செவ்வாய், 9 ஏப்ரல், 2019

                                                யாருக்காக அழுதேன்    ?
                     
                 மனித மனத்தின் வெளிப்பாடுகளில் கண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.சொல்லால்  விளக்கமுடியாத உணர்வுகளை கண்ணீர் வெளிப்படுத்திவிடும்.

           நான் கண்ணீர் விட்ட நாட்களைப்பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.......கிராமத்தில் விவசாய குடும்பத்தில் அண்ணன் ,தம்பி ,அக்காள் ,தங்கை என ஏழு பேர்களுக்கிடையில் பிறந்து வளர்ந்ததால் சண்டை சச்சரவுகளுக்கு குறை வில்லை.



                 
                         நாலைந்து வயது சிறுவனாக இருக்கையில் பாட்டி கூப்பிட்டு ஓடிப்போய் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் அப்பா,அம்மாவிடம் தாத்தா இறந்து போய்விட்டார் என்று  சொல்லி அழைத்து வா என்கிறார்.ஒரே ஓட்டமாக வாய்க்கால்,வரப்புகள் வயல்கள் என்று ஓடி அவர்களை அழைத்துக்  கொண்டு வழியில் கொஞ்சம் தர்ப்பையையும் ( நாணல் )பறித்துக் கொண்டு வந்தேன்.தாத்தாவின் காரியம் முடிந்தது.யாரும் பெரிதாக அழுது புரளவில்லை.

                சில நாட்கள் சென்று உடல் நலமில்லாமல் இருந்த பாட்டியிடம் அம்மா அழைத்துச்சென்று,அத்தை,உன்  பேரனை மிகவும் வாலுத்தனமான இவனை ஆசிர்வதியுங்கள்  என்கிறார்.வீட்டில் எப்பொழும் ஆடம் பிடிப்பதால் ,பாட்டியிடம்,அப்பாவிடம் நிறைய அடிவாங்கியிருக்கிறேன்.

                 பாட்டி,"புத்தியாய் இருந்து பிழைத்துக்கொள் " என்கிறார்.சில வினாடிகளில் இறந்துபோய்விட்டார்.அப்பொழுதும் வேடிக்கை பார்த்தேனே யொழிய பெரிதாக அழவில்லை.

                     1958 March S S L C  தேர்வு சமயத்தில் அம்மா தீராத காச நோய் காரணமாக தஞ்சாவூரில் மருத்துவ மனையிலிருந்தார்.வீட்டில் நானும் இரண்டு தம்பிகள் ஒரு தங்கை மற்றும் அப்பா.

                    காலை 4.00 மணிக்கு எழுந்து சாதமும் ரசமும் செய்துவிட்டு காலைத்தேர்வுக்குப் படித்துவிட்டு  3.கி.மீ.தூரத்திலிருக்கும் நன்னிலம் உயர்நிலைப் பள்ளிக்கு ஓடுவேன்.வழியில் அப்பா ஹோட்டலில்  இட்லி பொட்டலம் வாங்கிக் கொடுப்பார்.

                     காலைத்தேர்வு எழுதிவிட்டு பள்ளிக்குப் பின்னாலிருக்கும் மதுவனேஸ்வரர் கோவிலுக்குப்போய் தனிமையி லமர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு மதிய  தேர்வுக்குப் படிப்பேன்.அப்பொழும் கூட தன்னிறக்கம் கொண்டு அழவில்லை.

          S S L C தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் அது பெரிதாக என்னைப் பாதிக்கவில்லை.மற்ற மாணவர்கள் மேற்படிப்புக்கு ஓடிக்கொண்டிருக்கையில் நான் அமைதியாக வீடு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்,சில நாட்களில் அண்ணன் வந்து T C ,S S L C Book வாங்கி வந்தாயா என்று கேட்டபிறகே அவற்றை வாங்கி வந்தேன்.

                               அண்ணனின் வழிகாட்டலில் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னீகில் சேர்ந்து மூன்றாண்டுகால ஹாஸ்டல் வாழ்வு  முடிந்து பட்டுக்கோட்டையில் P W D Superviser  வேலையில் சேர்ந்தேன் .

                          இரண்டாண்டுகளில் மெலட்டூர் வெட்டாற்றின் குறுக்கே Regulator கட்டும் வேலைக்கு வந்தேன் .பணம் சம்பாதிக்கவேண்டும் பெரிய வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசை சிறிதும் இல்லாததாலும் லஞ்சம்,பொய்,திருட்டு போன்றவற்றை வெறுத்ததாலும் வாங்கிய சம்பளத்தை வெட்டாற்றில் வீசியெறிந்துவிட்டு P W D வேலையை யாரையும் கேட்காமலேயே ராஜினாமா செய்தேன்.

                            ராஜினாமாவை ஏற்காத உயரதிகாரி நாட்டின் அவசரகால நிலையை நினைவுபடுத்தி  " நீ ஏன் ஒரு இராணுவ அதிகாரியாகக்கூடாது"
என்ற  கேள்வியை முன் வைத்தார்.

                    இராணுவத்தேர்வுகள்,பின்னர் பயிற்சிகள் முடிந்து இந்திய -திபெத் -நேபாள எல்லையில் படைப்பிரிவில் சேரும் உத்திரவுடன் சன்னாநல்லூர் வந்தேன்.பதினைந்து நாட்கள் விடுமுறை முடிந்து 26 August 1964  இரவு பத்து மணிக்கு சன்னாநல்லூரில் ரயிலேறவேண்டும்.

                    தாங்கமுடியாத சோகம் மனதைக் கவ்வ ஆரம்பித்தது.வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றினேன்.அம்மா அப்பாவை நிற்கவைத்து காலில் வீழ்ந்து வணங்கினேன்.எழுந்து நிற்கையில் கேவிக் கேவி கதற ஆரம்பித்தேன்.



                                 ஏன் அழுதேன் ? யாருக்காக அழுதேன் ? என்ன நினைத்து அழுதேன் ? என்று இன்று சுமார் 55 வருடங்களான பின்னும்  எனக்குப் புரியவில்லை.

                       இராணுவ வாழ்வின் பல மனதைக் கசக்கிப் பிழியும் நினைவுகளில்
1970 ல்  அம்மா இறந்ததையும்  நான் காணவில்லை;1979 ல் அப்பா இறந்ததையும்  நான் காணவில்லை.

                  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
                  அவ்வையின் பொன்மொழி  வீணா
                  ஆண்டவன்போலே நீதியைப் புகன்றாள்
                   அனுபவமே இதுதானா  ?
       
              வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.அனந்தலக்ஷிமி என்ற பெண் கடவுளின் பரிசாக என் வாழ்க்கைத் துணைவியானார்.

             காலப்போக்கில் அரவிந்தன்,கார்த்திக் என்ற இரு அற்புதமான ஆண்குழந்தைகள் பிறந்தனர்.

                     பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் நான் சன்னாநல்லூரில் "அகத்தூண்டுதல் பூங்கா "  அமைத்து ஒரு மனிதனின் செயலாக்கத்தை எந்த புற காரணங்களும் தடுக்க முடியாது என்று உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறேன்.
 

                  சன்னாநல்லூரும் அகத்தூண்டுதல் பூங்காவின் செயல்பாடுகளும் வருங்காலத்தில் சரித்திரம் படைக்கும் என்று எதிர் பார்ப்போம்.
                         




















1 கருத்து:

  1. உங்களின் பணிகளும், தன்னலமற்ற சேவையும் உண்மையாக வரலாற்றில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு