சனி, 2 மார்ச், 2019

நஞ்சையும் புஞ்சையும் விளையும் இந்த மண்ணில் .......
                     திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமம்.
                     28    Feb 2019 வியாழக் கிழமை மாலை 4.00 மணி.
கர்னல் கணேசன் அமைத்துள்ள அகத்தூண்டுதல் பூங்காவில்  கூட்டம் நிரம்பி வழிகிறது.A I R காரைக்கால் ஸ்டேஷனின் F M பிரிவில் அங்கு ஒரு மணி நேர  "ஊரும் உறவும் "நேரலை நிகழ்ச்சி  4.00-5.00 மணி வரை நடை பெற உள்ளது.பொது மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து  தங்களது குரலை ரேடியோவில் கேட்கவேண்டும் என்று ஆர்வமுடன் கூடி இருக்கிறார்கள்.

                          "பிறந்த இடம் தேடிநடந்த தென்றலே 
                                   பெருமையுடன் வருக....."


என்ற  பாடலுடன் கணேசன் வரவேற்கப்படுகிறார்.நிகழ்ச்சி தொடங்குகிறது.'"அகத்தூண்டுதல் பூங்கா "என்ற இந்த சுய சிந்தனை அரங்கம் எப்படி,ஏன் ,உருவானது என்று காரண காரியங்களுடன் கணேசன் விளக்கிச் சொல்ல வயல் வெளிகளிலும் காரிலும் கடைகளிலும் F M ரேடியோ  விலும்  நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் பூங்காவுக்கு ஓடிவருகிறார்கள்.

       சுமார் 50 Km சுற்று வட்டாரத்தில் கணேசனது குரலும் பொதுமக்கள் குரலும் இடை இடையே பொருத்தமான பாடல்களுமாக நிகழ்ச்சி மிக மிக மகிழ்வோடு நடந்து முடிந்தது.

             இரவு  சுமார்  8.00 மணியளவில் ஒரு ஸ்கூட்டரில் இரண்டு பேர் பூங்காவிற்கு வந்து கர்னல் கணேசனை சந்திக்க முடியுமா என்ற கேள்வியோடு நின்றார்கள்.

                      கணேசன் வெளியே வந்து அவர்களை வரவேற்று  "வாருங்கள் "என்று அழைத்தார்.

                    அப்பொழுதுதான் தெரிந்தது அவர்களில் ஒருவர் இரு கண் பார்வையையும் முற்றிலும் இழந்தவர் என்பது.

கணேசன் அதிர்ச்சியடைந்தார்.இரு விழிப்பார்வையையும் இழந்தவர் பூங்காவில் எதைப்பார்க்கப் போகிறார்.?
   
                       அந்தப் பார்வை இழந்த நண்பர் M A,M Phil படித்தவர் என்றும் அதன் பிறகே பார்வையை சில மருத்துவ காரணங்களினால் இழக்க நேரிட்டது என்றும் சொன்னார்.ஆனால் பார்வை இல்லை என்பதனால் தனது அறிவுச்செல்வத்தைப் பூட்டி வைத்துவிடாமல் ஏராளமான மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதாகவும் சொன்னார்.

                       அன்றைய "ஊரும் உறவும் " F M  ரேடியோ நிகழ்ச்சியை  முழுவதும் கேட்டதாகவும் சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனை நினைவுபடுத்தும் இந்த சன்னாநல்லூர் சகதியில் பிறந்து பனியுலகை  ஆண்ட பாரதப் புதல்வன்  கணேசனை உடனே சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நண்பரின் உதவியுடன் வந்ததாகவும் சொன்னார்.

                    கணேசன் மிக மிக பெருமையுடனும் கருணையுடனும் அவர்களுடன் பேசிவிட்டு தனது நூல்களில் சிலவற்றை அவர்களுக்கு அன்போடு வழங்கினார்.
  ஒரு பேப்பரும்  பேனாவும் கேட்ட நண்பர் மடை திறந்த வெள்ளம்போல் ஒரு கவிதை சொல்ல பார்வையுள்ள அவரது நண்பர் எழுதினர் .

                  இதோ அந்த கவிதை உங்களுக்காக !

                                              The Great Polestar.
       நஞ்சையும் புஞ்சையும் விளையும் இந்த மண்ணில் 
          பஞ்சமும்  பசியும் போக்கிடமுடிந்தது.
          நல்லறமும் நற்செயலும் நவின்றிட யாருமில்லை.
           எதிர்கால இளைஞர்களை செதுக்கிட சிற்பியில்லை.
          சிதைந்தது அவர் வாழ்வு;துடித்தது என்போன்றோர் மனம்.
          அகத்தின் சுரங்களை செவிமடுக்க எவருமில்லை.

            அகத்தில் விளையும்  ஆத்மாவின் சக்தியை கூட்ட  
           பூங்கா அமைத்திட்ட புதுமை நாயகரே !

             நூறாண்டுகளிலும் நோயற்ற வாழ்வுதனை வாய்க்கப்பெற்று 
           வாழ்க!  வாழ்க ! வாழ்கவே !!!
          வண்டமிழ் நாள்போல வளர்க்க உன் புகழ்.
                                                        என வாழ்த்தும் 
                                                       இவன் பெயராம் 
                                                             சி.சே.யாதவன் 
எழுதிய நண்பர் 
மாத்தூர் கண்ணன் என்கிற 
ஜெயக்குமார்.


                    பார்வை இழந்த நண்பர் யாதவன் தேசியக்                          கொடிபிடித்திருக்கிறார்.