சனி, 12 மே, 2018

                                               கல்லடிபட்ட கனிக்கொத்தை 
                                          சொல்லடியின்றி காப்பீரோ 
 கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்  பற்றி படித்துவரும் வாசக அன்பர்கள் அவரது பெற்றோர் மற்றும் உற்றம்  சுற்றம் பற்றியும் ஓரளவாவது அறிந்திருப்பீர்கள்.மலரும் நினைவாக அவற்றை சற்று பார்க்கலாம்.
     திருவாரூர் மாவட்டம்   சன்னாநல் லூர் கிராமத்தில் பாவாடை -தெய்வானை குடும்பம் சுற்று வட்டார மக்களிடையே சற்று அறிமுகமானது என்றால் மிகை இல்லை.காரணம் அவர்களது வாரிசுகள் அந்த காலத்தில் (1940-50 ) கல்வியின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து கொண்டிருந்தார்கள்.
                  ஐந்து  ஆண்பிள்ளைகள் இரண்டு பெண்கள் என்ற அந்த குடும்பத்தில் மூத்தவர் பசுபதி.1947 எஸ்.எஸ்.எல்.சி யில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியவர்.
              அடுத்தவர் ராமமூர்த்தி.ஒன்றாம் வகுப்பு முதல் அவர் படித்த M.Com படிப்பு வரை ஒரு வகுப்பில் கூட முதல் மாணவன் என்ற தகுதியை விட்டுக்கொடுக்கவில்லை.உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அவர் B.Com பாஸ் செய்தபோது பல்கலைக்கழகத்தின் 34 வருட பதிவைத் தகர்த்தெறிந்து புதிய மீண்டும் அழிக்கமுடியாத பதிவை ஏற்படுத்தினார்.
         மிகவும் ஏழை என்றில்லாமல் சுமாரான வசதியுடனிருந்த பெற்றோர்,தாத்தா  பாட்டி போன்றோர் இவ்வளவு அறிவு ஜீவியான குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும்என்று அவர்களுக்கு தோன் றவில்லை.
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்.மண் தான் மிகப்பெரும் சொத்து என்று சேமித்த கொஞ்சம் பணத்தை நிலம் வாங்குவதில் ஈடுபட்டார்கள்.அப்படியும் பெருமளவில் நிலம் வாங்கிக் குவித்துவிடவில்லை



                           பெற்றோர்.அப்பா பாவாடை -அம்மா தெய்வானை
.
                தாத்தா பாட்டி காலத்தில் வாங்கிய நிலமே அதிகம்.
      இந்நிலையில் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததினால் வரவும் செலவும் சரியாகப்போய்க்கொண்டிருந்தது போலும்.
               எஸ்.எஸ்.எல்.சி தாண்டிய மேற்படிப்பு என்று குடும்பத்தால் அனுப்பப்பட்டவர் அடுத்தவரான கணேசன் தான்.
               அப்பா பாவாடைக்கு வயது ஆகிக்கொண்டிருப்பதால் நிலபுலன்களை பாதுகாக்க ஒருவர் வீட்டோடு இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.குடும்பத்தலைவி கடுமையான காச நோயால் தாக்கப்பட்டார்.
               பெரிய கூட்டமாக இருந்த குடும்பம் சற்றே விலக ஆரம்பித்தது.காலமெனும் காட்டாறு கரைபுரண்டோட பிள்ளைகளும் பெண்களும் திருமணம் ஆகி  தங்கள் தங்களது குடும்பம் என்று அவரவர்களுக்குப் பிடித்தமான இடத்தில் வசதிகளுக்கேற்ப வாழ ஆரம்பித்தார்கள்.
               பெரியவர் பசுபதி கடலூரிலும்,மூத்த பெண் திருச்சியிலும்,ராமமூர்த்தி சென்னையிலும் கணேசன் சென்னையிலும் கலியமூர்த்தி பிறந்த ஊரின் பெருமை சேர்ப்பவராக சன்னாநல்லூரிலும்,அடுத்த பெண் திருச்சியிலும்,கடைசி பிள்ளை நடராசன் சென்னையிலும் என்று அந்த சன்னாநல்லூர் குடும்பம் கல்லடிபட்ட   கனிக்கொத்து போல் சிதறியது.
                   இதில் சென்னையில் செட்டிலான கணேசன் தேசீய அளவில் பெயரும் புகழும் பெற்றிருந்தார்.அவரது சாதனைகள் பற்றி அவ்வப்பொழுது ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள சிலர் சன்னாநல்லூர் சென்று விசாரித்துள்ளனர்.

               
                          
                                     
   அன்றைய குடியரசு தலைவர் வேங்கடராமனுக்கு இராணுவ மரியாதை தரும் கர்னல் கணேசன்.

                        அதிர்ச்சிதரும் விதமாக அப்படியொரு குடும்பம் சன்னாநல்லூரில் இல்லை என்று ஊர் மக்கள் சொல்லிவிட்டார்கள்.
                   இங்குதான் விதி விளையாட ஆரம்பித்தது.
            2010 ம் ஆண்டு ஒருநாள் கணேசன் திருச்சி எக்ஸ்பிரஸ் ட்ரைனில் பகல் வேளையில் பயணித்துக்கொண்டிருந்தார்.வண்டி விழுப்புரம் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.கூட்டமே இல்லாத பயணம்.வண்டிக்குள்ளேயே கணேசன் இங்கும் அங்குமாக நடந்து வேறு ஒரு இடத்தில் அமர்ந்தார். எதிரில் உட்கார்ந்திருந்தவருடன் பேச்சு ஆரம்பமானது.
               அந்தப் பெரியவர் இந்தியாவின் ஆய்வுக்குழு தலைவராக தென் துருவ ம் சென்றுவந்த கர்னல் கணேசன் பற்றி கேள்விப்பட்டு சன்னாநல்லூர் சென்று விசாரித்ததாகவும் அப்படி யாரும் அந்த ஊரில் இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.
                நீங்கள் இராணுவ அதிகாரி என்கிறீர்களே உங்களுக்கு கர்னல் கணேசனைத்தெரியுமா? என்கிறார்.
                   அப்படியா என்று வியந்த கணேசன் தனது இடத்திற்கு வந்து தான் எழு திய நூல் ஒன்றை எடுத்து அவருக்குப் பரிசாக அளித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தார்.
             1950-60 களில் பெயரோடும் புகழோடும் இருந்த பாவாடை-தெய்வானை குடும்பம் சன்னாநல்லூர் மக்களிடையே கிட்டத்தட்ட மறைந்துபோய்வி ட்டதாக கணேசன் உணர்ந்தார்.
               காலப்போக்கில் பசுபதி,ராமமூர்த்தி,கலியமூர்த்தி,நடராசன் என்ற சகோதரர்களும் வாலாம்பாள் என்ற மூத்த சகோதரியும் இப்பூவுலகை நீத்தார்கள்.
               ஆனால் கணேசன் பாவாடை -தெய்வானை குடும்பத்தின் பெயர் சன்னாநல்லூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அறிமுகமாகும் விதத்தில் அங்கு அகத்தூண்டுதல் பூங்கா அமைத்து இளைய சமுதாயம் சாதனை படைக்கும் விதத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.



                         பிரிந்த உறவுகள் அவ்வப்பொழுது அங்கு ஒன்று கூடி பிறந்த மண்ணின் பெருமை பேசுகின்றன.






                                             தங்கை சகுந்தலாவின் குடும்பம்.


     பெரிய அண்ணன்  பசுபதி அவர்களின்  இரண்டு மகள்கள் பிரேமா மற்றும் சாந்தி .
           
ஆனால் ஒரு வருத்தம் இப்படி உறவுகள் பிறந்தமண்ணை மிதிக்கும்போது யாருக்கும் தெரிவிப்பதில்லை.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்த விதத்தில் செயல் பட்டாலும் ஒருங்கிணைந்த சக்தியாக முன்வந்தால் "பாவாடை- தெய்வானை "குடும்பம் உலக அளவுக்கு பேசப்படும் நிலையை உருவாக்கலாம் என்பது எனது கருத்து.
             கனிக்கொத்து சிதறி விட்டாலும் "சொல்லடி இன்றி '" இவர்களது வாரிசுகள் சரித்திரம் படைப்பார்கள்.
                   
                    காலம் வெல்லும்;கனவுகள் மெய்ப்படும் .

















   

புதன், 4 ஏப்ரல், 2018

                                              எனது நாடு ;எனது மக்கள் 

                          ஒரு சர்வாதிகாரிபோல் தமிழ்நாட்டைத் தன்  பிடிக்குள் வைத்திருந்த ஒருவரை கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி ஒடுக்கி சவப்பெட்டிக்குள் சேர்த்துவிட்டனர்.
                          தமிழ்நாட்டின் முழு அதிகார வர்க்கமும் கூனிக்குறுகி அவர் காலடியில் கிடந்தது.
                       காரணம் அவரது வீரம் விவேகம் ஆளுமைத்திறன் .பணத்தால் எதையும் சாதித்துவிட முடியும்என்றுபலரும்நினைக்கிறார்கள்.ஆகையினால் 
மானம் மரியாதை சுய கௌரவம் எல்லாவற்றையும் பணத்திற்காக இழக்கத் தயங்காமல்  தொண்டர் படை என்ற கூட்டம்  அவரது காலடியில் கிடந்தது.அவரது மறைவு,இன்றுவரை விடைகாண முடியாத மர்மமாகவே இருக்கிறது.

                இந்நிலையில் " இந்திய விடுதலையின் இறுதி நாட்கள் "என்ற அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்த நூலைப் படிக்க நேர்ந்தது.அதிலிருந்து சில வரிகள் அப்படியே பதிவிடுகிறேன் 

                          எனது நாடு பாரம்பரிய பெருமை மிக்கது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு வழிகாட்டியாக விளங்கியது.எமது மக்கள் உலகிற் சிறந்த வல்லுநர்கள்.எனது நாட்டின் பெருமையை அறிந்த உலக மக்கள் பல நாடுகளிலிருந்து வந்துஎமது நாட்டின் பெருமையைப் படித்திருக்கின்றனர்.மருத்துவத்திலும் வான சாஸ்த்திரத்திலும் விஞ் ஞானத்திலும்எமது மக்கள் உலகிலேயே சிறந்தவர்களாக விளங்கியிருக்கின்றனர்.குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு  சிறு சிறு கூட்டங்களாக  இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.அம் மன்னர்கள் வீரத்திற்கும் விவேகத்திற்க்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் . 

                                      இன்றைய நிலை என்ன ?

    எனது நாடு வாழ்க்கைமுறைக்கு ஏற்றது இல்லை என்று எமது மக்களே நினைக்கின்றனர்.காலம் காலமாக எமது நாடு கொள்ளையடிக்கப்பட்டது.பிற மதத்தினர் கூடிக்கூடி எமது மக்களை மூளைச்சலவை செய்தனர்.எத்தனையோ அறிவுப்பொக்கிஷங்கள் இங்கிருந்து அகற்றப்பட்டன. 

                    திரும்பவும் நாம் நமது உன்னத நிலையை அடைய முடியுமா?

                                          முடியும் ! ! !

         அறிவாளிகளும் திறமைசாலிகளும் ஒதுங்கியிருந்து வே டிக்கை ப் பார்க்காமலிருந்தால்.......

                    மனதாலும் செயலாலும் உண்மையானவர்கள் ,வல்லுநர்கள் வலிமை பொருந்தியவர்களும் ஒதுங்கியில்லாமல் முன்னே நின்று நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொண்டால் ........இந்த நாட்டில் இருக்க விரும்பாது புகலிடம் தேடி வேறு நாட்டுக்கு ஓடாமலிருந்தால் ..........

                                      நிச்சயம் முடியும்.

                 நேற்று ஆண்டவர்கள் ,இன்று ஆள்பவர்கள்,நாளை ஆளப்போகிறவர்கள்  நாட்டு மக்களின் வளத்தையும் நலத்தையும் கொள்ளையடிக்காமல்  நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவதில் ஆர்வம் காட்டினால் ......

                            நிச்சயமாக முடியும்.

                      அரசியல் களத்தில் முன் நிற்பவர்கள் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும்.இன்றும் கூட சாக்கடையை சுத்தம் செய்பவர்கள் யார்.....? அந்த சாக்கடையிலேயே உழன்று கொண்டிருப்பவர்கள்தானே.
                      திருப்பராய்த்துறையில்  விவேகானந்தா  வித்யாலயா அமைத்த சித்த பவானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம்.......
                      அன்று பள்ளி வளாகத்தில் கழிவுநீர்குளத்தை (Septic tank ) சுத்தம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் .சித்த பவானந்தர் வந்தார்.மற்றவர்கள் ,ஐயா,கழிவு நீர் சுத்தம் செய்பவர் இன்று வரமுடியாது என்று செய்தியனுப்பிவிட்டார் ,இப்பொழுது நாம் எப்படி சுத்தம் செய்வது ? என்று
செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர்.
                   சித்பவானந்தர் கொஞ்சம்கூட தயங்காமல் இடைத்துணியை அவிழ் த்துப்போட்டுவிட்டு  கோவணத்துடன்  கழிவுநீர்த்தொட்டிக்குள் குதித்து 

                            இப்படி சுத்தம் செய்வோம் 

                        என்று வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்.

                
                             தலைமை ஏற்க முன்வருபவன் திறமையானவனாக சொந்த கஷ்ட நஷ்டங்களைப் பாராமல் தனது செயல்பாட்டில் உண்மைநிலையை நிலைநாட்டுபவனாக இருக்கவேண்டும்.

                                அப்படிப்பட்டவர்கள்  அடையாளம் காணப்படாமல் எங்கோ ஒரு மூலையில் தன்னளவில் செயலா ற்றிக்கொண்டிருக்கிறார்கள். தினமும் ஆயிக்கணக்கானவர்கள் பயணிக்கும் ஒரு சாலை இது.


                                    இதன் ஒரு புறத்தில்  பார்ப்போர் மனம் விழிப்படைந்து அவர்களுக்குள் ஒரு உந்துசக்தியை ஊட்டக்கூடிய  "அகத்தூண்டுதல் பூங்கா"' அமைந்துள்ளது.

                               ஒரு சோதனைக்காக நாளை இந்த சாலையோரத்தில் நின்று  கொண்டு யாரிடமாவது ,"இது என்ன அமைப்பு " என்று கேட்டுப்பாருங்கள்.
அநேகமாக பலரும் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்.

                                இப்படிப்பட்ட மக்களை எப்படி வழி நடத்துவது.மக்கள் மனதளவில் இது நமது நாடு என்று பெருமை கொள்ளவேண்டும். நாட்டிற்கு ப் பெருமை சேர்ப்பவர்களை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தவேண்டும் .

               இன்று கொடி பிடிக்கும் தொண்டர்கள் தலைவனிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
                         தனக்கொரு பதவி.அதன்மூலமாக செல்வம் . இவர்களால் நாடு என்ன முன்னேற்றத்ததை அடைந்துவிட முடியும் ?

                 இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஒருவரின் பேச்சும் செயல்களும் பல ஊடகங்களால் விமரிசிக்கப்படுகிறது.

                  அவர் பிறப்பதற்கு முன்பாகவேப் பிறந்து இன்று எழுபத்தியாறு அகவையைக் கடந்துகொண்டிருக்கும் ஒரு இராணுவ அதிகாரி அன்று 1962 ல் தான் வாங்கிய அரசாங்க சம்பளத்தை ஆற்றில் வீசி எரிந்தார் .பின்னர் தனது பிறந்தமண்ணை  உலகின் கீழ்க்கோடியில் தூவி பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தார் . தென் துருவத்திலிருந்து ஒரு டன்  எடையுள்ள கற்பாறைகளை தமிழகம் கொண்டுவந்து  "அகத்தூண்டுதல் பூங்கா" அமைத்துள்ளார்.


                            இதை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை .

               இவரைப்போன்றவர்கள்  யாருக்காக உழைக்கிறார்கள் ?நாட்டு நலனில் அக்கறையுள்ள மனிதர்கள் .......

                        
                                     சிந்தியுங்கள் ! செயல் படுங்கள் !!
                          மேலும் விபரங்கள் தேவைப்படுவோர்  தொடர்பு கொள்ளுங்கள் ...

                                                              9444063794,9884060671
                                                    கர்னல் பாவாடை கணேசன்
                                                                                                 மீண்டும் சந்திப்போம் ...
























 



















































  

சனி, 24 மார்ச், 2018

                                                    அந்த குழந்தையே 
                                                இந்த மனிதனின் தந்தை.
                                                              (The child is the Father of the man)
             எண்ணத்தளவே வாழ்க்கை என்பது மறை மொழி .மனிதனின் செயல்பாடுகளுக்கு அவனது எண்ணங்களே அஸ்திவாரமாக இருக்கிறது என்பார்கள்.எண்ணத்தில் தோன்றாதது எதுவும் செயல் வடிவம் பெறுவதில்லை.
                   அதே சமயம் மனதில் தோன்றும் தீவிர எண்ணங்கள் செயல் வடிவம் பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதும் ஆன்றோர்கள் வாக்காகும்.
                  "பல வேடிக்கை மனிதர்களைப்போல் நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ "என்ற பாரதியின் பாடலை மனதில் கொண்டு எனது வாழ்க்கை சாதாரண மனிதர்களைப்போல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்த போது  கனவிலும் நினைத்திராத இராணுவ வாழ்க்கையில் நுழைகிறேன்.
                அந்த இளம் மனதில் தோன்றிய எண்ணங்களைப்பாருங்கள்.

             இராணுவ வாழ்க்கைதான் நான் செல்ல வேண்டிய பாதை என்று நடக்க ஆரம்பிக்கிறேன்.எல்லைப்புற வாழ்க்கை,இயற்கைப்பேரிடர்கள்  போர்க்களம் என்று காட்டுத்தீயில் புகுந்து வரும்பொழுது நான் வைரமா? இல்லை கரிக்கட்டையா? என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
                          அன்று நான் எழுதியதைப்  பாருங்கள்.


                        32 வது  வயதில் அடியெடுத்து வைத்த பொழுதுகூட எனக்குத் திருமணம் என்ற ஒன்று நடக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.கடமையின் பொருட்டு முரட்டுப் போர்வை போர்த்திக்கொண்டாகிவிட்டது.இந்த போர்வைக்குள்ளே ஒரு அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கித்தவிக்கும் குழந்தையுள்ளம் இருக்கிறது என்பதைப் பார்ப்போர் எப்படிப்புரிந்து கொள்வார்கள்.
             அன்னை மறைத்துவிட்டார் .பள்ளிக்கூடம் பார்த்திராத தந்தை.தம்பிக்கும் திருமணமாகி நான்கு வயதில் தம்பி மகன், அண்ணன் தம்பிகளுக்கு அவரவர்கள் பிரச்சினை; ,இந்நிலையில் யார் எனது மணம் பேசப்போகிறார்கள்?
                  அன்பால் ,அழகால்,நல்ல குண நலன்களால் என்னைத் தன் வசமாக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணை சந்திக்க முடியாவிட்டால் எனது திருமணம் கானல் நீர்தான்  என்று எழுதி வைத்தேன்
                எனது திருமணம் எனது பெற்றோர்களின் முடிவு என்றொரு பெண் காத்திருந்தாள் .மாப்பிள்ளை என்று என்னை  சந்தித்த அவளது பெற்றோர்கள் எனது ஊர் ,குடும்பம் உறவுகள் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இராணுவத்தலைமையகத்தில் எனது விபரங்களைப்பார்த்து  இவர்தான் தங்கள் பெண்ணுக்கு ஏற்ற மணமகன் என்று முடிவு செய்தார்கள்.
                         இதைத்தான் "விதி " என்பதோ.

            1974 ம் ஆண்டு தை பூசத்   திருநாளில் (Feb 06,1974) அனந்தலக்ஷிமி என்ற கற்பகத்  தரு எனது வாழ்க்கைத்துணைவியாகிறாள்.
                         இருளடைந்திருந்த எனது வாழ்க்கையில்  ஒளிவெள்ளம் பரவுகிறது.
                                                         வாழ்க்கை வாழ்வதற்கே

           கால வெள்ளம்  சில பசுஞ்சோலைகளைப் பாழிடமாக்கி விடுகிறது;சில பாழிடங்களைப் பசுஞ் சோலைகளாக்கி விடுகிறது.
                   எனது வாழ்க்கை எனும் பூஞ்சோலை பூத்துக் குலுங்குகிறது.எங்களது இல்லற சோலையில் இரு நறுமலர்களாக ஆண்குழந்தைகள் தோன்றுகிறார்கள்.




          எங்களது வாழ்க்கை நிறைவட்டமாகிறது.