காக்காக் கோட்டூர் முருகையன்.
காக்காக் கோட்டூர் என்ற ஊர் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூருக்கும் சன்னாநல்லூருக்குமிடையில் உள்ளது.1963 ல் பொதுப்பணி துறை பொறியாளர் வேலையைத்தூக்கி எறிந்துவிட்டு இராணுவ அதிகாரியாகத் தேர்வாகியிருந்தேன்.இளமை முதல் எங்களை வழிநடத்திவந்த எங்கள் மூத்த அண்ணன் பசுபதிக்குக் கூட இது தெரியாது.அவர் தெரிந்துகொண்ட பொழுது மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானார் .
பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறி என்னிடம் இல்லை.உடல் வலிமையையும் மன வலிமையையும் வளர்த்துக்கொண்ட நான் அதிரடி செயல்பாடுகள் நிறைந்த இராணுவ வாழ்க்கை நன்றாக இருக்கும் என நினைத்தேன்.மேலும் 1962 சீன ஆக்கிரப்பினால் பொலிவிழந்த தாய் திருநாட்டைக் காப்பது ஒவ்வொருவருடைய கடமை என்றுணர்ந்தேன்.ஐந்து அண்ணன் தம்பிகளுடன் பிறந்திருந்த எனக்கு உயிர் ஒரு பொருட்டல்ல.
ஆனால் ,வீட்டில் மூத்த மகனாகப் பிறந்து எங்களை வழி நட த்திவந்த எங்கள் அண்ணனுக்கு எங்கள் பரம்பரையிலேயே அறிமுகமில்லாத புதிய பாதையில் நான் பயணிக்க முயற்சிப்பது கலக்கமாக இருந்தது போலும்.
இராணுவ வாழ்க்கைப்பற்றி தெரிந்துகொள்ள எங்கெங்கோ தேடி ஒரு ஒய்வு பெற்ற ஒரு இராணுவத்தினரைக் கண்டு பிடித்தார்.மறுநாள் அவரை சந்தித்து இராணுவ வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள சென்றோம்..அவர் காக்கா கோட்டூர் பக்கத்திலிருந்தார்.எங்களை அன்போடு வரவேற்றார்.அண்ணன் விபரங்களைச்சொல்லி ,என் தம்பி இராணுவத்திற்கு தேர்வாகியிருக்கிறான்,அந்த வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் என்கிறார்.மிகவும் அலட்சியமாக என்னை மேலும் கீழும் பார்த்த அந்த இராணுவ ஆள்,பேச ஆரம்பித்தார்.;
தம்பி.! இராணுவ வாழ்க்கை கொஞ்சம் கடினமானதுதான்.ஆனால் சாப்பாடு,சம்பளம் எல்லாம் பரவாயில்லை. உனக்கு என்ன டிரேடு (Trade ) கொடுத்தார்கள் என்று கேட்டார்.
இந்த வார்த்தையை முதன் முதல் கேட்ட நான்,அப்படி ஏதும் கொடுக்கவில்லையே
தம்பி ! இராணுவத்தில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஒரு டிரேடு கொடுப்பார்கள்.கீழ் நிழலைப் பணிகளான துப்புரவாளர் ,சமையல்காரர் ,பாத்திரம் கழுபுபவ ர்கள்,முடி திருத்துவோர் போன்ற பணிகளுக்கு ஆள் எடுக்கும்போது அதை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள்.பயிற்சிக்குப் போகும்போதுதான் தெரியவரும். ஆகையினால் நீ கவனமாக இருக்கவேண்டும் .
எனக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன சொல்லுகிறார் இவர்.?
பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருக்கும் நான் ஏன் இப்படி கீழ்நிலை வேலைகளுக்குப் போகவேண்டும்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.இராணுவப்பயிற்சி முடிந்து 2 / Lt என்ற அதிகாரியாக அமர்த்தப்படுவேன்.
இதைக்கேட்டவுடன் ,மிக அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்த அவர்,ஒரு மிரட்சியுடன் எழுந்து கொண்டார்.சற்றே உன்னிப்பாக என்னைக்கவனித்த அவர் என் கைகளை பற்றிக்கொண்டார்.
தம்பி ! என்னை மன்னித்துவிடுங்கள்.நம் பக்கத்து மனிதர்களின் எண்ண வீச்சுக்கு அப்பாற்பட்டது இராணுவ அதிகாரிகளின் பதவிகள்.எனக்குத்தெரிந்து ஒருசிலர்கள்தான் சிப்பாயாக சேர்ந்து படிப்படியாக முன்னேறி ஓய்வுபெறும் முன் அதிகாரியாவார்கள்.இப்படி நேரடியாக அதிகாரிகளாகும் பேரதிர்ஷ்ட்டம் பெரும்பாலும் வட இந்தியர்கள், உயர்குடிப்பிறந்தோர்,பெரும் பணக்கார வர்க்கத்தினர்க்குத்தான் கிடைக்கும்.நீங்கள் அதிகாரியாகப் போக இருப்பது பெரிய பாக்கியம்.அது ஒரு அரச வாழ்க்கை.சந்தோஷமாகப் போய்வாருங்கள் என்கிறார்.
அண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சி.அப்படியே ஒரு ஜோஸ்யரைப்பார்த்து உயிருக்கு ஆபத்து ஏதும் வருமா என்று விசாரிப்போம் என்று காக்காக் கோட்டூர் முருகையன் என்பவரிடம் அழைத்துச்சென்றார்.ஜோசியர் எனது ஜாதகத்தை பார்த்துவிட்டு குறிப்பிடும்படியான ஆபத்து ஏதுமில்லை,நன்றாக இருப்பார் என்று சொன்னார்.
நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தோம்.ஐந்து அண்ணன்தம்பிகள் ,இரண்டு அக்காள் தங்கைகள் என்ற பெரிய குடும்பத்தில் நான் ஒருவன் மட்டுமே மிகவும் சுசுறுப்பாகவும்,எல்லா வேலைகளும் செய்பவனுமாக இருந்தேன் இரண்டு அண்ணன்களும் வெளியூரிலிருந்தார்கள்.அக்காள் திருமணமாகி கணவருடன் திருச்சியிலிருந்தார்.அப்பா,உடல் நலமில்லாத அம்மா,இரண்டு தம்பி ஒரு தங்கை என கிராமத்திலிருந்தோம்.
எனது இராணுவப்பணி பொருளாதாரத் தைப்பொறுத்தவரை மிகவும் உதவியாக இருந்தது.சின்ன அண்ணன் ,தங்கை, மற்றும் தம்பி திருமணம் முடித்தோம்.
இராணுவப்பணி எனது குடும்பத்தில் என்னைத் தனிமைப் படுத்திவிட்டது என்றால் மிகையில்லை.மேலும்,இராணுவ வாழ்க்கையை நன் உயிரினுமேலாக நேசிக்க ஆரம்பித்தேன்.அதிகார வர்க்கத்தில் அவசரகால கமிஷன் அதிகாரி என்ற எனது நிலையை பெரும்பாலோர் அலட்சியமாகவே பார்த்தார்கள்.அவர்கள் முகத்தில் கரி யைப் பூசுமளவுக்கு நான் உடலாலும்,மனதாலும்,எனது செயல்பாடுகளால் நிரூபித்தேன்.
எனக்கு படைப்பிரிவு தலைமைக் கொடுக்க மிகவும் தயக்கம் காட்டியவர்களை மெய்சிலிர்க்கவைத்தது எனது செயல் பாடுகள். எனது பெற்றோர்களது ஆசிகள் எனக்குப் பூரணமாகக்கிடைத்தது.இறைவனின் தூதுவனாக எனது வாழ்க்கைத்துணைவி வந்தார்.அற்புதமான இரு ஆண்மக்களைப் பெற்றோம்.
இலையுதிர் காலம் போல் உறவுகள் இப்பூவுலகைப் பிரிய மீண்டும் வசந்தம் வரும் என்று நான் காத்திருக்கிறேன்."யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் " என்பதுபோல் எனது பிறந்த ஊரில் "அகத்தூண்டுதல் பூங்கா "அமைத்து சரித்திரம் படைக்கத் தயாராகும் சன்னாநல்லூர் என்று செயல் பட்டுக்கொண்டிருக்கிறேன்.