்
என்று பெயர் இருந்து பின்னர் சன்னாநல்லூர் என்று ஆனதோ என்னவோ, காவிரியின் கிளை நதிகளான முடிகொண்டான்ஆறு
தெற்கிலும் திருமலைராஜன் ஆறு வடக்கிலும் ஓடுகிறது. மயிலாடுதுறையில் காவிரியைத்தாண்டும் போது சிறிய வாய்க்காலாக
ஓடும். அம்மா நதியைப் பார்க்கிறோம்.
இளமைத் திமிரில்எழில்பூத்துக் குலுங்கும்
இள மங்கையைப்போல் கடல் போன்ற பேரிரைச்சலுடன் கூடிய அலைகளுடன் முட்டி மோதிக்கொண்டு கர்நாடகா
மாநிலத்திலும் பின்னர் திருச்சி மாவட்டத்திலும் ஓடிவரும் காவிரி பூம்புகாரில்
(காவிரிப்பூம்பட்டிணம்) கடலோடு கலக்கிறாள். மயிலாடுதுறையில் அவளைசந்திக்கும் போது எண்ணற்ற
செல்வங்களைப் பெற்று இம்மண்ணுக்கு வழங்கி விட்டு காய்ந்து சருகாகிய ஒரு கிழவியை சந்திப்பதுபோல் இருக்கிறது.
எனது செல்வங்களைப்
பாருங்கள் என்பதுபோல் அடுத்தடுத்து மஞ்சளாறு, வீரசோழன், நண்டலார்,
நூலார், அரசலாறு, திருமலைராஜன்முடிகொண்டான், புத்தாறு, வெட்டாறு, ஓடம்போகி, கோரையாறு, பாமினியாறு என்று தஞ்சை மாவட்டத்தின் குறுக்கிலும்
நெடுக்கிலும் ஏராளமான ஆறுகள் ஓடுகின்றன.
உலகமெல்லாம் ஓரினம்
என்று கனவு கண்ட பாரதி சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநாட்டிளம்பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி
விளையாடி வருவோம் என்று பாடினான். இன்று
நாம் காவிரியின் நீர்ப்பங்கீடு காரணமாக முடிவற்ற போராக அண்டை மாநிலங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்.
கும்பகோணம்-நாகப்பட்டிணம்என்றமேற்கு,கிழக்குசாலையும்,
திருவாரூர்-மயிலாடுதுறை என்ற தெற்கு
வடக்கு சாலையும் சந்திக்குமிடமே சன்னாநல்லூர், அழுக்குப் படிந்த உடலையும் அகந்தை படிந்த உள்ளத்தையும் நன்றாகக்
கழுவிவிட்டு எங்கள் ஊருக்குள் வாருங்கள் என்று உலகத்திற்கு சொல்லாமல் சொல்லுவது போல்
ஊரின் நான்கு திசை எல்லைப் புறங்களிலும் நீர் நிறைந்த குளங்களும் குளத்தின் கரையில்
ஒருசத்திரமும் இருக்கின்றன. இந்தக்
கிராமத்தின் பொலிவை வசந்தம், கோடை,
மழை, குளிர் என்று ஒவ்வொரு காலத்திலும் கண்டு
ரசிக்க ஒரு தனி உள்ளம் வேண்டும்.
உதிராத மலர் போன்று
முதிராத எண்ணங்கள் கொண்டிருந்த அந்த இளமைப் பருவத்தில் கிராமத்தின் அறிமுகம் எனக்கு
ஒரு பொன்னுலகத்தின் வாசலைத் திறந்து விட்டது போன்றிருந்தது. அழகிய சிற்றம்பலம் என்னும் தேவகியின் அப்பாவும்
சித்திரப்பாவை என்ற தேவகியின் அம்மாவும் எனக்கு அறிமுகமாகிறார்கள். தேவகியின் அப்பாவை அன்று சென்னையில் ஒரு
சில நிமிடங்களே சந்தித்திருந்தாலும் இப்பொழுதுதான் அவரையும் கிராமப்புற வாழ்க்கையையும்
நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஓ! இலக்கணம்
இலக்கியம் என்று வாய் கிழியப் பேசியும், பட்டிமன்றம்போட்டும்போட்டிகள்நடத்தும்நகரவாசிகளே!
ஒருமுறைஇப்படிநமதுகிராமங்களுக்குவாருங்கள்.
சிலருடையபெயரைக்கேட்டு, சிலஊர்களின்பெயரைக்கேட்டுப்பாருங்கள்.
உங்களதுஇலக்கியத்தின்இலக்கணத்திற்குஇவர்கள்விளக்கம்சொல்லுவார்கள்.
சன்னாநல்லூர் கிராமத்து அறிமுகம் ஒரு அற்புதமான இலக்கியத்தைப் படிப்பது போன்ற இன்பத்தை ஏற்படுத்துகிறது..
கெண்டைக்கால்வரைத் துணியைத்தூக்கிக்கட்டிக்கொண்டு,இளமைத் திமிரான ஈர்க்கும் இடைபுகா இள மார்பகங்களை முரட்டுத் துணியால் இழுத்துக் கட்டிக் கொண்டு,
ஆளானஆடிமாசம் ... ஆசைவைச்சேன் உன் மேலத்தான்... போன்ற நாட்டுப் பாடல்களை பாடிக்கொண்டு வயலில் வேலை செய்யும் கிராமத்துப்பெண்களைக்காணுகிறேன்.நேற்றுவரை சென்னையில் ஷேக்ஸ்பியரை அலசிக்கொண்டிருந்த தேவகி இன்று திடீரென்று அசல் பட்டிக் காடாகமாறி வயலிலும் வீட்டிலும் வேலை செய்யும்போது நான் வியந்து போகிறேன்.
தாங்க முடியாத ஆச்சரியம் அன்பு இப்படி சொல்ல முடியாத எண்ணங்களின் கூட்டாகத் திண்டாடி அப்படியே அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறேன்.
கிராமத்துப் பெண்ணான தேவகி ஆச்சரியத்துடன் தனது குருவும்,
ஆசிரியையும் தோழியும் பாதுகாவலருமானப் பரிமளாவைப் பார்க்கிறாள். இயற்கை வினோதங்களில் மனிதர்களல்லாத உயிரினங்களின் வாழ்க்கை முறை விந்தையானது. ஒருமாடு கன்று ஈன்றால் ஓரிரு ஆண்டுக்குள் அந்த கன்று வளர்ந்து ஒரு முழு நிலை மாடாக உருவாகிவிடுகிறது.
அந்நிலையில் அதன் உடல் வளர்ச்சி காரணமாக காளை பசுவைத் தேடுகிறது.
பசு காளையை நாடி ஓடி தனது இன உறவின் தவிப்பைக் தணித்துக் கொள்கிறது.
பருவ வயதினளான இவள் எதன் அடிப்படையில் என்னைக் கட்டித் தழுவுகிறாள்.
நான் வெட்கத்துடன் கிராமவாழ்க்கை முறை சொல்லி, தேவகிக்கு
இப்படிப் பட்ட வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்திய தற்காக
நன்றி சொல்லுகிறேன்.அவளது பெற்றோர்களைப்பற்றியும் ஊர் உறவுகள் பற்
றியும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு மேலும் மேலும்
விவரங்கள்கேட்கிறேன்.
தந்தை அழகிய சிற்றம்பலம்.எவ்வளவு அற்புதமான தமிழ்பெயர்.
இலக்கியவாதிகள் இந்த பெயரின் விளக்கமாக ஒரு காவியம்
படைப்பார்கள்என நினைக்கிறேன்.
ஊரில்விவசாயம்தான்முக்கியவாழ்வாதாராம்.
வேறுஎந்தவிதமானதொழிற்கூடங்களும்இல்லை.
பஞ்சமர்கள்என்ற 5 விதமானமக்கள்ஊர்மக்களுக்குஎல்லாவேலைகளும்செய்கிறார்கள்.
தலைஅலங்காரத்திற்குநாவிதன்;
துணிவெளுக்கவண்ணான்; மார்கழிமாதம்போன்றசமயங்களில்ஊரைஅழிவிலிருந்துகாப்பாற்றும்நோக்கன்;
ஊரில்இழப்புகள்ஏற்படும்போதுஉதவிசெய்யவெட்டியான்போன்றோர்கள்இருந்தார்கள்.
இவர்கள்எல்லோருக்கும்பொதுஇடங்கள்ஒதுக்கப்பட்டிருந்தன.
ஆடு, மாடுகளுக்குஆங்காங்கேமேய்ச்சல்நிலம்ஒதுக்கப்பட்டிருந்தது.
நீர்நிலைகள்அற்புதமாகஒழுங்காகஅமைக்கப்பட்டுநீர்வரவும்வடிகாலும்சிறப்பாகஇருந்ததால்எந்தநிலையிலும்ஊரில்வெள்ளப்பெருக்குஏற்படுவதில்லை.
கடற்கரைசுமார் 15 கி.மீ. தொலைவில்இருந்தாலும்ஊரில்நிலத்தடிநீர்தான்குடிநீர். வயல்வெளிகளுக்குக்காவிரிஆற்றுப்பாசனம்தான்.
ஊர்மக்கள்ஒற்றுமையாகஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழ்ந்துகொண்டிருந்தகாலமது.
சுமாரான
பள்ளிப்படிப்புடன் விவசாயம் பார்க்க வந்து விட்டவர் அழகிய
சிற்றம்பலம். ஆனால்
அன்றைய கிராமப்புற கல்வியில் சற்றே தமிழ் படிக்கத்
தெரிந்தவர்கள் பெரிய புராணத்தையும், சிலப்பதிகாரத்தையும்
, திருவாசகத்தையும், திருவருட்பாவையையும்
மேலும் கீழுமாக முன்னும்
பின்னுமாகப் புரட்டிப் போட்டவர்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக
இருந்தவர்
அழகியசிற்றம்பலம். திருமணமாகி ஒரு பெண்ணுக்குத் தந்தையாக
வாழ்ந்தாலும்
அவர் ஒரு யோகி என்று நான் ஆணித்தரமாக சொல்லுவேன்
. தினமும்காலை 4 மணிக்கெல்லாம்
அலாரம் இல்லாமலேயே
விழித்துக்கொண்டு காலை க்கடன் களை முடித்துவிட்டு, விளக்கறியா
இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற குழந்தையினும் மிகப்
பெரிதும் சிறியேன்
என்ற திருஅருட்பா ஆறாம் திருமறையின் பிறப்பவம்
பொறாது பேதுறல் பகுதியைப் படிப்பார். ஒருநாள், கல்லாப்பிழையும்,
கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப்பிழையும், நினையாப்பிழையும், நின்
ஐந்தெழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாய்பிழையும் தொழாபிழையும்
எல்லாப்பிழையும்
பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே என்ற பட்டினத்தார் பாடல்களைப் படித்து நெஞ்சுருகுவார்.
மண்ணை நேசிக்கும்
பெரும்பாலான கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் இருந்திருக்கிறது.
மாலை நேரங்களில் பல இடங்களில் கூத்துப்பாட்டும்
புராணச் சொற்பொழிவுகளும் நடக்கும். இப்படிப்பட்டவைகளைக்
கேட்டு கேட்டு வளரும் குழந்தைகளுக்கு நீதி நெறி விளக்கம் தன்னாலேயே விளக்கம் பெறும்.
அதனால் அவர்களதுவாழ்வில்பஞ்சமாபாதகங்களுக்குப்பயப்பட்டுஓரளவுநலமோடும்வளமோடும்வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
சித்திரப்பாவை
என்ற தேவகியின் அம்மாவும் அவளது தந்தை அழகிய சிற்றம்பலத்திற்கு கொஞ்சமும் குறைந்தவர்
இல்லை. சன்னாநல்லூருக்கருகில்சுமார்
10 கி.மீ. தூரத்திலுள்ள செம்பிய நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்
சித்திரப்பாவை. ராஜகுரு என்ற
அவரது தந்தை உண்மையிலேயே ராஜகுரு தான். கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு
செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் செம்பிய நல்லூர் மக்களின் நல் வாழ்க்கைக்குப் பாடுபட்டவர்.
அப்படிப்பட்ட ராஜகுரு
அவர்கள் சித்திரப்பாவை சுமார் 10 வயது சிறுமியாக
இருக்கையில் அகால மரணமடைந்தார். சித்திரப்பாவைக்கு
இரண்டு தம்பிகள் இருந்தனர். ராஜகுரு
அவர்களின் துணைவியர் மூன்று குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தங்களுக்கிருந்த கொஞ்ச நில
புலன்களின் வருவாயிலும் உறவினர்களின் அனுதாப ஆதரவுடன் வாழ்ந்து வருகையில் தான் அழகிய
சிற்றம்பலத்துக் குடும்பத்தினர் பெண் தேடி வந்தனர். சற்றே வசதி படைத்த அவர்கள் தந்தை யற்ற பெண்ணாக
இருந்தாலும் குடும்பத்திற்கேற்ற குண நலன்களைக் கொண்டவர் என்ற பலரின் ஒருமித்த கருத்தால்
ஈர்க்கப்பட்டு அழகிய சிற்றம்பலம் &சித்திரப்பாவை திருமணம் நடந்தது.
அழகிய சிற்றம்பலம் பல விதங்களிலும் ஒரு உதாரண புருஷனாக
வாழ்க்கை
நடத்துபவர். நிறைய வசதிகள் இருந்தும் பேராசைப்படாதவர். பிறரது
துன்பத்தைத் துடைக்க தன்னாலான எல்லா உதவிகளையும்
செய்பவர். ஊரில்
சிலர் கூட்டுக் குடும்பங்களாக இரண்டு மூன்று
தலைமுறை என்று ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நான்கு கட்டு ஐந்து கட்டு என்று பெரிய பெரிய வீடுகளாக இருக்கின்றன.
இன்றைய
நவநாகரீக வாழ்வில் கூட்டுக் குடும்பம் உடைந்து போய் விட்டது என்றும் இளைய சமுதாயத்தினரிடம்
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது என்றும் சொல்லுகிறார்கள்.
ஆனால்இவைகள்இன்றும்சிலகுடும்பங்களில்
காப்பாற்றப்படுகின்றன என்பதுதான உண்மை.
ஆணும் பெண்ணும்
சரி சமமாகப் படித்து வேலை பார்த்தாலும் தனித் தனியாக பல இடங்களில் பல நாடுகளில் வாழ்ந்தாலும்
குடும்பத்து நிகழ்ச்சி என்றும் ஊரில் ஒரு பொது நிகழ்ச்சி என்றும் நடக்கும்போது இவர்கள்
இன்பமாக மகிழ்ச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள்.
குடும்பக் கட்டுப்பாடு
அறிமுகமாகாத நாளில் அழகிய சிற்றம்பலம் தம்பதியினர்க்குத் தேவகி ஒருபெண்ணாக எப்படித்
தனித்துப் போய்விட்டார் என்பது ஒரு ஆச்சரியம்தான். காமம்,
குரோதம், மோகம், மதம், மாச்சர்யம்
என்ற பகைவர்களை அடக்கி ஆண்டவர் அழகிய சிற்றம்பலம். அவரது விளக்கப்படி திருமணம் என்ற பந்தம் ஒரு ஆணும் பெண்ணும்
இணைந்து இல்வாழ்க்கை நடத்தவும் ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் அடைக்கலம் தர
ஏற்பட்ட உறவு என்பார். தங்களுக்கு
வாரிசு வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பொழுது இருவரும் உடல், உயிர், உள்ளம்
ஒன்றி இன உறவு கொள்ளவும் அதன் மூலம் சத்தியபுத்திரர்கள் தோன்றவும் வேண்டும் என்பார்.
இயற்கையில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களும்
Cosmic Force என்னும் மாபெரும் சக்தியினால் நடத்தப்படுகின்றன.
அதன்படி ஆடு மாடுகள் கூட தினமும் இன
உறவு கொள்வதில்லை. கற்பமாகிய
பெண் இனத்துடன் ஆண் இனம் மீண்டும் இன உறவு கொள்வதில்லை. இப்படி இயற்கையைப் படிப்பவர்கள் பள்ளி, கல்லூரிக்குச்
சென்று முனைவர் பட்டம் வாங்கியவர்களைவிட அறிவு ஜீவியாக, ஆச்சர்யப்புருஷர்களாக இருப்பதைக்காணலாம்.
தேவகியின்தந்தைஅப்படிஒருயோகி,
கிராமப்புறங்களில்
இன உறவு ஒரு பொழுதுபோக்குநிகழ்ச்சியாகவும்
அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குடும்ப வளர்ச்சிக்கு உதவும் என்றும் நினைக்கிறார்கள்.
ஆனால் அங்கும் கூட தனி மனித உணர்வுகள்
உயர்தர்ம நெறிகள் மதிக்கப்படுகின்றன. என்பதற்கு
அழகிய சிற்றம்பலம் &சித்திரப்பாவை தம்பதியினரே ஒரு உதாரணம்.
மனித வாழ்வின்
ரகசியங்களைத் தெரிந்து கொண்ட ஒரு ஞானிபோல் அழகிய சிற்றம்பலம் ஐயா பேசும் போது நான்
அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பதைத்தவிர எதிர் கேள்வி கேட்பதற்கோ வேறு விளக்கம் கேட்பதற்கோ
தோன்றாது.
பிண்டம் எனப்படும்
நமது உடம்பிற்கும் அண்டம் எனப்படும் வெளி உலகுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர் விளக்குவார்.
அண்டமும் பிண்டமும் ஒரு சில நிலைகளில்
ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று நம் விஞ்ஞானிகள் வேதகாலத்திலேயே கண்டறிந்திருக்கிறார்கள்
என்பதைப் படித்திருக்கிறேன்.ஆனால் நாம் அறிந்த
பல வேத விற்பன்னர்கள் மட்டுமல்லாமல்
நாம் அறியாத மாபெரும் சித்தர்களும்
வித்தகர்களும் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை அழகிய சிற்றம்பலத்தின்
உருவில் அறிந்து நான் ஆச்சரியப்பட்டுப் போகிறேன்.
அந்த இளமைப் பருவத்தில்
கிராமத்தைப் பற்றிய ஒரு வித மௌனமான ஆக்கிரமிப்பு என்னுள் நடந்து ஒவ்வொரு முறை விடுமுறையில்
தேவகி சன்னாநல்லூர் போகும் போதும் நானும் உடன் சென்று சில நாட்கள் அவர்கள் குடும்பத்துடன்
தங்கி வருவது வழக்கமாகிவிட்டது.
காலம் ஓட நாங்கள்
கல்லூரியின் கடைசி வருடத்தில் நுழைந்தோம். வழக்கம்
போல் விடுமுறையில் தேவகியுடன் நான் சன்னாநல்லூர் சென்றேன். இப்படிப்பட்ட ஒரு நாள் தான் அந்த விபத்து
நடந்தது.
ஏன் நடந்தது ? எப்படி நடந்தது ?
என்று விளக்கம் சொல்ல முடியாமல் கிணற்றில் தண்ணீர்
இழுக்கும் போது
வழுக்கி விழுந்து சுவரில் தலை அடிபட்டு இரண்டு நாட்கள் கோமாவில்
இருந்து
விட்டு எனது இன்னுயிர்த் தோழி தேவகி மறைந்து விட்டாள்.
ஒரே பெண்ணைப் பறிகொடுத்து விட்ட அழகிய
சிற்றம்பலம்தம்பதியினர் ஒடிந்து போயினர்.
அவர்களுக்காகவே
அவர்களின் பெண்ணாகவே,
தேவகிக்காகவே
,தேவகியாகவே இந்தக்கிராமத்தின் ஆக்கிரமிப்புக்காரணமாகவே நான் இன்னமும் எனது சன்னாநல்லூர்
பயணத்தை தொடருகிறேன்.
ஒரு முறை அழகியசிற்றம்பலம்
அவர்களிடம் கிராமப்புறத்தில், விவசாயக்
குடும்பத்திலிருக்கும் நீங்கள் எப்படி இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று எண்ணாமல்
இருந்துவிட்டீர்கள் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் சொல்லிய இரண்டு விளக்கவுரை என் பொட்டில் அடித்தது
போன்று பதிந்து விட்டது.
கணவன் மனைவி கூடி
இருப்பதனாலேயே குழந்தை பிறந்து விடும் என்று பலர் முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குயிற் குஞ்சு முட்டையைக் காக்கை கூட்டு
இட்டால் அயர்ப்பின்றி காக்கை வளர்க்கின்றது போல்... என்ற
திருமந்திரம் பாடலைக் கூறி அதற்கு விளக்கம் சொன்னார். தன் குழந்தை என்று எவருமே உரிமை கொண்டாட
வேண்டியதில்லை என்றும் உயிர்வாழ்வன எல்லாமே இறைவன் படைப்பு என்றும் சொல்லுகிறார்.
பெற்றவர்கள் என்பவர்கள்
இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்றும் அதன் காரணமாக புற உலகில் அருவமாய் திரிந்து கொண்டிருந்த
ஒரு உயிர் தன்வினை &பெறப்போகிறவர்களின் பிராராப்த கர்ம வினை
காரணமாக சம்பிரதாயமுறையால் தந்தையாகப் பட்டவன் சுக்கிலப் பையினுள் வந்து ஒரு கோடியே
ஒன்பது லட்சத்து அறுபதினாயிராம் கணப் பொழுது தங்கி பின்னர் அவனது கருணையினால் சம்பிரதாய
முறையால் தாயாகப்பட்டவரின் கருவறை சேர்கிறது. அவளது கருணையினாலும் கவனிப்பினாலும் 6 கோடியே நாற்பத்தெட்டு லட்சம்கணப்பொழுது கருவறை வளர்ச்சி பெற்று
தன் கர்மவினை தீர்க்க இம் மண்ணுலகில் பிரவேசிக்கிறது. அதற்கு நாம் எப்படி உரிமை கொண்டாடமுடியும்.
பெற்றவர்கள் இறைவனதுகட்டளையைநிறைவேற்றுகிறார்கள்;
அவ்வளவுதான்.
அருணகிரி நாதரின்
திருப்புகழில் ஒரு பகுதி எடுத்துக்கூறி எந்தக் காலத்தில் கற்பம் தரித்தால் எப்படிப்பட்ட
குழந்தை பிறக்கும் என்று விளக்கம் சொல்லுகிறார் அழகியசிற்றம்பலம், ஆக தனக்கு ஒரே ஒரு குழந்தையாக தேவகி பிறந்ததும்
அவள் இப்படி இளம் வயதில் மறைந்ததும் இறைவன் செயல் என்கிறார்.
எழில் பூத்துக்
குலுங்கும் இளமைப்பருவத்தில் ஆண்மைத்திமிரில் அடங்கிப் போயிருக்க வேண்டிய என் ஆருயிர்த்
தோழி தேவகியின் உடல் இப்படி கருகிப் போனது ஒரு பேரிடியாக என்னைத் தாக்கியது.
திருமணம் என்ற பேச்சை எடுக்கும் போதெல்லாம்
எனது தோழியின் உருவமே எதிரில் நிற்க நான் இளமைப் பருவம் கடந்து போகிறேன். போலீஸ் அதிகாரியானாலும் முரடரானஅப்பா,
கல்வி கேள்வியில் சிறந்து கலையுணர்வோடிருந்தும்
பிடிவாத குணமுடைய அம்மா, இப்படி
இவர்கள் ஒத்துப் போக முடியாத பிளவுபட்ட குடும்பச்சூழலில் நான் மணம் வீச முடியாத மலர்
போலும் வாசிக்கப்பாடத வீணைபோலவும் உலவி வருகிறேன். ஆனாலும் எனது தனி வாழ்க்கை இருண்டு போய்விடாமல் மேலும் படித்து
முதுகலை பட்டமும் பின்னர் மனோதத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றேன்.
சென்னையில் பிறந்து
வளர்ந்திருந்தாலும், உயர்கல்விகற்றாலும்,
உயர் மட்ட மக்களுடன் உலவி வந்தாலும்
எனது ஆருயிர் தோழி தேவகியின் தாக்கம் என்னுள் ஆழ்ந்த, அழிக்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
சன்னாநல்லூர் என்ற அந்த கிராமத்து
மண் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் இனிமையான நினைவுகளையும், தேவகியுடன் பழகிய நாட்களையும் ஆழ் தளத்திலிருந்து
மேல் தளத்திற்குக் கொண்டு வந்து விடும். அந்தமண்ணின்
பெருமையா? அதில் தோன்றி வளரும்
மனிதர்களின் ஈர்ப்பா என வித்தியாசப்படுத்த முடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
மனம் சற்றே இளைப்பாற நினைக்கும் போதெல்லாம்
நான் சன்னாநல்லூர் சென்று விடுகிறேன்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
.