வியாழன், 6 ஆகஸ்ட், 2020

                                      எங்கள் வீட்டு இளவரசி.....
                                             உங்கள் வீட்டு ராணியாக.....

                  கர்னல் கணேசன் அமைத்துள்ள "அகத்தூண்டுதல் பூங்காக்களில் ' சன்னாநல்லூர்  சிறப்பானது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.ஏனெனில் சன்னாநல்லூர் அவர் பிறந்த ஊர்.
          1940 போன்ற காலகட்டத்தில் மிகவும் சாதாரணமாக இருந்த கிராமம்.Boat Mail என்று சொல்லக்கூடிய சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சன்னாநல்லூர் மார்க்கமாக திருவாரூர் ,திருத்துறைப்பூ ண்டி,பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக செல்லும்.ரயில்வே ஸ்டேஷன் சன்னாநல்லூரிலிருந்தாலும்  அதற்கு நன்னிலம் என்றுதான் பெயர்.

                   இன்று சன்னாநல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள்அங்குள்ளபோஸ்டர்களில்முதலில்காண்பதுகணேசனது பெற்றோர்கள்.அடுத்து வரிசையாக "சன்னாநல்லூர் நறுமனச் சகதியில் விளைந்த சந்தன முலைகள்"என்ற தலைப்பினொடு கணேசனது உடன் பிறந்தோர் விபரங்கள் இருக்கும்.







                இதில் குறிப்பாக நான் பதிவிட விரும்புவது எனது தங்கையை பற்றியது.ஏழுபேர்கள் அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்ற பெரிய   குடும்பத்தில் நான் நடுவனாகப் பிறந்தேன்.

                              காலம் எங்களைத் தாலாட்டியது.இரு அண்ணன்  ஒரு அக்காள் திருமணமாகி சென்றுவிட்டனர்.நான்  S S L C படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் அன்னை கொடுங் காசநோய்க்கு ஆளாகி தஞ்சை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.வீட்டில் அப்பா,இரண்டு தம்பிகள்,ஒரு தங்கை இவர்களுடன் நான்.
                  இந்நிலையில் எனது S S L C தேர்வு எழுதும் நாள் வந்தது.காலை நான்கு மணியளவில் எழுந்து அன்றைய தேர்வுக்குப் படித்துவிட்டு வீட்டில் மற்றவர்களுக்காக சாதமும் ரசமும் செய்துவிட்டு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு ஓடுவேன்.வழியில்ஹோட்டலில்  மூன்று இட்லீ பொட்டலம் வாங்கி வழியில் அப்பா நின்றுகொண்டிருப்பார்.அதை வாங்கிக்கொண்டு ஓடுவேன்.
                                காலைத்தேர்வு எழுதி முடித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் உட்கார்ந்து இட்லீ சாப்பிட்டுவிட்டு,பகல் தேர்வுக்குப் படிப்பேன். மாலை ஐந்து மணிபோல் வீட்டுக்கு வந்து அடுத்த வேலைகள்  இருக்கும். 
               தாயின் அன்பும் கவனிப்பும் இன்றி வளரும் தம்பிதங்கை பற்றி கண்ணீர் வடிக்காத நாளே இல்லை எனலாம்,
                        காலம் எனும் காட்டாறு கரைபுரண்டோடியது .நான் இராணுவ அதிகாரியானேன் .தம்பிகளும் தங்கையும் வளர்ந்தார்கள்.அம்மா காசநோயோடு போராடிக்கொண்டு மருத்துவமனைக்கும்,வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்,
                       தாயின் காசநோய்,தங்கையின் திருமண ஏற்பாடுகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது,மூத்த அண்ணன் மிகவும் பாடுபட்டு தங்கையின் திருமணத்தை முடிவு செய்தார்,
                      திருமணம் கடலூரில் நடக்கவிருந்தது,உடல் நிலை காரணமாக அம்மா வரமுடியவில்லை,மேகலாயா வில் பணியிலிருந்த நான் இரண்டுமாத விடுமுறையில் வந்து திருமண ஏற்பாடுகளில் அண்ணனுக்கு உதவியாக இருந்தேன்,
                 திருமணம் முடிந்து அன்று மாலையே மணமக்கள் மாப்பிள்ளையின் ஊருக்குப் புறப்பட்டார்கள்.அவர்களுடன் நானும் பெரிய அண்ணியும் சென்று வருவதாக ஏற்பாடு,
                 நல்ல விதமாக மாப்பிள்ளை வீட்டு வரவேற்பு இருந்தது,மறுநாள் காலை நானும் அண்ணியும் திரும்புவதாகவும் நாலைந்து நாள் சென்று நான் மட்டும் வந்து மணமக்களை அழைத்துப் போவதாகவும் முடிவானது,
                        மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டு தங்கையிடம் போய்வருகிறேன் என்று சொல்ல முனைந்தேன்,
                    
                        தங்கை என்காலில்  விழுந்தாள் ,ஏனென்று தெரியாமல் நான் கேவிக்கேவி அழ ஆரம்பித்தேன்,கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது,"ஐயோ ,தாயிருந்தும் இல்லாதவளாக வளர்ந்த என் தங்கை ஒரு வீட்டு மருமகளாக,முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் மனைவியாக எப்படி வாழப்போகிறாளோ ? என்று என் உடம்பெல்லாம் நடுங்கியது.
                  மாப்பிள்ளையின் கைகளைப்பிடித்துக்கொண்டு தானே தனக்குத் தலைவிதியாய் வளர்ந்தஎங்கள்   வீட்டு இளவரசி இன்று உங்கள் வீட்டு மருமகள்.அவள் உலகம் புரியாத சிறு பெண்.தயவு செய்து கருணையோடு  கவனித்துக் கொள்ளுங்கள் என்று கண்ணீருடன் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
                   அது நடந்தது 1969.இன்று 2020 ல் நினைத்துப் பார்க்கும்போது  எங்கள்  வீட்டு இளவரசி அவர்கள் வீட்டு ராணியாக இருந்தாளோ இல்லையோ ,ஆனால் அற்புதமானக் குடும்பத்தலைவியாக இருக்கிறாள் என்று காலம் அடையாளம் காட்டுகிறது.
                          இரண்டு பிள்ளைகள்,இரண்டு பெண்கள் என்று குடும்பம் பெறுக,மாப்பிள்ளை தலைமைப்பொறியாளராக ஒய்வு பெற்றார்.குழந்தைகளில் மூவர் பொறியாளர்கள் ஒருவர் மருத்துவர் என்றாகி எல்லோரும் 
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
                     இரண்டு அண்ணன்கள் இரண்டு தம்பிகள் ஒரு அக்காள் என்று
 ஐவரைக் கால வெள்ளம் அடித்துச்செல்ல நான் மட்டுமே எங்கள் இளவரசியின்  ஆட்சியை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
                         எப்போழுதாவது  பிறந்த மண் நினைவு வந்தால் அவர்கள் குடும்பத்தோடு வந்து  சன்னாநல்லூர் மண்ணை உலகறியச்செய்த அண்ணன் அமைத்துள்ள அகத்தூண்டுதல் பூங்காவில் இளப்பபாறிச் செல்கிறார்கள்.

                                         வாழ்க ! வளமுடன் ! ! !.
  
                    
















   



2 கருத்துகள்: