வியாழன், 15 செப்டம்பர், 2022

                              வீழ்வேனென்று  நினைத்தாயோ .

                      (  சிதைந்த வாழ்வும் சீரழியும் மனித நேயமும்.)

                      விதியென்னும் குழந்தை கையில் உலகம் தன்னை 

                      விளையாடக்   கொடுத்துவிட்டாள் இயற்கை அன்னை -அது

                       விட்டெரியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை 

                        வீழ்த்திவிடும் மேல் கீழாய் வியந்திடாதே.!

          2005 ம் ஆண்டு தனது உடல் நலத்திலும் திறமையிலும் நம்பிக்கை வைத்து ,எதிர்காலக்  கனவுகளுடன் இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் சேர்ந்தார் பிரபாகரன்.கனவுகள் மெய்ப்பட சென்ற இடத்திலெல்லாம் சிறப்பாக செயலாற்றிவந்தார். 


            இராணுவத்தின் புகழ் மிக்க அதிரடிப்படையான National Security Guard (N S G )என்னும் பிரிவுக்குதேர்வாகி  பயிற்சி முடித்து  அங்கு பணியாற்றி வருகையில் ஒருநாள் காலையில் இரண்டாம் தளத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து நினைவுகளிழந்த நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.

                   பிரபாகரனின் வாழ்க்கை தடம் புரண்டது. அவரது வருவாயை நம்பியிருந்த  குடும்பம் நிலைகுலைந்து.இராணுவ மருத்துவமனையில் இரண்டுவருட போராட்டத்திற்குப்பின் சக்கரநாற்காலிதான் துணை என்று இராணுவத்திலிருந்து  நூறு சாதவீத ஊனமுற்றோருக்கான ஓய்வூதி யமும் வாழ்நாள் முழுவதும் உதவியாளர் அலவன்சுடனும் பிரபாகரன் வெளியேற்றப்பட்டார்.  



         ஏராளமான திட்டங்களுடன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனது கிராமத்திலிருந்து புறப்பட்ட பிரபாகரன் சுமார் பன்னிரண்டு வருடங்களுக்குப்பிறகு  சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார்.சற்றே தடம் மாறினாலும் தான் சாதிக்கப்பிறந்தவன் என்ற எண்ணம் மட்டும்  பிரபாகரனை விட்டு நீங்க வில்லை.

                                தொடர்ந்து தான் எழுந்து நடக்கவேண்டிய வழிமுறைகளைத்தேட ஆரம்பித்தார்.சென்னையில் உள்ள "மயொட் " ( Miot Multy Speciality Hospital ) முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய  உப கரணங்களுடன்  நவீன முறையில் சிகிச்சை அளிப்பது  பற்றி அறிந்து சென்னை வந்தார் .சுமார் 25 லட்ச ரூபாய் முன்பணம் கட்டினால்தான்  சிகிச்சை ஆரம்பிக்கப்படும் என்கிறார்கள்.மலைகளைப்புரட்டி கடல்களைத்தாண்டி எங்கெங்கோ முட்டி மோதி ,மனைவியின் தாலி உட்பட அடகு வைத்து பணம் கட்டினார் .



     இதோ ! எழுந்து நடக்கிறார் பிரபாகரன்.இப்போது மனித நேயம் மிக்கவர்களிடம் தனக்கோ அல்லது ஆசிரியைப்பயிற்சி முடித்துள்ள  தனது மனைவிக்கோ ஒரு வேலை தரும்படி இறைஞ்சுகிறார்.

                தொழிலதிபர்களும், கல்வியாளர்களும் நிறைந்த நகரத்தார் பெருமக்கள் வாழும் காரைக்குடியில் வசிக்கிறார் பிரபாகரன்.மருத்துவ பரிசோதனைகளுக்காக அடிக்கடி சென்னை மயோட்  மருத்துவமனை சென்றுவர வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.

                      மனிதநேயமிக்க பெருமக்கள் பிரபாகரனுக்கு ஒரு நிரந்தர வருவாய்க்கு உதவுங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.உயர் இராணுவ அதிகாரியானாலும் எண்பதாவது  அகவையில் பயணித்துக்கொண்டிருக்கும் கர்னல் கணேசன் என்னும் நான் உயிர்வாழும் வரை எனது ஓய்வூதியத்தில் ஒரு சிறு தொகையை  அனுப்ப முடிவுசெய்துள்ளேன்.

                         4  Engineer Regiment  என்ற படைப்பிரிவின் முன்னாள் தலைவனான நான் எனது  படைப்பிரிவைச்சேர்ந்த ஒரு சிப்பாய்க்கு நேர்ந்த தூரதிர்ஷ்ட்டத்தை நினைத்து வருத்தப் படுவதுடன் எனது மகனைப்போன்ற அவருக்கு ஓரளவே உதவ முடிந்தமைக்குப் பெருமைப்படுகிறேன்.


                பிரபாகரனின் கைபேசி எண்  9841664948.