சனி, 12 மே, 2018

                                               கல்லடிபட்ட கனிக்கொத்தை 
                                          சொல்லடியின்றி காப்பீரோ 
 கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்  பற்றி படித்துவரும் வாசக அன்பர்கள் அவரது பெற்றோர் மற்றும் உற்றம்  சுற்றம் பற்றியும் ஓரளவாவது அறிந்திருப்பீர்கள்.மலரும் நினைவாக அவற்றை சற்று பார்க்கலாம்.
     திருவாரூர் மாவட்டம்   சன்னாநல் லூர் கிராமத்தில் பாவாடை -தெய்வானை குடும்பம் சுற்று வட்டார மக்களிடையே சற்று அறிமுகமானது என்றால் மிகை இல்லை.காரணம் அவர்களது வாரிசுகள் அந்த காலத்தில் (1940-50 ) கல்வியின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து கொண்டிருந்தார்கள்.
                  ஐந்து  ஆண்பிள்ளைகள் இரண்டு பெண்கள் என்ற அந்த குடும்பத்தில் மூத்தவர் பசுபதி.1947 எஸ்.எஸ்.எல்.சி யில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியவர்.
              அடுத்தவர் ராமமூர்த்தி.ஒன்றாம் வகுப்பு முதல் அவர் படித்த M.Com படிப்பு வரை ஒரு வகுப்பில் கூட முதல் மாணவன் என்ற தகுதியை விட்டுக்கொடுக்கவில்லை.உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அவர் B.Com பாஸ் செய்தபோது பல்கலைக்கழகத்தின் 34 வருட பதிவைத் தகர்த்தெறிந்து புதிய மீண்டும் அழிக்கமுடியாத பதிவை ஏற்படுத்தினார்.
         மிகவும் ஏழை என்றில்லாமல் சுமாரான வசதியுடனிருந்த பெற்றோர்,தாத்தா  பாட்டி போன்றோர் இவ்வளவு அறிவு ஜீவியான குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும்என்று அவர்களுக்கு தோன் றவில்லை.
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்.மண் தான் மிகப்பெரும் சொத்து என்று சேமித்த கொஞ்சம் பணத்தை நிலம் வாங்குவதில் ஈடுபட்டார்கள்.அப்படியும் பெருமளவில் நிலம் வாங்கிக் குவித்துவிடவில்லை



                           பெற்றோர்.அப்பா பாவாடை -அம்மா தெய்வானை
.
                தாத்தா பாட்டி காலத்தில் வாங்கிய நிலமே அதிகம்.
      இந்நிலையில் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததினால் வரவும் செலவும் சரியாகப்போய்க்கொண்டிருந்தது போலும்.
               எஸ்.எஸ்.எல்.சி தாண்டிய மேற்படிப்பு என்று குடும்பத்தால் அனுப்பப்பட்டவர் அடுத்தவரான கணேசன் தான்.
               அப்பா பாவாடைக்கு வயது ஆகிக்கொண்டிருப்பதால் நிலபுலன்களை பாதுகாக்க ஒருவர் வீட்டோடு இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.குடும்பத்தலைவி கடுமையான காச நோயால் தாக்கப்பட்டார்.
               பெரிய கூட்டமாக இருந்த குடும்பம் சற்றே விலக ஆரம்பித்தது.காலமெனும் காட்டாறு கரைபுரண்டோட பிள்ளைகளும் பெண்களும் திருமணம் ஆகி  தங்கள் தங்களது குடும்பம் என்று அவரவர்களுக்குப் பிடித்தமான இடத்தில் வசதிகளுக்கேற்ப வாழ ஆரம்பித்தார்கள்.
               பெரியவர் பசுபதி கடலூரிலும்,மூத்த பெண் திருச்சியிலும்,ராமமூர்த்தி சென்னையிலும் கணேசன் சென்னையிலும் கலியமூர்த்தி பிறந்த ஊரின் பெருமை சேர்ப்பவராக சன்னாநல்லூரிலும்,அடுத்த பெண் திருச்சியிலும்,கடைசி பிள்ளை நடராசன் சென்னையிலும் என்று அந்த சன்னாநல்லூர் குடும்பம் கல்லடிபட்ட   கனிக்கொத்து போல் சிதறியது.
                   இதில் சென்னையில் செட்டிலான கணேசன் தேசீய அளவில் பெயரும் புகழும் பெற்றிருந்தார்.அவரது சாதனைகள் பற்றி அவ்வப்பொழுது ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள சிலர் சன்னாநல்லூர் சென்று விசாரித்துள்ளனர்.

               
                          
                                     
   அன்றைய குடியரசு தலைவர் வேங்கடராமனுக்கு இராணுவ மரியாதை தரும் கர்னல் கணேசன்.

                        அதிர்ச்சிதரும் விதமாக அப்படியொரு குடும்பம் சன்னாநல்லூரில் இல்லை என்று ஊர் மக்கள் சொல்லிவிட்டார்கள்.
                   இங்குதான் விதி விளையாட ஆரம்பித்தது.
            2010 ம் ஆண்டு ஒருநாள் கணேசன் திருச்சி எக்ஸ்பிரஸ் ட்ரைனில் பகல் வேளையில் பயணித்துக்கொண்டிருந்தார்.வண்டி விழுப்புரம் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.கூட்டமே இல்லாத பயணம்.வண்டிக்குள்ளேயே கணேசன் இங்கும் அங்குமாக நடந்து வேறு ஒரு இடத்தில் அமர்ந்தார். எதிரில் உட்கார்ந்திருந்தவருடன் பேச்சு ஆரம்பமானது.
               அந்தப் பெரியவர் இந்தியாவின் ஆய்வுக்குழு தலைவராக தென் துருவ ம் சென்றுவந்த கர்னல் கணேசன் பற்றி கேள்விப்பட்டு சன்னாநல்லூர் சென்று விசாரித்ததாகவும் அப்படி யாரும் அந்த ஊரில் இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.
                நீங்கள் இராணுவ அதிகாரி என்கிறீர்களே உங்களுக்கு கர்னல் கணேசனைத்தெரியுமா? என்கிறார்.
                   அப்படியா என்று வியந்த கணேசன் தனது இடத்திற்கு வந்து தான் எழு திய நூல் ஒன்றை எடுத்து அவருக்குப் பரிசாக அளித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தார்.
             1950-60 களில் பெயரோடும் புகழோடும் இருந்த பாவாடை-தெய்வானை குடும்பம் சன்னாநல்லூர் மக்களிடையே கிட்டத்தட்ட மறைந்துபோய்வி ட்டதாக கணேசன் உணர்ந்தார்.
               காலப்போக்கில் பசுபதி,ராமமூர்த்தி,கலியமூர்த்தி,நடராசன் என்ற சகோதரர்களும் வாலாம்பாள் என்ற மூத்த சகோதரியும் இப்பூவுலகை நீத்தார்கள்.
               ஆனால் கணேசன் பாவாடை -தெய்வானை குடும்பத்தின் பெயர் சன்னாநல்லூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அறிமுகமாகும் விதத்தில் அங்கு அகத்தூண்டுதல் பூங்கா அமைத்து இளைய சமுதாயம் சாதனை படைக்கும் விதத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.



                         பிரிந்த உறவுகள் அவ்வப்பொழுது அங்கு ஒன்று கூடி பிறந்த மண்ணின் பெருமை பேசுகின்றன.






                                             தங்கை சகுந்தலாவின் குடும்பம்.


     பெரிய அண்ணன்  பசுபதி அவர்களின்  இரண்டு மகள்கள் பிரேமா மற்றும் சாந்தி .
           
ஆனால் ஒரு வருத்தம் இப்படி உறவுகள் பிறந்தமண்ணை மிதிக்கும்போது யாருக்கும் தெரிவிப்பதில்லை.ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்த விதத்தில் செயல் பட்டாலும் ஒருங்கிணைந்த சக்தியாக முன்வந்தால் "பாவாடை- தெய்வானை "குடும்பம் உலக அளவுக்கு பேசப்படும் நிலையை உருவாக்கலாம் என்பது எனது கருத்து.
             கனிக்கொத்து சிதறி விட்டாலும் "சொல்லடி இன்றி '" இவர்களது வாரிசுகள் சரித்திரம் படைப்பார்கள்.
                   
                    காலம் வெல்லும்;கனவுகள் மெய்ப்படும் .

















   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக