செவ்வாய், 7 ஏப்ரல், 2020

                                                              மண் மேடுகள்.

  1965 August 28 சமயத்தில்  இந்திய பாகிஸ்தானிய போர்க்கால சூழ்நிலையில் Army Head quarters Reserve  6 Mountain டிவிசன் என்ற எங்களது படைப்பிரிவு அம்பாலாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சிவில் ,மிலிட்டரி வண்டிகளில்  உத்திரவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
                  அப்பொழுது வந்த சைனிக் சமாச்சார் பத்திரிகையில் ஒரு பகுதி " The innocent girl became a widow before she could become a woman. " என்று ஒரு இராணுவ நிகழ்வு பற்றி வந்தது படித்தேன்.
              01 September 1965 போர் ஆரம்பமாகிவிட்டது.44 Field Park company என்ற எனது படைப்பிரிவு எங்கெங்கோ சுற்றியது.நான் பாகிஸ்தானின் விமானத்தாக்குதலில் சிக்கி காலில் குண்டடிபட்டு பதான்கோட், டெல்லி ,லக்னோவ் ,சென்னை போன்ற மருத்துவ மனைகளில்
சிகிச்சை பெற்று மீண்டும் எனது படைப்பிரிவு சேர்கையில் போர் முடிந்து எனது படைப்பிரிவினர் மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானின் "சியால்கோட் "என்ற நகரத்திற்கருகிலிருந்தார்கள்.











                  போரின் தாக்கம் என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.அப்பொழுது சில உண்மை,சில கற்பனை என்ற நினைவுகள் கொண்டு உருவாக்கியது "மண் மேடுகள் "என்ற எனது நூல்.இன்றுவரை பதிப்பகத்தாரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.இந்த நூலின் விமரிசனம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் "க.அன்பழகன் "
அவர்கள் எழுதியது.
             இதோ ! உங்களுக்காக ! !
                                       தேசப்போராளியின்  உள்ளக்கோயில் ......
கற்றது கைம்மண்ணளவு,கல்லாதது உலகளவு என்று ஒளவை சொன்னாள்.ஒரு மனிதன் தன் மரணத்தின் கடைசி நிமிடம் வரை கற்றுக்கொண்டுதான் முடியவேண்டும். உலகின்
ஒவ்வொருகணமும்,விந்தைகளும்,வியப்புகளும்,ப்ரம்மாண்டங்களும்,பேரச்சங்களும்,பெரு நிகழ்வுகளும் என நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.உலகின் மனிதனாகப் பிறப்பு எடுத்துவிட்டவர்களில் ஒரு சிலரே இறப்பதற்குள் எதையேனும் இந்த தேசத்திற்கு பங்களிப்பாகச்செய்துவிட்டு அது தேசத்தின் விழுமிய அடையாளமாக அதை உருவாக்கியவன் என்கிற தன்னையும் நினைவுகூர்தல் வேண்டும் என்று நினைத்து உழைப்பார்கள்.
இல்லை.அர்பணிப்பார்கள்.
               தேசத்தின் நலனுக்காக அதன் ஒவ்வொரு அசைவிலும் அதனைப் பாதுகாப்பாகக் காத்து நிற்கிற மனிதர் கர்னல் கணேசன்.அவரைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.ஆனால் அவர் எழுதிய இந்த புத்தகம் அந்த மனிதனின் உயரிய சிந்தனைகளையும் தேசத்திற்கான தொண்டுகளையும் அதற்கான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இன்றுவரை இயங்கும் தன்னலமற்ற சேவைகளின் ஒளிர்வையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருகிறது .
                இந்த நூல் அவரின் இராணுவ தளத்தில் பணியாற்றிய அனுபவத்தை மட்டுமே உணர்த்த வந்ததல்ல.தன்னை ஈன்றெடுத்த தேசத்திற்காக யாரும் ஆணையிடாமல் அச்சுறுத்தாமல் அதிகாரம் செலுத்தாமல் தன்னுடைய செங்குருதியிலேயே உணர்வாக ஊறித் திளைத்துச் செயல்பட வைக்கவேண்டும் என்கிற சத்திய முகங்களைக் காட்சிப்படுத்துகிற நூலாகும்.


                    ராணுவத்தில் சேர்வது  என்பது பிழைப்புக்காக என்பது ஒருபுறமிருக்க அப்படி வாழ்க்கை துரத்தச்சென்று சேர்ந்தவரல்ல கர்னல் கணேசன்.பொதுப்பணித்துறையில் உயர் பதவியில் திறம்படச் செயலாற்றிய பொறியாளர்.நாட்டிற்கு கேடு வந்திருக்கிறது .கேடு  நீக்க வாருங்கள் என்றவுடன் அரசு  பணியை அப்படியே விட்டு விட்டு தேசம் காக்க ஓடிய மாண்பாளர் கர்னல் கணேசன்.


                  இது எல்லோருக்கும் அமையுமா? அமையாது.இப்படியொரு மனப்பாங்கு பிறந்தது முதல் குருதியிலேயே கலந்து இருக்கவேண்டும்.அதுதான் கொப்பளித்து ஓட வைத்திருக்கிறது.
                     இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் அனுபவம் கலந்த பொறுப்புணர்ச்சியும் நாட்டுப்பற்றும் உழைக்கும் துடிப்பும் என ஒவ்வொரு சொல்லிலும் கலந்து எழுதப்பட்டமையைப் படிக்குபோது உள்ளத்தில் ஆணியெழுத்தாய்ப்  பதியவைக்கிறது.
                                 "உடலாலும்,மனதாலும்,நினைவாலும்,நோக்காலும்,சொல்லாலும்,
செயலாலும் சீருடையணிந்த வாழ்க்கையை நேசித்தவர்.ஆனால்
 இந்த வாழ்க்கையின் அற்புதங்களையும்,அவலங்களையும் வாழ்ந்து பார்த்துதான் புரிந்துகொள்ளவேண்டும்."
              கர்னல் கணேசனின் சொற்கள் இவை.இப்படித்தான் 30 ஆண்டுகள் அவர் பணிபுரிந்திருக்கிறார்.அது இந்த நூல் முழுக்க விரவிக்கிடக்கிறது.சத்தியத்தின் அடையாளங்களாக அவை இந்நூலில் உயிர்த்துக்கிடக்கின்றன.
                  அரவிந்தன்,தேவகி,அரவிந்தனை நேசமும் பாசமும் கொண்டு அர்ச்சிக்கும் ஒரு பெண் பரிமளா.(அவள்தான் இந்நூலின் கதை சொல்லி ) எனக் குறுகிய சட்டகத்திற்குள் இப்படைப்பு உருக்கொண்டிருக்கிறது.எங்கும் தடையில்லை,தளர் வில்லை.உண்மையின் சொரூபங்களைச் சிலை வடிப்பதுபோல வடித்துக்கொண்டே போகிறது ,இரு கரைகளுக்குள் கரைமேவா கரைதொட்டோடும் அழகிய நதியின் சீரான வேகத்தைப்போல.நம்மிடம் பல இடங்களில் பேசுகிறது,நம்மை உறைய வைக்கிறது,உணர்வில்  நெருப்பேற்றுகிறது,உடலெங்கும் வெப்பப்பரவலைச்  சீராக ஏற்றி நகராது கட்டிப்போடுகிறது.




               பறவை அடைகாக்கும் முட்டையை உடைப்பது போன்ற பாவம் ஒரு நூலின் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது என்பது.ஆகவே ஒவ்வொருவரும் இந்த நூலை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் கர்னல் கணேசன் வாழ்ந்த வாழ்க்கையின் சத்திய தரிசனம் புரியும்.கண்ணுக்கு விருந்தாகிக் களிக்க வைக்கும்.கனலை மனத்தில் சுடரென ஏற்றியும் வைக்கும்.
                  முதல்தரமான வீரன் தன்மானம்,நாட்டுப்பற்று,தனது படைப்பெருமை,இராணுவ சம்பிரதாயம் போன்ற உணர்ச்சிகளினால் உந்தப்பட்டு தனது உயிர் ,தனது குடும்பம் உறவு என்பன போன்ற தடைகளினால் தடுக்கப்படாமல் யாருடைய உத்திரவையோ ,கண்காணிப்பையோ எதிர்பார்க்காமல் தன்னால் எதிரியின் படைகளை ஒரு சில வினாடிகளாவது தடுத்து நிறுத்த முடியும் என்று முடிவு செய்து அந்த முடிவே மன  உறுதியைத்தரப் போராடிப் பின்னர் அறிமுகமில்லாமலேயே அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாமல் மண்ணோடு மண்ணாகிக் கலந்துபடுகிறான்.இப்படி அறிமுகமில்லாமலேயே மண்ணில் கலந்துபடும் இம் மண்மேடுகளே முதல்தர தேசீய வீரர்கள் என்று கருதப்பட்டு அவர்களுக்காகவே எழுப்பப்பட்டதே unknown soldiers சமாதி. 








               படிக்கிறபோதே  இரத்தம் துடிக்கிறது.உணர்வில் எதையோ திணித்து எரிய வைக்கிறது.ஒரு தேசப்  போராளியின் தன்னுடைய தாய் நாட்டைக்  காக்கத்துடிக்கும் மனத்தைக் காட்சிப் படுத்துகிறது.
            கர்னல் கணேசன் இராணுவப் பணியிலிருக்கும்போது செய்த பல செயற்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.குறிப்பாக வீட்டினர்க்குக் கடிதம் எழுதுதல் என்கிற செயற்பாடு போர் முனையிலிருந்தும் அவரவர் குடும்பம் சிதையாமலிருக்க உதவும் பங்கு இவற்றை உருவாக்கிய சூழல் கர்னல் கணேசனின் இன்னொரு கருணை உள்ளத்தை,செயல் திறத்தை அடையாளப்படுத்துகிறது.
                     தன்னுடைய அனுபவங்களின் கடையாக விரித்திருக்கும் இந்த நூலில் பல உணர்வு தெறிக்கும் கேள்விகளையும் எழுப்புகிறார்.
                      எந்த மக்கள் பிரதிநிதியாவது ஒரு இராணுவ வீரனின் சமாதியைப் புனரமைக்க முயற்சித்திருக்கிறார்களா ?
               வெகு நியாயமான இன்றுவரை பதில் சொல்ல முடியாத கேள்வியாக நின்று வாசிப்போரை உறுத்தல் கொள்ள வைக்கிறது.குற்ற உணர்ச்சி நெருப்பில் நம்மைத் தள்ளுகிறது.
               இராணுவ சிப்பாயைவிட அவனது மனைவியே வாழ்க்கையில் மிகவும் போராடுகிறாள். 
                     மனது கசிகிறது.இச் சொற்களில் தேசம்,தேசப்பற்று,பாதுகாப்பு இவற்றிற்காகத் தங்களைத் தியாகம் செய்யும் எந்த ஒரு வீரனும் தன்னுடைய அவலங்களைப்பற்றிக் கவலை கொள்வதில்லை.இந்த நிலையில் அவர்களைப்பற்றி இந்த தேசம் கவலை கொள்ள வேண்டாமா? என்பதையும் பூடகமாக உணர்த்துகிறார்.தேசத்தைக் காப்பவனின் வலியையும் காயங்களையும் உணர்வுகளையும் இந்த நூலில் எடுத்து உடைக்கிறார். அவற்றின் சில்லுகள் படிப்போரின் உள்ளத்தில் விழுந்து வடுக்களை ஏற்படுத்துகின்றன;வலிக்கிறது.




  
               நூல் முழுக்கப் பல்வகை சிந்தனைகளை  எழுப்பும் கேள்விகளும் நிகழ்வுகளும் சங்கடங்களும் இன்னல்களும் நிரம்பி வழிகின்றன.
அவற்றுக்கிடையில் ஒரு தேசப்  போராளியின் வாழ்க்கை அழகிய தேராக வடம் பிடித்துக் காட்டுகிறார் கர்னல் கணேசன்.குறிப்பிட்ட காலங்கள் பணியாற்றிய பிறகு கட்டாய ஒய்வு கொடுத்துவிட்டு வந்து தன்னுடைய சொந்த ஊரில் சில செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாக இந்த நூல் முடிகிறது.என்றாலும் அந்த முடிவில்லா செயற்பாடுகளில் இந்த தேசத்தின் விடியலுக்கான பல வித்துக்களை நமக்குத் புடம் போட்டுத் தருகிறார் கர்னல் கணேசன்.
            நம்மிடத்தில் ஆயிரம் இருக்கலாம்;
            ஆயிரம் லட்சங்களாகப் பெருகலாம்;
            பெருகியவை பெருங்கடல்களாகலாம்;
            ஆனாலும் அவை பயனற்றவை.
              எப்படி இருக்கவேண்டும் எப்படி பெருகவேண்டும்
            என்பதற்கு அடையாளம் வேண்டும்.
           அவை சத்தியத்தேடல் களினால்தான் அடைய முடியும்.
இதற்க்கான வழிகாட்டுதல்களைத்தான் கர்னல் கணேசன் இந்த நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
                அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல,வாசிக்கும் எல்லோரும் சுவாசிக்கவேண்டிய நூலும் கூட.
            என் மனக் கிடக்கையில்இந்நூல் ஏற்படுத்திய விளைவுகளை என்றேனும் என்னுடல் விட்டு உயிர் பிரிவதற்குள் ஒன்றேனும் செய்வேன் என்கிற  ஒற்றைச்சுடரை ஏற்றிவைத்திருக்க இந்நூல் உதவியிருக்கிறது.
                                                                     முனைவர்.க.அன்பழகன்.
                                                                          தமிழ்ப் பேராசிரியர் 
                                                                அண்ணாமலை பல்கலைக்   கழகம் 
                                                                             சிதம்பரம்.

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக