ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

                                           இராணுவ சேவையும் சமூகமும்.

         இந்தியத் திருநாட்டின் இராணுவசேவை மற்ற நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது. உலகெ ங்கும் ஒவ்வொரு நாடும் இராணுவ சேவையைக் கட்டாயமாக்கியிருக்கும்போது இந்தியாவில் இராணுவ சேவை ஒரு தன்னார்வப் பணி .

             இதனால் இதை மற்ற அரசாங்க உத்தியோகம்போல் மிக சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.இராணுவப் பணி  என்பது ஒரு சமூக சேவையே.கடுமையான தேர்வுகள் உடலளவிலும் மனதளவிலுமிருந்தாலும் தேர்வாகிப் பணிபுறி யத்தொடங்கியபிறகும் உடலளவில் நோய் நொடிகளற்றும் பலசாலியாகவும் தன்னை வைத்துக் கொள்வது ஒவ்வொரு இராணுவத்தினரின் கடமையாகும்.கூடவே பணிசார்ந்த வேலை களில் மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்வதும் அவசியம்.ஒரு அதிகாரியோ அல்லது படைப்பிரிவுத் தலைவனோ சொல்லித்தான் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது தவறான அணுகுமுறை.



                   தனிப்பட்ட ஒரு சிப்பாயோ அல்லது அதிகாரியோ தன்னளவில் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அந்த தகுதியும் திறமையும் படைப்பிரிவின் ஒட்டு மொத்த நலனுக்கு உதவுதாக இருக்க வேண்டும்.
                இப்படிப் பணியில் ஒன்றியிருக்கும் இராணுவத்தினருக்கு அந்தப் பணிக்கும் அப்பாலும் வாழ்க்கையுள்ளது என்பதை அவர்களோ அல்லது அவர்களைச்சார்ந்தவர்களோ மறந்துவிடக்கூடாது.அப்படி மறந்தால் இராணுவத்தினர் கள் மணித் வாழ்வின் ஒரு பகுதியை இழந்துவிடுவார்கள்.இராணுவம் கரடு முரடான வாழ்க்கையென்றாலும் அதில் அன்பு,பாசம்,காதல் போன்றவற்றிற்கு இடமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.மனித வாழ்வில் இவை அடிப்படை குணங்கள்.இவையில்லாத வாழ்க்கை மனித வாழ்கையாகாது.ஆனால் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை "என்பதற்கொப்ப மனிதர்களின் இந்த அடிப்படை குணங்கள் பொருளின்மீதுள்ள மோகத்தால் ஏற்படும்போது அந்த அன்பு பாசம் போன்றவை வெளிவேஷங்களாகிவிடுகின்றன .


              இராணுவத்தினர் கள் இது போன்ற அன்புபாசம் போன்றவற்றை எப்பொழுது உணர்கிறார்கள்.? ஒவ்வொரு முறை விடுமுறையில் போகும்போதும் உற்ற மும் சுற்றமும் காட்டும் பரிவான உணர்வுகள் மூலமும் மற்றும் அதன் தொடர்பாக ஏற்படும் கடிதப் போக்குவரத்து மூலமும் தான்.ஒரு மனிதனுக்கு உற்றமும் சுற்றமும் மட்டுமே அன்பு பாசத்தோடு பழகவேனுமென்பதில்லை.சமுதாயமும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தில் இதை வெளிப்படுத்தவேண்டும்.
                 உதாரணமாக ஒரு கிராமத்திலிருந்து ஒருவன் இராணுவப் பணிக்குத் தேர்வானால் எதோ வேலையில்லாமல் அலைந்து திரிந்து கடைசியில் இராணுவத்தில் சேர்ந்தான் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு நாட்டின் முதல்தர பாதுகாப்புப்பணியில் நம் ஊர் இளைஞன் இருக்கிறான் என்று பெருமையோடு அந்த ஊரார் அவனுக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தவேண்டும்.அதனால் அந்த இராணுவ வீரன் தனது  உற்றம் சுற்றம் தவிர ஊர் மக்களுக்கும் கடமைப்பட்டவனாகிறான்.



              ஒரு குடும்பத்தில் ஒருவன் இராணுவத்தில் சேர்ந்துவிட்டால் மற்ற குடும்ப வேலைகளை பெற்றோர் ,அண்ணன்  தம்பிகள் ஏற்று நடத்துவது இயல்பு.கால வேகத்தில் ஒரு குடும்பத்தில் அல்லது தனிமனித வாழ்வில் நடப்பவை நடந்துகொண்டுதானிருக்கும்.குடும்பத்தில் ஒருவன் இராணுவத்தில் பணியாற்றத் தேர்வாகிய சுமார் 10 வருடங்களில் அந்தக் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் ஓரளவு முன்னேற்றம் காண்கின்றனர்.வயதைப்  பொறுத்து மூத்தவர்களுக்குத் திருமணம் நடக்கும் .சில சமயம் வயதில் இளையவர்களுக்குக்கூட திருமணம் நடத்தவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை இற்படலாம்.இப்படிப்பட்ட சமூக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த இராணுவ வீரன் விடுமுறையில் ஊருக்கு வருகிறான் என்றால்குடும்ப உறுப்பினர்கள் வேலையும் ஊர் மக்களின் வேலைகளும் ஸ்தம்பித்துவிடுமா என்ன ? அவை எப்போதும் போல் நடந்துகொண்டுதானிருக்கும்.


        எல்லைப்புறத்தில் எதிரிகளுக்கும் இயற்கைக்கொடுமைகளுக்கும் ஈடுகொடுத்துப் போராடும் இராணுவத்தினர்கள் ஆண்டுக்கு இரண்டுமாதம் விடுமுறையில் வருகிறார்கள்.அந்த விடுமுறை நாட்கள்  அவர்களுக்கு மகி ழ்ச்சியாக புத்துணர்ச்சி ஊட்டுபவைகளாக இருக்கவேண்டும்.பொதுவாக அப்படி நடப்பதில்லை.குடும்ப உறுப்பினர்களும் ஊர் மக்களும் தங்களது அன்றாட வாழ்க்கைப்பிரச்சினையில் மூழ்கி வெளி வர முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும்போது விடுமுறையில் வந்த இராணுவத்தினரை யார் கவனிக்கப்போகிறார்கள்.?
                இங்குதான் நாம் சற்றே கவனம் செலுத்தவேண்டும்.இராணுவப் பணியிலிருப்போர் எப்பொழுது வேண்டுமானாலும் விடுமுறையில்  போகலாம் என்றிருந்தாலும் ,வழக்கமான இராணுவ ஒழுங்குமுறை விதிகளுக்கு விடுமுறை போன்ற மிக சாதாரண நிகழ்ச்சிகளும் தப்புவதில்லை. ஒரு படைப்பிரிவில் சுமார் 1000 பேர் பணியாற்றுகிறார்கள் என்றால் எல்லோரும் ஒரே சமயத்தில் விடுமுறை கேட்டால் கொடுத்துவிட முடியுமா? குறைந்த பட்சமாக சுமார் 70 % படைப்பிரிவினர் எப்பொழுதும் படைத்தளத்தில் இருக்கவேண்டும்.அதிகாரிகள்,அதிகாரிகளல்லாதோர் ,தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்ற பல பிரிவுகளையும் சேர்ந்தவர்களில் இந்த விகிதாச்சாரம் காணப்பட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை விடுமுறையில் போகலாம் என்று கணக்கிடுவார்கள்.ஆகையினால் ஒரு இராணுவ வீரன் எந்த மாதத்தில் விடுமுறையில் வருவான் என்பது அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கும் .அதைப்பொறுத்து அவனைச்சார்ந்தவர்களும் ஊர்க்காரர்களும் அந்த இராணுவ வீரன் விடுமுறை நல்லவிதமாக செலவாக ஆவண செய்யவேண்டும்.


           ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இப்படிப்பட்ட சேவை மனப்பான்மை எல்லோருக்கும் வருவதில்லை.பொதுவாக மக்கள் சுயநல விரும்பிகளாக ,பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் வாழ்கிறார்கள்.ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவ முன்வராத சமுதாயத்தில் இராணுவ வீரனுக்கோ,அடுத்தவீட்டுக் காரர்களுக்கோ,அல்லது ஊர்க்காரர்களுக்கோ எப்படி உதவப்போகிறார்கள்.
இப்படிப்பட்ட மனப்போக்கினால் சமுதாய சீரமைப்பு சிதைந்து வருவது கண்கூடு.மனிதநேய ஆர்வலர்கள் ஒன்றுகூடி சமுதாய உணர்வுகள் அழிவதைத்தடுக்க  ஆவன  செய்ய  வேண்டும்.


               "இராணுவத்தினர் நல்வாழ்வு அமைப்பு"என்ற ஒன்றை ஏற்படுத்தி ஆசிரியர்,மருத்துவர்,காவல்துறை அதிகாரி ,வழக்கறிஞர் போன்றோர் அடங்கிய ஒரு குழு அதைச்செய்யலாம்.
                    ஒய்வு பெற்ற  இராணுவத்தினர் பெருமளளவு இதுபோன்ற அமைப்புகளில் பங்கு கொண்டு உதவவேண்டும்.பணியிலிருக்கும் காலத்தில் எவ்வளவோ ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்த இராணுவத்தினர் ஒய்வு பெற்ற பின் தன்னிச்சையாக தரிகெட்டுப்போவது நல்லதல்ல.
                        இராணுவம் பல அற்புதமான வாழ்க்கை நியதிகளைக் கற்றுத்தந்திருக்கிறது.இதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதோடு இராணுவத்தில் பணியாற்றும் பெரும் பேரினை இழந்த மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக நாம் இருக்கவேண்டும்.


                      இது கர்னல் கணேசன் தன் பிறந்த ஊரான சன்னாநல்லூரில் சமுதாய நலனுக்காக அமைத்திருக்கும் " அகத்தூண்டுதல் பூங்கா." 

                                                                        மீண்டும் சந்திப்போம் .........





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக