உருவமற்ற குரல்.........2.
A VOICE WITHOUT A FORM.
பதினைந்து வயதில் முதல் முறையாக கணேசன் தனித்த வாழ்க்கையாக கல்லூரி விடுதியில் தங்கினார்.1958 முதல் 1961 வரையிலான மூன்றாண்டுகள்.தன்னைப்பற்றியும் தனது எதிர்கால வாழ்க்கை பற்றியும் சிந்தித்த காலமது.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கானாடுகாத்தான் செட்டிநாட்டு அரசர்கள் என்று புகழப்படும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் பிறந்த ஊர்.அரச பரம்பரைக்கே உரித்தான படாடோபங்கள் அந்த செம்மண் பூமியில் அவ்வளவாக சிறக்கவில்லையென்றாலும் நாலு அடுக்கு கட்டிடங்கள் மிகப்பெரிய ,ஆழமான குளங்கள் என்று பரந்திருந்தது செட்டிநாடு.
கணேசன் ஒரு சிறிய பெட்டி,ஜமுக்காளம் இரண்டு மூன்று மாற்றுத்துணிகள் ,பத்துப்பதினைந்து ரூபாய் என்று தனது ஆஸ்திகளுடன் தனது கல்லூரி வாழ்க்கையை 1958 ம் ஆண்டு சூன் மாத வாக்கில் ஆரம்பித்தார்.
அந்த காலகட்டத்தில்தான் மணிவண்ணனின் (தீபம் -பார்த்தசாரதி )"குறிஞ்சி மலர் "தொடராக கல்கியில் வந்துகொண்டிருந்தது.அதன் கதாநாயகன் அரவிந்தனின் பாத்திர அமைப்பு கணேசனை மிகவும் கவர்ந்தது.
மாணவர் விடுதியில் கல்லூரி பாடங்கள் மட்டும் படித்துக்கொண்டு மற்றநேரங்களில் ஊர் சுற்றவும் கதைபேசியும் பொழுதுபோக்கும் மாணவர்களிடையே இவர் வித்தியாசமானவராக உருவெடுக்க ஆரம்பித்தார்.
1961 மார்ச் அவரது இறுதித்தேர்வு வித்தியாசமான முறையில் வெளியானது.உண்மையும் நேர்மையும் நல்ல உடல் உழைப்பும் கொண்ட இளைஞனாக அவர் கல்லூரியிலிருந்து வெளிவந்தார்.மூன்று ஆண்டுகளும் அரசாங்க உதவித்தொகை கிடைத்ததால் அவரது படிப்பு கிட்ட தட்ட இலவசமாகவே முடிந்தது.ஏராளமான வேலை வாய்ப்புகள் வீடு தேடி வந்தன. அண்ணனின் அறிவுரையின்படி பொதுப்பணி துறையை தேர்ந்தெடுத்து. 15 Aug 1961 ல் அவர் பட்டுக்கோட்டையில் வேலையில் சேர்ந்தார்.
பட்டுக்கோட்டை,ஆவுடையார்கோயில்,பேரளம் ,கொரடாச்சேரி என்று இரண்டு வருடங்களில் நாலைந்து இடங்கள் மாறி தஞ்சாவூருக்கு அருகில் மெலட்டூர் என்ற இடத்தில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படவிருந்த அணைக்கட்டு வேலைக்கு சிறப்பு பொறியாளராக மாற்றம் பெற்றார்.
அக்ட்டோபர் -நவம்பர் மாதங்களில் ஆற்று நீர்வரத்து மூடப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது.எந்தவித பிரச்சினையுமில்லாமல் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வேலை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது.சுமார் 40,000 மூட்டை சிமென்ட் உபயோகப்படுத்தவேண்டிய இடத்தில் 2000-2500 மூட்டைக்கள்போல் மீந்துவிட்டது.
மீந்த சிமென்ட் கணக்குப்பிரகாரம் தனக்கு சேர வேண்டியது என்று ஒப்பந்தக்காரர் வாதிட்டார்.சிமென்ட் வேலைக்குத்தானே தவிர உங்களுக்கு இல்லை என்று கணேசன் எதிர் வாதமிட்டார்.ஆனால் ஒப்பந்தக்காரர் சிமென்ட் கொட்டகையை உடைத்து சிமென்டை எடுத்துக்கொண்டார்.பலவிதமான விசாரணை ஆரம்பமானது.முடிவில் வேலை சிறப்பாக முடிக்கப்பட்டது என்ற பாராட்டும் இது ஒப்பந்த வேலை என்பதால் லாப நஷ்ட்டம் ஒப்பந்தக்காரரையே சேரும் என்பதால் கணக்குப்படியான சிமெண்ட் ஒப்பந்தக்காரருக்கே உரியது என்றும் முடிவானது.
கணேசன் மிகவும் மனம் வெறுத்துப்போனார்.ஆற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டிய நேரம் வந்தது.இரண்டு ரூபாய் நோட்டு கட்டு (ரூ.200 )
வாங்கிவந்து ரூபாய் தாள்களை பொங்கிப் பெருகிஓடும் ஆற்று நீரில் எறிந்துவிட்டு அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
இவருடைய ராஜினாமாவை உயர் அதிகாரி ஏற்காமல் இந்திய-சீனா 1962 போரினால் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவம் பெருமளவில் விரிவுபடுத்தப்படுவதாகவும் தகுதியுள்ள இளம் மத்திய மாநில அதிகாரிகள் இராணுவத்தில் தாற்காலிகமாகப் பணிபுரிய அழைக்கப்படுவதால் நீங்கள் ஏன் ஒரு இராணுவ அதிகாரியாகக்கூடாது என்கிறார்.
புற உலகில் வீசி எறியப்படும் தீப்பொறிகள் ஒன்றிரண்டு பற்றி எரிய ஆரம்பிக்கிறது.
கணேசன் கரும்பச்சை சீருடை அணிகிறார்.
உருவமற்ற குரல் ஒலிக்க ஆரம்பிக்கிறது.
அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி.
இராணுவ அதிகாரிகளுக்கானப் பயிற்சிஉத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் என்ற இடத்தில்தான் நடந்துகொண்டிருந்தது.ஆனால் இராணுவம் பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டதாலும் உடனடியாக அதிகாரிகள் தேவைப்பட்டதாலும் இரண்டுவருட பயிற்சி ஆறு மாதங்களாகக் குறைத்ததோடில்லாமல் பூனா மற்றும் சென்னையில் அவசரகாலப் பயிற்சிப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கணேசன் பூனாவில் அவசரகால அதிகாரிகள் பயிற்சி எண் 8 என்ற பயிற்சி அணியில் 9 அக்டோபர் 1963 ல் சேர்ந்தார் .
ஆரம்ப கால இராணுவப்பயிற்சி உடற்பயிச்சியை மையமாகக்கொண்டது.இவைகளில் கணேசன் ஒப்புமையில்லாமல் உயர் நிலையில் இருந்தார்.பெரும்பாலான இராணுவ ஆயுதப்பயிற்சிகள் அதிகாரிகளல்லாத வர்களால் எடுக்கப்பட்டதால் அவை ஹிந்தியிலேயே இருந்தன.அவ்வளவாக ஹிந்தி பயிற்சி இல்லாததால் அவற்றில் சுமாராகத்தான்கணேசன் பிரகாசிக்க முடிந்தது.
மொத்தத்தில் ஆறு மாதப் பயிற்சிக்குப்பின் அவர் 400 பேரில் 47 வதாக வந்து Atheletics Blue என்ற சிறப்பும் பெற்று வெளிவந்தார்.03 May 1964 அன்று அவர் இந்திய இராணுவத்தில் அதிகார வரிசையின் முதல் படியான
2 L/t என்ற பதவியில் அமர்ந்தார்.
சீருடை தரித்த சிங்கம் வளர ஆரம்பித்தது.
இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் கணேசன் அதிகாரியானார்.சுமார் இருபது விதமானப் படைப்பிரிவுகளில் பொறியாளர் படைப்பிரிவு போரிடும் வல்லமையும்,பொறியாளர் திறமையும் ஒருங்கே பெற்றது.
பூனாவில் உள்ள college of Military Engineering என்ற கல்லூரி தலைமை இடம் போன்றது.அங்கு மூன்று மாத கால அறிமுகப்பயிற்சிக்குப்பின் கணேசன் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
படைப்பிரிவு எங்கிருக்கிறது என்பது தெரியாமலேயே பதினைந்து நாட்கள் விடுமுறையில் சென்னை வந்தார்.சென்ட்ரல் ரயில் நிலையித்தில் டனக்பூர் ரயில்வே ஸ்டேஷன் எங்கிருக்கிறது என்று விசாரித்தபொழுது அவர்கள் உத்திரப்பிரதேச எல்லையில் ஒரு இடத்தைக் காண்பித்தார்கள்.
அதைப்பார்த்தவுடன் மனதில் பகீர் என்ற பயம் கவ்வியது.வீட்டுக்கு வந்தநாள்முதல் ஊரையும் உறவுகளையும் இனி என்று காண்பேனோ என்ற விளக்கிச்சொல்லமுடியாத வருத்தமும் வேதனையும் மனதில் இருந்துகொண்டே இருந்தது.முடிவாக ஊருக்குப்புறப்படும் நாள் வந்தது.இரவு பத்து மணிக்கு ரயில்.அம்மாவையும் அப்பாவையும் பூஜை அறையில் ஒன்றாக நிற்கவைத்து வணங்கினார் கணேசன்.போய் வாப்பா என்றார்கள் பெற்றோர்கள்.தாங்கமுடியாத சோகம் மனதைக்கவ்வ கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டார் கணேசன்.இத்தனைமுறை சென்ற பொழுதெல்லாம் தைரியமாகப் போய்வந்த நீ இப்பொழுது ஏன்டா அழுகிறாய் என்கிறார்கள்.கல்வியறிவும் வெளிஉலக நடப்பும் அறியாதவர்கள்.அவர்களுக்கு என்ன விளக்கம் சொல்லமுடியும்.கணேசன் பிறந்த மண்ணைப் பிரிந்தார்..
சுமார் 250 படை வீரர்களடங்கிய ஒரு பிரிவுக்கு கம்பெனி என்று பெயர்.இவை ஒட்டுமொத்தமாக இடம் விட்டு இடம் மாறி இந்தியத்திருநாட்டின் பலபகுதிகளிலும் பணியாற்றக்கூடியது.44 Field Park Company என்ற படைப்பிரிவில் கணேசன் தனது இராணுவப்பணியைத் துவக்கினார்.
இந்தியத்திருநாட்டின் எல்லைப்புறங்களில் அவர் பாதம் பதிய ஆரம்பித்தது.முதன்முதல் உத்திரப்பிரதேசம்,நேபாளம், திபெத் மூன்றும் சந்திக்கும் பித்தோராகாட்- டார்ச்சுலா என்ற என்ற மலைப்பிரதேசத்தில் அவர் பணி ஆரம்பமானது.
மீண்டும் ஒலிக்கும்.........
சிலருடைய வாழ்வினை நாம் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். அவர்களில் இவர் முக்கியமான இடத்தைப் பெறுகிறார். ஐயாவை அறிவேன்.
பதிலளிநீக்கு